பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. பள்ளிக்கல்வித்துறை ஆர்டர்!
சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
விடைத்தாள் திருத்தும்போது செல்போன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், பணியின் இடையே வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. தமிழ் மொழித் தாள், ஆங்கிலம், இயற்பியல், பொருளாதாரம், கணினி அறிவியல், கணிதம், விலங்கியல், வணிகவியல், நர்சிங் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. பிளஸ் 2 பொதுத் தேர்வு ஏப்ரல் 3ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

செல்போன் பயன்படுத்தக்கூடாது
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்வு விடைத்தாள்களை திருத்தும்போது செல்போன் பயன்படுத்துவதால் ஆசிரியர்களின் கவனம் சிதறக்கூடும் என்பதால், செல்போனுக்கு அனுமதி இல்லை என ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
மேலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது, விடைத்தாள் திருத்தும்போது செல்போன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையின்றி வெளியே செல்லக்கூடாது
மேலும், பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காலதாமதமாக வருவது, பணியின் இடையே அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு உண்பதற்காக விடைத்தாள் திருத்தும் மையத்தை விட்டு வீட்டுக்கோ, உணவகத்திற்கோ சென்று வருவது சிறந்த நடத்தையல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications