சிறுவர்கள் ஷார்ட்ஸ் - ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தடை.. உத்தர பிரதேசத்தில் அதிரடி உத்தரவு.. பின்னணி
லக்னோ: 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமிகள் பொது இடங்களில் ஷார்ட்ஸ் அணியவும், ஸ்மார்ட்போன் பயன்படுத்தவும் தடை விதித்து உத்தர பிரதேச மாநிலம் ‛காப்' பஞ்சாயத்து தலைவர்கள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதேபோல் திருமண மண்டபங்களில் திருமணம் நடத்த கூடாது. வீடுகளில் தான் திருமணம் நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பாக்வத் மாவட்டத்தில் ‛காப்' பஞ்சாயத்து என்ற நடைமுறை உள்ளது. ‛காப்' பஞ்சாயத்து என்பது பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெரியவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் கிராம மேம்பாடு, பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது விவாதிப்பது வழக்கம்.

இந்நிலையில் தான் நேற்று ‛காப்' பஞ்சாயத்து நடந்தது. அதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி பொது இடங்களில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமிகள் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதற்கும், ஷார்ட்ஸ் உடை அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் ஷார்ட்ஸ் அணிவது என்பது சமூக நெறிகளுக்கு எதிரானது என்றும், சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. என்று பஞ்சாயத்து சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை ஒவ்வொரு பெற்றோர்களும் உறுதி செய்ய வேண்டும். அதேவேளையில், பொது இடங்களில் சிறுவர்கள் குர்தா-பைஜாமாவும், சிறுமிகள் சல்வார்-குர்தாவும் அணிய வேண்டும் என்றும் பஞ்சாயத்து சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ‛காப்' பஞ்சாயத்து உறுப்பினர்கள் சார்பில், ‛‛சிறுவர், சிறுமிகள் அனைவரும் சிறுவயதியிலேயே இருந்து ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். வீடுகளுக்குள் சிறுவர், சிறுமிகள் அணியும் உடைகளுக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பொது இடங்களில் கண்ணியமான ஆடைகளை அணிவது முக்கியம்.
அதேபோல் குழந்தைகள் கல்வி சார்ந்த விஷயங்களுக்காக செல்போன்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் சில குழந்தைகள் செல்போன்களில் மூழ்கி விடுகின்றனர். இது அவர்களின் படிப்பை பாதிக்கிறது. இதனால் 18 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் கொடுக்க கூடாது என்று கூறியுள்ளோம்'' என்றனர்.
அதேபோல் திருமண மண்டபங்களில் திருமணங்கள் நடத்துவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. திருமணங்கள் வீடுகளில் தான் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குடும்ப உறவுகள் பலப்படும். மாறாக திருமண மண்டபங்களில் திருமணங்கள் நடத்துவது என்பது உறவுகளை பலவீனப்படுத்தும் என்று தெரிவித்தனர்.
இதுபற்றி ‛காப்' பஞ்சாயத்தை சேர்ந்த சவுத்ரி பிரிஜ்பால் சிங், சுபாஷ் சவுத்ரி ஆகியோர் கூறுகையில், ‛‛இந்த முடிவுகளை செயல்படுத்த கிராமங்களுக்குச் சென்று பொறுப்பான உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் செய்ய உள்ளோம். அதேபால் பிற ‛காப்' சபைகளை தொடர்பு கொண்டு இதனை உத்தர பிரதேசம் முழுவதும் விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications