அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு..அகவிலைப்படி மற்றும் ஓய்வூதிய நிவாரணம் 3% உயர்வு! வெளியான அறிவிப்பு
டெல்லி: உத்தரகாண்ட் மாநில அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப் பெரிய தீபாவளி பரிசை வழங்கியுள்ளது. மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்தபடி, அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இதனால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதன் மூலம், தீபாவளி பண்டிகை காலத்தில் அவர்களின் நிதி நிலைமேம்படும் என்கிறது அம்மாநில அரசு.
அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டு, அக்டோபர் மாத சம்பளத்துடன் நவம்பர் மாதம் வழங்கப்பட உள்ளது. இந்த முடிவு மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு நிதியளிக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஊழியர்களின் சம்பளத்தை கணிசமாக அதிகரிக்க முடியும் என்பதோடு, பண்டிகைச் செலவுகளைச் சமாளிப்பதற்கும் இது உதவும். அகவிலைப்படி ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தைப் பொறுத்து வழங்கப்படுகிறது.

உதாரணமாக, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.60,000 என்றால், முன்பு 55 சதவீத அகவிலைப்படி (DA) எனில் ரூ.33,000 அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. புதிய உயர்வு 58 சதவீதமாக அமல்படுத்தப்பட்ட பின்னர், அகவிலைப்படி ரூ.34,800 ஆக உயர்ந்து, சம்பளம் மாதத்திற்கு ரூ.1,800 அதிகரிக்கும். இந்த உத்தரகாண்ட் முடிவு மட்டுமல்லாமல், பல மாநிலங்களும் தீபாவளிக்கு முன்பே ஊழியர்களுக்கான நிவாரணத்தை அறிவித்துள்ளன. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அக்டோபர் 17ஆம் தேதி மாநில ஊழியர்களின் அகவிலைப்படியை 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தினார்.
ஒடிசா மாநில அரசு 3 சதவீத உயர்வு அறிவித்தது. கர்நாடக அரசு 2 சதவீத உயர்வு செய்து, 14.25 சதவீதத்தில் கொண்டு வந்துள்ளது. இதேபோல் குஜராத், பீகார், ஜார்கண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களும் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளன. இந்த உயர்வு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிதி நிலைமேம்படுவதோடு, மாநில பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக அகவிலைப்படி நுகர்வோரை ஊக்குவிக்கும் என்பதால் சந்தையில் பணப்போக்கு அதிகரித்து, பொருளாதார நடவடிக்கைகளும் துரிதமாகும். உத்தரகாண்ட் அரசு ஊழியர்களுக்கான இந்த 3 சதவீத அகவிலைப்படி உயர்வு, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய நிதிசார் பரிசாக இருக்கும். அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்பதோடு, பண்டிகைச் செலவுகளிலிருந்து நிவாரணம் வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்பது நிச்சயம்.












Click it and Unblock the Notifications