மானிய விலையில் காலி நிலங்களில் வீட்டு மனை.. நகர்ப்புற வாழ்விட வாரியம் ஒதுக்காத 40000 மனைகள்?
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட பகுதிகளில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனைகள் ஒதுக்கப்படாமல் இருப்பதாக சோஷியல் மீடியாக்களில் செய்திகள் கசிந்தவண்ணம் உள்ளது.. இந்நிலையில், நீண்ட காலமாக முடங்கியுள்ள இந்த மனைகள் ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.. என்ன நடந்தது?
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டம் என்பது, நகரங்களில் வசிக்கும் குறைந்த மற்றும் நடுத்தர வருமான மக்களுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்க உருவாக்கப்பட்ட அரசு திட்டமாகும்...

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டம்
குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை ஒழுங்கமைந்த குடியிருப்புகளுக்கு மாற்றுவதும் இதனுடைய முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தின் மூலம் வீடு இல்லாதவர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டி வழங்கப்படுகின்றன. குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் போன்ற வசதிகள் இதில் கட்டாயமாக இடம்பெறும்.
முக்கியமாக நகர வளர்ச்சியால் பாதிக்கப்படும் ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது இதன் நோக்கமாகும்... அரசு மானியத்துடன் குறைந்த செலவில் வீடுகள் வழங்கப்படுகின்றன. பெண்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மக்கள் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் வாழ வழி செய்வதே இந்த திட்டத்தின் அடிப்படை கருத்தாகும்.
காலி நிலங்களில் மானிய விலையில் வீட்டு மனை
நகரங்களில் ஒழுங்கற்ற குடியிருப்புகளை குறைப்பதிலும் இது உதவுகிறது... நகர்ப்புற ஏழை மக்களுக்கு நிலையான வாழ்விடத்தை உருவாக்கும் மனிதநேய முயற்சியாகவே இந்த திட்டம் பார்க்கப்படுகிறது..
சுருக்கமாக சொல்லப்போனால் நகர்ப்புற பகுதிகளில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் காலி நிலங்களை கண்டறிந்து, அதில் ஏழை மற்றும் குறைந்த வருமான மக்களுக்கு மானிய விலையில் வீடுகள் அல்லது வீட்டு மனைகள் வழங்குவதுதான் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பணியாகும்.. இதற்காகவே கடந்த 1979ல் ஆண்டு சென்னை நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது.
வீட்டுமனைகள்
இந்த திட்டத்தின் கீழ், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மொத்தம் 257 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. பிறகு 1989ம் ஆண்டு தமிழகம் முழுவதும் நகர்ப்புற ஏழை மக்களுக்கான வீட்டு வசதி திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், தமிழக நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது...
இந்த திட்டத்தில், மாநிலம் முழுவதும் 489 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. நகர்ப்புறங்களில் அரசு துறைகளுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லாத நிலங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை ஏழை மக்களுக்கு வீட்டு மனைகளாக ஒதுக்குவதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது.
இந்த திட்டங்களின் மூலம் மொத்தமாக 1.34 லட்சம் வீட்டு மனைகள் உருவாக்கப்பட்டன. இதில் 93 ஆயிரம் மனைகள் மக்களுக்கு ஒதுக்கப்பட்டு, இப்போது அந்த மனைகளில் மக்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். ஆனால், மீதமுள்ள 41 ஆயிரம் மனைகளை ஒதுக்கும் பணிகள் பல காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
வாரியம் சொல்வது என்ன
தற்போது, வாரியம் ஒதுக்கப்பட்ட 93 ஆயிரம் மனைகள் தொடர்பான பணிகளையே கவனித்து வருவதாகவும், இன்னும் ஒதுக்கப்படாத 41 ஆயிரம் மனைகள் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் சோஷியல் மீடியாவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது... இந்த மனைகள் தொடர்பான கோப்புகள் உயரதிகாரிகளின் பார்வைக்கே செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து வாரியம் தரப்பில் சொல்லும்போது, இந்த மனைகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்தால், வாரியத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.. அதேபோல நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு சொந்த வீடு கட்டுவதற்கான ஒரு பெரிய வாய்ப்பாக இது அமையும்.. எனவே சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இந்த விவகாரம் குறித்து உயரதிகாரிகள் உரிய முடிவு எடுப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications