வக்கிரவாதிகள் வாந்தி எடுப்பாங்க.. நீங்க கெத்தா நில்லுங்க! வைஷ்ணவிக்கு ஆதரவாக வந்த டாக்டர்.ஷர்மிளா!
சென்னை: தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகிய இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தொடர்ந்து விஜயை கடுமையாக அவர் விமர்சித்து வரும் நிலையில், தன்னை அவதூறாக சித்தரிக்கும் தவெகவினர் மீதும், விஜய் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளார் வைஷ்ணவி. இந்நிலையில் வைஷ்ணவிக்கு நடிகை ஷர்மிளா ஆதரவு தெரிவித்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த வைஷ்ணவி சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார். இன்ஸ்டா மூலம் பிரபலமான அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது சேவை வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் விஜய் கட்சி ஆரம்பித்ததும் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட்ட அவர் தான் செய்யும் பணிகள் தொடர்பாக வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். தொடர்ந்து அவருக்கு ஆதரவும் குவிந்தது. இந்த நிலையில் திடீரென தமிழக வெற்றிக்கழகத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் வைஷ்ணவி.

தான் அதிக அளவில் பிரபலமாக இருப்பதால் கட்சியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் தன்னை ஓரம் கட்டுவதாகவும். கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. கட்சியில் தான் பார்க்கும் வேலைகள் குறித்து சமூக வலைதளங்களில் பேசக்கூடாது, போஸ்ட் போடக்கூடாது என மிரட்டுகிறார்கள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து வைஷ்ணவி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் திமுகவில் சேர்ந்த பிறகு தன்னை தமிழக வெற்றி கழகத்தினர் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் விமர்சிப்பதாகவும், அதனை விஜய் தண்டிக்கவில்லை என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் வைஷ்ணவி. இந்த நிலையில் இன்று காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வைஷ்ணவி, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீதும், அக்கட்சி தொண்டர் மீதும் புகார் அளித்துள்ளார்.
அதில், தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து வெளியேறி முதல் தன்னை பற்றி தமிழக வெற்றிக் கழகத்தினர் சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும் அவதூறாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருவதாகவும், தனது புகைப்படங்களை மார்ஃபிங் செய்து பதிவிட்டு வருவதாக கூறியுள்ளார். கருத்தியல் ரீதியான கேள்விகளை முன் வைத்தால் அவதூறு கருத்துக்களை தமிழக வெற்றி கழகத்தினர் பரப்புவதாகவும், இது குறித்து விஜய் கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. எனவே விஜய் மீதும் தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
வைஷ்ணவி புகார் அளித்ததில் இருந்து சமூக வலைதளங்களில் அவர் மீதான தாக்குதல் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பிரபல நடிகையின் சமூக செயல்பாட்டாளருமான டாக்டர் ஷர்மிளா.
இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்," யாரையும் குறை சொல்லி பிரயோஜனம் இல்லை. துஷ்பிரயோகம் செய்பவர்களும், ட்ரோல் செய்பவர்களும் எல்லா அரசியல் கட்சிகளிலும் உண்டு.. இப்படிப்பட்ட வக்கிரமானவர்களை புறக்கணித்துவிட்டு முன்னேறுங்கள்.. அவர்களின் ஒரே நோக்கம் உங்களை மிரட்டுவது தான்.. நீங்கள் பயந்து அவர்களுக்கு அந்த மகிழ்ச்சியை கொடுக்காதீர்கள். இந்த வக்கிரவாதிகள் வாந்தி எடுப்பதை எல்லாம் நினைத்து வருத்தப்படாமல் சும்மா கெத்தா மனசுல பட்டதை தைரியமாக பதிவு பண்ணுங்க" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications