Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முருகனை அடுத்து மாரியம்மன் வழிபாட்டில் வள்ளி கும்மி! திடீர் புகழைடைய காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொங்கு வட்டாரங்களில் முருக வழிபாட்டை மையமாக வைத்து நடத்தப்பட்டு வந்த வள்ளிக் கும்மி, தென்மாவட்டங்களில் மாரியம்மன் வழிபாட்டை மையமாக வைத்து நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு காலத்தில் உழைக்கும் மக்களின் கலையாக இருந்தவைதான் நாட்டுப்புறப் பாடல்கள். இந்தப் பாடல்களில் பின் உள்ள கதைகள் உழைக்கும் மக்களின் கதைகளைப் பேசக் கூடியவை. அத்துடன் சமூக குழுக்களாக வாழும் மக்களின் கதைகளைப் பேசக் கூடியவை.

Valli Kummi in Mariamman worship

ஒவ்வொரு மாவட்டங்களுக்கு என்று தனித்தனியான நாட்டுப்புறப் பாடல்கள் உண்டு. வழக்காறுகள் உண்டு. அந்த வழக்காறுகளுக்கு உள்ளே ஒளிந்திருக்கும் பல கதைகள் புராணங்களை அடிப்படையாகக் கொண்டவை. சில மாவட்டங்களில் ஒப்பாரி பாடல்கள் உண்டு. சில மாவட்டங்களில் தெம்மாங்குப் பாடல்கள் எனத் தனி வகையாகப் பாடல்கள் உள்ளன.

வட தமிழ்நாட்டில் அரவான் பலியை மையமாக வைத்து பல்வேறு பாடல்கள், கதைகள் உள்ளன. கொங்குப் பகுதிகளில் அதைப்போல் அண்ணமார் கதைகளை மையமாக வைத்து கதைப்பாடல்கள் உண்டு. இதே பகுதிகளில் மிகப் பிரபலமாக உள்ள மற்றொரு நாட்டுப்புறப் பாடல் வடிவம் தான் வல்லிக் கும்மி.

Valli Kummi in Mariamman worship

கடந்த நவம்பர் மாதம் 2023 ஆண்டு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலு வள்ளிக் கும்மி நாட்டிய நிகழ்ச்சியின்போது, 'கல்யாணம் செய்துக்கிறோம், கவுண்டர் வீட்டுப் பையனையே...’ எனச் சத்தியம் வாங்கிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைப்போன்ற பாடல்கள் நிகழ்ச்சிகளுக்கு உள்ளாக மறைமுகமாக ஒளிந்துள்ள சங்கதிகள் என்ன என்று ஆராய்ந்தால், அது சொந்த சாதியின் பெருமையைத் தூக்கிப் பிடிப்பவையாக இருப்பதைப் பார்க்கலாம்.

இது ஏதோ புதியதாக இப்போது தொடங்கியவை அல்ல. முன்பு இனக் குழுக்களாக இருந்து அரங்கேறிய நிகழ்ச்சிக்குள் ஒரு கட்டத்தில் சாதிய அடையாளங்களை முன்வைக்கக் கூடிய அரசியல் கட்சிகள் கையில் எடுத்த பிறகு அதன் மீதாக அதிகப்படியான வெளிச்சம் விழ ஆரம்பித்துவிட்டது.

Valli Kummi in Mariamman worship

குறிப்பாக சமூக ஊடகங்கள் வந்த பிறகு, இதைப்போன்ற நிகழ்ச்சிகள் உடனடியாக குறிப்பிட்ட பகுதி மக்களைக் கடந்து பெருவாரியான மக்களைச் சென்றடையும் போது, அந்தப் பாடல்களில் இடையே அரங்கேற்றப்படும் சாதிய கட்டமைப்புக்குரிய முயற்சிகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன. விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன.

குறிப்பாகக் கொங்குப் பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வள்ளிக் கும்மி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அதே காலகட்டத்தில் சினிமா பாடல் வரிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வைரலாக அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டது.

அந்தக் குறிப்பிட்ட வீடியோவில் 'செவ்வந்தி பூ எடுத்தேன்’ என்ற பாடலில் நடுவில் சரணத்தில் வரும் 'ரோஜாவின் மின்னல்கள் உனதழகினை படம் வரைந்திட’ வரிகளுக்கு இளம் பெண் ஒருவர் செய்த குறும்பான சேட்டை பல லட்சம் மக்களைக் கவர்ந்தது.

அவர் யூடியூப்பில் ட்ரெண்ட் ஆனார். பலரும் அவரை யார் எனத் தேடத் தொடங்கினர். அதன்பின்னர் அந்தப் பெண் பெயர் சங்கீதா என்பதும் அவர் கோவையைச் சேர்ந்தவர் இல்லை, ஊட்டியைச் சேர்ந்தவர் என்றும் அவர் இளம் பெண் இல்லை, ஒரு குழந்தைக்குத் தாய் என்பதும் தெரிய வந்தது.

Valli Kummi in Mariamman worship

சங்கீதா அதன்பின் பல பேட்டிகளைக் கொடுத்தார். அவர் கொடுத்த பேட்டிகள் 6 லட்சம் 7 லட்சம் எனப் பார்வையாளர்களை ஈர்த்தது. அவருக்கு வள்ளிக் கும்மி தெரியும். ஆனால், அதன் உள்ளாக இருக்கும் கொங்கு சாதிய கட்டமைப்புகள் எதுவும் தெரியாது.

இதே காலகட்டத்தில் மற்றொரு பெண் ட்ரெண்ட் ஆனார். அவர் பெயர் இளவரசி. இவர் சினிமா பாட்டுச் செவந்தி பூ எடுத்தேன் பாடலால் பிரபலமாகவில்லை. மாறாக, 'செவ்வந்தி பூ எடுத்த முருகையா ஹோய்.. எங்கள் சிக்கல்களைத் தீர்த்திடுவாய் வேலய்யா.. ஹோய்..’ என்ற அஃமார்க் வள்ளிக் கும்மி பாடல் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். இவரின் பேட்டியையும் 6.5 லட்சம் மக்கள் தேடித் தேடிப் பார்த்தார்கள்.

கொங்கு வட்டாரங்களில் முருகப் பெருமானை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது வள்ளிக் கும்மி நடனம். அதாவது வள்ளி பிறந்தது வளர்ந்தது, பின்னர் முருகனைப் பார்த்து மணம் புரியும் வரை உள்ள கதையின் பாடல் வடிவம்தான் இந்த வள்ளிக் கும்மி.

Valli Kummi in Mariamman worship

கொங்கு மண்டலமாகக் கருதப்படும் ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த வழிபாடு மக்களிடம் உள்ளது. ஊர் திருவிழாக்களில் வெள்ளாளக் கவுண்டர்களில் உள்ள ஆண்கள் பச்சை தலைப்பாகை மற்றும் வெள்ளை சட்டை அணிந்தபடி, பெண்கள் மஞ்சள் பாவாடை அணிந்தபடி இந்த நடனத்தை ஆடி வருகின்றனர்.

இந்தக் கொங்குப் பகுதியில் உள்ள மங்கை வள்ளிக் கும்மி குழுவானது 6 மாவட்டங்களில் செயல்படுகின்றது. இக்குழு இதுவரை சுமார் 1000 கோயில் திருவிழாக்களை நடத்திக் கொடுத்துள்ளது இந்தக் குழுவின் குருநாதராக வெள்ளநத்தம் சண்முகசுந்தரம் உள்ளார்.

Valli Kummi in Mariamman worship

இந்த சண்முகசுந்தரம் சுற்றுவட்டாரத்தில் மிகப் பிரபலம். ஈஷா யோகா சிவராத்திரி நிகழ்ச்சிகளில் கூட இவரது குழு பங்கேற்று கலைநிகழ்ச்சி நடத்தி உள்ளது.

கொங்குப் பகுதியில் உள்ள கவுண்டர்கள் வள்ளிக் கும்மி ஆடி வருவதைப் போல மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் வேறு சாதியினர் ஆடி வருகின்றன. இந்தப் பகுதியில் உள்ள ஆண்டிபட்டியில், 'பொட்டிவண்டி கட்டி வர பொண்ணு தாளியும் கொண்டு வாரேன் கட்டிக்கிட்டா போதுமடி தங்கம் ரத்தினமே’ என்ற பாடல் மிகப் பிரபலமாக இருந்து வருகிறது.

மதுரையில் வேறு சாதியினர் ஆடினாலும் குழுவினர் உடுத்தும் உடை என்ன வோ கொங்குப் பகுதி மக்களைப் போலவே பச்சை மற்றும் வெள்ளையாகவே உள்ளது.

இந்தத் தென் மாவட்டங்களில் குறிப்பாக 17 அல்லது 18 ஆம் நூற்றாண்டுகளில் நாடார், சாம்பவர், வேடுவர், புலையர் எனப் பலர் வள்ளிக் கும்மி ஆடியதற்காக வட்டார பதிவுகள் கிடைத்துள்ளன.

கொங்குப் பகுதியில் முருகனை மையமாக வைத்து நடத்தப்படும் வள்ளிக் கும்மியானது தென்பகுதிகளில் மாரியம்மன் போன்ற சாமியை மையமாகக் கொண்டு காலங்காலமாக நிகழ்த்தப்பட்டுவருகின்றன.

மாரியம்மாளின் வழிபாட்டுப் பாடலாக 'தாளமா நெல்லெடுத்து தங்கரளி பூவெடுத்து’ என்ற பாடல் இருந்து வருகிறது.

எந்தச் சாதிய அமைப்பும் உள்ளே போகாதவரை இந்த நாட்டுப்புற வடிவங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அது தன் வழிபாட்டுச் சடங்கை மட்டுமே நோக்க மாகக் கொண்டு, உழைக்கும் மக்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்து வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+