4 மணி நேரத்தில் செல்லும் வந்தே பாரத்.. திருச்சி - சென்னை எவ்வளவு கட்டணம் தெரியுமா? முழு விவரம் இதோ!
சென்னை: இன்று பிரதமர் மோடி 9 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார். இதில் நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலும் அடங்கும். சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில் 3 மணி நேரம் 50 நிமிடங்களில் திருச்சியை வந்தடையும்.
ரயில் பயணிகளின் வசதியை மேம்படுத்த ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வந்தே பாரத் ரயில் சேவைகள் முதன் முதலாக டெல்லி - வாரணாசி இடையே இயக்கப்பட்டது. இந்த வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை பல்வேறு சொகுசு வசதிகளை கொண்ட ரயிலாக இருந்தது. இதனால், பயணிகளுக்கும் இந்த ரயில் மீதான ஆர்வம் அதிகரித்தது. தற்போது வரை நாட்டில் 25 வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கும் சென்னையில் இருந்து கோவைக்கும் என 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வந்தே பாரத் ரயிலில் ஒரு பெட்டியில் 2 எல்இடி டிவிகள், தானியங்கி கதவுகள், வைஃபை வசதிகள், பயோ டாய்லட்டுகள் என வசதிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சிறப்பான வசதிகள் இருந்தாலும் இதில் கட்டணம் சற்று அதிகமாக இருப்பதாக பயணிகள் மத்தியில் ஆதங்கம் இல்லாமலும் இல்லை. எனினும், வந்தே பாரத் ரயில்களை அதிக வழித்தடங்களில் இயக்க வேண்டும் என்றும் பயணிகள் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன்படி, சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி இந்த ரயில் சேவை உள்பட மேலும் 8 வந்தே பாரத் ரயில் சேவையை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி காணொலி வாயிலாக வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் தென் மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான சென்னை - நெல்லை இடையெயான வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியுள்ளது.
நேற்றே இந்த ரயிலில் பயணிப்பதற்கான முன்பதிவு தொடங்கியது. சில மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. நெல்லையிலிருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. மொத்தம் எட்டு பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் ஒரு பெட்டி எக்ஸிகியூட்டிவ், மற்ற 7 பெட்டிகள் சாதாரண ஏசி சேர் கார் இருக்கைகள் கொண்டது ஆகும்.
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சாதாரண ஏசி சேர் கார் கட்டணமாக ரூ.1610 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் முதல் வகுப்பு எக்சிகியூட்டிவ் பெட்டியில் ஒரு டிக்கெட் ரூ.3005 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு சாதாரண ஏசி சேர் கார் கட்டணமாக ரூ.1655 ஆகவும், எக்ஸ்கியூட்டிவ் சேர் கார் கட்டணம் ரூ.3055 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பயண நேரம்: பயண நேரத்தை பொறுத்தவரை சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வருவதற்கு 3 மணி நேரம் 50 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதேபோல் திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் செல்ல 3 மணி நேரம் 55 நிமிடங்கள் ஆகும். இதேபோல் திருச்சியில் இருந்து நெல்லைக்கு வருவதற்கு 3 மணி நேரம் 55 நிமிடங்களும், நெல்லையில் இருந்து திருச்சிக்கு வருவதற்குக்கு 3 மணி நேரம் 50 நிமிடங்களும் ஆகும்.
கட்டணம்: கட்டணத்தை பொறுத்தவரை சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வருவதற்கு சாதாரண ஏசி சேர் கார் பெட்டியில் உணவு இல்லாமல் ரூ.830 உம், உணவோடு சேர்த்து ரூ.1070வும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்வகுப்பு ஏசி சேர் கார் பெட்டியில் உணவு இல்லாமல் 1685 ரூபாயும், உணவோடு சேர்த்து 1895 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சாதாரண ஏசி சேர் கார் பெட்டியில் உணவு இல்லாமல் ரூ.830-ம், உணவோடு சேர்த்து ரூ.895-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்வகுப்பு ஏசி சேர் கார் பெட்டியில் உணவு இல்லாமல் 1635 ரூபாயும், உணவோடு சேர்த்து 1740 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருச்சி - நெல்லை: திருச்சியில் இருந்து நெல்லை வருவதற்கு சாதாரண ஏசி சேர் கார் பெட்டியில் உணவு இல்லாமல் ரூ.800-ம், உணவோடு சேர்த்து ரூ.1020-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்வகுப்பு ஏசி சேர் கார் பெட்டியில் உணவு இல்லாமல் 1575 ரூபாயும், உணவோடு சேர்த்து 1820 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நெல்லை - திருச்சி: இதேபோல் நெல்லையில் இருந்து திருச்சி வருவதற்கு சாதாரண ஏசி சேர் கார் பெட்டியில் உணவு இல்லாமல் ரூ.800-ம், உணவோடு சேர்த்து ரூ.920-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்வகுப்பு ஏசி சேர் கார் பெட்டியில் உணவு இல்லாமல் 1575 ரூபாயும், உணவோடு சேர்த்து 1730 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செல்போன், இணையதளம் மூலமாக டிக்கெட் எடுக்கும் போது கூடுதலாக ரூ.20 அல்லது 30 ரூபாய் வசூலிக்கப்படும்.


Click it and Unblock the Notifications
