காசிமேட்டு காத்தடிக்குது.. சென்னையில் வஞ்சிரம் கிலோ ரூ.1500.. முடங்கிய ரூ.500 கோடி பிசினஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் வரத்து குறைந்து, சென்னை காசிமேடு உள்ளிட்ட சந்தைகளில் மீன்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. வஞ்சிரம் மற்றும் இறால் போன்ற அசைவ பிரியர்களின் விருப்பமான மீன்கள் கட்டுப்படியாகாத விலைக்குச் சென்றதால், சாமானிய மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு ஒருபுறம் இருக்க, மறுபுறம் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை அரசுக்கு விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் நீலக்கடல் பரப்பில் தற்போது ஒருவித நிசப்தம் நிலவி வருகிறது. ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக அமல்படுத்தப்படும் 61 நாள் மீன்பிடி தடைக்காலம், கடந்த 14-ம் தேதி நள்ளிரவு முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

Chennai Kasimedu Fish Price Vanjaram Fishing Ban 2026 Tamil Nadu Fishermen Economic Impact Delta Districts Seafood Price Hike Fisheries Department Nagapattinam Business Loss Marine Life Trending News Tamil News Coastal Economy Market Update Chennai News Update 2026

மீன்பிடி தடைக்காலம்

விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்தத் தடைக்காலத்தின் தாக்கம் ரத்தமும் சதையுமாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

நாகை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,000 விசைப்படகுகள் கரையில் முடங்கிக் கிடக்கின்றன. இது தவிர தஞ்சையில் 150, புதுக்கோட்டையில் 350, மயிலாடுதுறையில் 250 மற்றும் காரைக்காலில் 200 என டெல்டா பகுதி முழுவதும் விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

நாகை மீனவர்கள் வேலையிழப்பு

இதனால் சுமார் 1.50 லட்சம் மீனவர்களும், அவர்களைச் சார்ந்த 10 லட்சம் மீன்பிடித் தொழிலாளர்களும் வேலையிழந்து தவித்து வருகிறார்கள்.. இதன் நேரடி விளைவாக டெல்டா மாவட்டங்களில் நாளொன்றுக்கு சுமார் 500 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழலை மீனவர்கள் தங்கள் படகுகளைப் பராமரிக்கும் காலமாக மாற்றியுள்ளனர். நாகை துறைமுகக் கரைகளில் தங்களது வாழ்வாதாரமாக விளங்கும் விசைப்படகுகளுக்கு வர்ணம் பூசுதல், துருப்பிடித்த பகுதிகளைச் சீரமைத்தல், இன்ஜின் பழுது பார்த்தல் மற்றும் கிழிந்த வலைகளைப் பின்னுதல் போன்ற பணிகளில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடலில் மீன்கள்

ஆனால் இந்தப் பராமரிப்புப் பணிகளுக்குப் பின்னால் மிகப்பெரிய நிதி நெருக்கடி ஒளிந்துள்ளது. ஒரு விசைப்படகை முழுமையாகச் சீரமைக்க 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும் நிலையில், போதிய வருமானம் இன்றி தவிக்கும் மீனவர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.

"முன்பெல்லாம் கடலுக்குச் சென்றால் வலை நிறைய மீன்கள் கிடைக்கும். ஆனால் இப்போது காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பால் மீன் வளம் குறைந்துவிட்டது. பல நாட்கள் வானிலை எச்சரிக்கையால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம். இந்தச் சூழலில் லட்சக்கணக்கில் கடன் வாங்கி படகுகளைச் சீரமைப்பது என்பது எங்களால் இயலாத காரியம்" என நாகை மீனவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

இதற்காக தமிழக அரசு வங்கிக் கடன்களை எளிய முறையில் வழங்க வேண்டும் என்றும், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

சென்னை காசிமேடு மீன்கள் விலை அதிகம்

அதுமட்டுமல்ல, மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை அரசு அண்மையில் 8,000 ரூபாயாக உயர்த்தியிருந்தாலும், விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு அந்தத் தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இப்படி கடலோர மாவட்டங்களில் வாழ்வாதாரம் முடங்கிக் கிடக்க, தலைநகர் சென்னையிலோ மீன்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகள் வராததால், பைபர் படகுகள் மூலம் கொண்டு வரப்படும் குறைந்த அளவு மீன்களுக்கே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் மீன்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

அதுவும் வஞ்சிரம் மீன் கிலோ 1,500 ரூபாய்க்கும், சங்கரா 800 ரூபாய்க்கும், நெத்திலி மற்றும் இறால் தலா 750 முதல் 850 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒருபுறம் மீனவர்களின் வருமானம் முடங்க, மறுபுறம் பொதுமக்களின் சமையலறை வரை இந்தத் தடைக்காலம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மீன்பிடித் தடைக்காலம் முடியும் வரை இந்த நெருக்கடி தொடரும் என்பதால், மீனவர்களின் குடும்பங்களைக் காக்க கூடுதல் அரசு உதவிகள் அவசியம் என்பதே தற்போதைய கள யதார்த்தம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+