அடடே.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! அன்புமணி மகளுக்கு வாழ்த்து சொன்ன வன்னி அரசு! போட்டோவை பாருங்க!
சென்னை: பாமகவை தொடர்ச்சியாக மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. குறிப்பாக அக்கட்சியின் நிறுவனர், தலைவர் உள்ளிட்டவர்களையும் மிகக் கடுமையாக சாடி வந்தார். இந்நிலையில் அன்புமணி மகள் சங்கமித்ரா செளமியா அன்புமணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, அவரோடு இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் வன்னி அரசு.
தமிழக அரசியலில் இதுவரை கூட்டணி வைக்காத அல்லது ஒரே கூட்டணியில் இல்லாத கட்சிகள் என்றால் அது திமுகவும் அதிமுகவும் தான். ஒரு காலத்தில் ஒன்றாக பயணித்த பாமகவும் விசிகவும் தற்போது அதிமுக திமுக போல எதிரும் புதிரும் ஆகவே இருக்கிறது.

முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சில விவகாரங்களில் ஒன்றாக அரசியல் செய்திருக்கின்றன. குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பட்டமே வழங்கியிருக்கிறார் திருமாவளவன். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளில் பாமக விசிக இடையே பெரும் இடைவெளி விழுந்தது. பல விவகாரங்களில் இரு கட்சிகளும் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தன. எல்லாவற்றிற்கும் மேலாக பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என அறிவித்தார் திருமா.
இதனிடையே திமுக கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளதாக வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கணக்குகள் மாறும் என்கிறனர் அரசியல் விமர்சகர்கள். இந்நிலையில் அன்புமணி மகள் சங்கமித்ரா செளமியா அன்புமணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, அவரோடு இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் வன்னி அரசு.
இது தொடர்பாக தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள வன்னி அரசு, விரைவில் வெளிவரவிருக்கிற #அலங்கு திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள். அய்யா ஜெயாராவ் மகன் ஜான்சன் அவர்களது திருமணம் இன்று நடைப்பெற்றது. நிகழ்வில், அலங்கு படத்தின் நாயகன் தம்பி குணாநிதி அவர்களையும் படத்தின் தயாரிப்பாளர் சகோதரி சங்கமித்ரா அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. இருவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம்" என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் "தமிழகத்தில் தலித் முதலமைச்சர்" என்ற பேச்சு எழுந்தபோது, தமிழ்நாட்டில் தலித் ஒருவரை முதலமைச்சராக பாமக துணை நிற்கும் என அன்புமணி பேசியிருந்தார். அந்த கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் இடம் வரவேற்பை பெற்று இருந்தது. சமீப நாட்களாகவே பாமக மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி குறைத்து வருகிறது.
2026 இல் கூட்டணிகள் மாறும் என அரசியல் களத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், அன்புமணியின் மகளை வன்னி அரசு சந்தித்து பாராட்டி வாழ்த்தி இருப்பது கவனம் பெற்றுள்ளது. திருமாவின் மனசாட்சி என அறியப்படும் வன்னி அரசு நினைத்திருந்தால் இந்த சந்திப்பை தவிர்த்து இருக்க முடியும், ஆனால் சந்தித்தது மட்டுமில்லாமல் புகைப்படம் எடுத்து அதை தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலேயே பதிவேற்றி இருப்பது கவனிக்கத்தக்கது ஆகிறது.

மேலும் அன்புமணி குடும்பத்தாரிடம் இதற்கு முன்பு இல்லாத வகையில் தற்போது மென்மையான போக்கை கடைபிடிப்பது ஒருவகையான சமிக்கை தான் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதை காலம் தான் முடிவு செய்யும்.












Click it and Unblock the Notifications