மலைத்த மாமல்லபுரம்..சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு! 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வன்னியர் சங்கத்தின் சார்பில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் சாதிவாரி சர்வே, வன்னியர்களுக்கு உடனடியாக உள் ஒதுக்கீடு, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த மத்திய அரசுக்கு பாராட்டு உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழு நிலவு அன்று மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இந்த மாநாடு நடைபெறாத நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்பாட்டின் பேரில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றதாக கூறுகின்றனர் பாமகவினர். இதுவரை இல்லாத அளவு ட்ரோன் ஷோ, பாராகிளைடரில் வன்னியர் சங்க கொடி. கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது.

Anbumani Ramadoss pmk chennai

தொடர்ந்து மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விபரம்..

.1. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க மாநில அரசின் சார்பில் தனியாக சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும்!

இந்தியாவில் 1931ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் போதிலும், தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கும், மிகமிக பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் பெறப்படும் தரவுகள் போதுமானவையாக இருக்காது என்பதே உண்மை.

தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 13.07.2010ஆம் நாள் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சாதிவாரி மக்கள்தொகை, சமூகங்களின் பின்தங்கிய நிலை உள்ளிட்ட தரவுகளை ஓராண்டுக்குள் திரட்டி, அவற்றின் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தது. அதேபோல், வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களின் சமூக, கல்வி பின்தங்கிய நிலை குறித்த பொருத்தமான, நிகழ்கால தரவுகளைத் திரட்டி அதன் அடிப்படையில் உள்இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. தேசிய அளவில் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் இவ்விவரங்களைத் திரட்ட முடியாது.

இந்தியாவில் வரலாற்று ரீதியாகப் பார்த்தால் மக்களின் சமூகப் பின்தங்கிய நிலை குறித்த தரவுகள் காகா கலேல்கர் ஆணையம், மண்டல் ஆணையம், தமிழ்நாட்டில் சட்டநாதன் ஆணையம், அம்பாசங்கர் ஆணையம் போன்ற பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களின் வாயிலாகவே திரட்டிப்பட்டிருக்கின்றன. மக்களின் சமூகப் பின்தங்கிய நிலையை அறிய பல்வேறு வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடைபெற வேண்டும். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் மக்களின் சாதி குறித்த தகவல் மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். மீதமுள்ள தரவுகளை தனியாக கணக்கெடுப்பதன் வாயிலாக மட்டுமே திரட்ட முடியும் என்பதே எதார்த்தம்.

அதனால்தான், பீகார், தெலுங்கானா, கர்நாடகம், ஒடிசா போன்ற மாநிலங்கள் 2008ஆம் ஆண்டின் புள்ளியியல் சட்டத்தைப் பயன்படுத்தி சாதிவாரியாக சமூக, பொருளாதார பின்தங்கிய நிலை குறித்த தரவுகளைத் திரட்டியுள்ளன. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக புதிதாக தொடரப்பட்டுள்ள வழக்கு எந்தநேரமும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரக்கூடும் என்பதால், அதைப் பாதுகாக்கவும் தனியான கணக்கெடுப்பு மிகவும் தேவையாகும்.

எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையான சமூகநீதியை வென்றெடுக்கவும், 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், 2008ஆம் ஆண்டு புள்ளியியல் சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் சமூக, பொருளாதார சாதிவாரி சர்வேயை தமிழக அரசு நடத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

2. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: போராடி சாதித்த மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றியும், பாராட்டுகளும்!

இந்தியாவில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா விடுதலையடைந்த பின் முதன் முறையாக, கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிட்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக மருத்துவர் அய்யா அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும், போராட்டங்களும் எண்ணில் அடங்காதவை. 20.07.1980ஆம் நாள் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட போது, அதில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்துச் சமூகங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான். அதன்பின் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான 3 வாய்ப்புகளை மருத்துவர் அய்யா அவர்கள் ஏற்படுத்தினார். ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் அந்த வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டன.

அதேபோல், தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக ராஜீவ் காந்தி, வி.பி.சிங், வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி ஆகிய 5 பிரதமர்களிடம் மருத்துவர் அய்யா அவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தார். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த அரசாணை பிறப்பிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், குஜராத் நிலநடுக்கம் காரணமாக அந்த வாய்ப்பு சாத்தியமாகவில்லை. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், பின்னாளில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பதிலாக, சமூகப் பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதால் மக்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.

அதன்பின், 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மருத்துவர் அய்யா அவர்கள் ஒருமுறை நேரில் சந்தித்தும், 3 முறை கடிதங்களை எழுதியும் வலியுறுத்தினார். அதன் காரணமாகவே இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கண்கெடுப்பு என்ற மருத்துவர் அய்யாவின் 45 ஆண்டுகால கனவு நனவாகியிருக்கிறது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் மூலம் இந்தியாவில் இடஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் ஏற்படும். சில பத்தாண்டுகளுக்கு முன் இவையெல்லாம் சாத்தியமே இல்லை என்று கருதப்பட்ட நிலையில், தொடர் போராட்டங்கள், அரசியல் அழுத்தங்கள் ஆகியற்றின் மூலம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை சாத்தியம் ஆக்கிய மருத்துவர் அய்யா அவர்களுக்கு இந்த சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு அதன் உளமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

3. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உடனடியாக உள்இடஒதுக்கீடு வழங்கவேண்டும்!

வன்னியர்களின் சமூக பின்தங்கிய நிலை குறித்த தரவுகளைத் திரட்டி, அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் 1,136 நாட்கள் ஆகும் நிலையில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக அரசுக்கு வன்னிய இளைஞர் பெருவிழா கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மருத்துவர் அய்யா அவர்கள் ஒருமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தியதுடன், 10க்கும் மேற்பட்ட முறை கடிதங்களை எழுதினார். சிலமுறை தொலைபேசி வாயிலாகவும் கோரிக்கை விடுத்தார். அதேபோல், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையிலான குழுவினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை 3 முறை சந்தித்து வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினர். இவர்கள் தவிர, பா.ம.க. நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் 50க்கும் மேற்பட்ட முறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து, இதே கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், தொடக்கத்தில் வன்னியர்களுக்கு கண்டிப்பாக உள்இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பின்னாளில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மட்டுமே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். தமிழக அரசு நேரடியாகவோ அல்லது தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் வாயிலாகவோ சாதிவாரி சர்வே நடத்த முடியும் என்றாலும் கூட, அதைச் செய்து அதைச் செய்ய தமிழக அரசு மறுப்பது, வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்குவதில் இன்றைய அரசுக்கு விருப்பமோ, அக்கறையோ இல்லை என்பதையே காட்டுகிறது.

வன்னியர்களின் சமூகப் பிந்தங்கிய நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பணி மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு 12.01.2023ஆம் நாள் வழங்கப்பட்டது. ஆணையம் நினைத்திருந்தால் 3 மாதங்களில் இந்தப் பணியை நிறைவு செய்திருக்க முடியும். ஆனால், இரண்டரை ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இது குறித்த எந்தப் பணியையும் செய்யாமல் உறங்கிக் கொண்டிருக்கிறது. இது பெரும் துரோகம்.

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லாத நிலையில், சமூகநீதி சார்ந்த தனது கடமையை தமிழக அரசு இனியும் தட்டிக் கழிக்கக் கூடாது. உரிய தரவுகளை உடனடியாகத் திரட்டி, வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா வலியுறுத்துகிறது.

4. அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழக்க தமிழக அரசு முன்வர வேண்டும்!

முழுமையான சமூகநீதி என்பது அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை வழங்குவது தான். 1980&ஆம் ஆண்டில் வன்னியர் சங்கத்தைத் தொடங்கிய காலத்திலிருந்து இதைத் தான் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தி வருகிறார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாக இழைக்கப்பட்டு வந்த சமூக அநீதிக்கு பரிகாரம் தேட இது தான் சிறந்த வழியாகும். கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால், அடுத்த சில தலைமுறைகளில் ஏற்றத்தாழ்வுகள் மறைந்து அனைவரும் சமம் என்ற நிலை உருவாகும். அத்தகையதொரு சூழல் உருவாக வேண்டும் என்பது தான் சமூகநீதியாளர்களின் கனவாகும்.

தமிழ்நாட்டில் அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்க பெரும் தடையாக இருந்தது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாதது தான். தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதன் மூலம் இதற்கான முதல் தடை விலகியுள்ளது. மாநில அளவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் பிற முட்டுக்கட்டைகளும் அகற்றப்பட்டு விடும். எனவே, தமிழகத்தில் உடனே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவாக மேற்கொண்டு அனைத்து சமூகங்களுக்கும், அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்திரை முழுநிலவு மாநாடு வலியுறுத்துகிறது.

5. பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை, அவர்களின் மக்கள்தொகைக்கு மேலும் 2% உயர்த்த வேண்டும்!

வன்னியர் சங்கம் 1980&ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட போது, அதற்கான நிகழ்வில் அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது தீர்மானம் பட்டிலின, பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக அதிகரிக்க வேண்டும் என்பது தான். ஆனாலும், இட ஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அது சாத்தியம் ஆகவில்லை. சமூகநிலை மற்றும் கல்வியில் அடிமட்டத்தில் இருப்பவர்கள் பட்டியலினச் சகோதரர்கள். அவர்களின் மக்கள்தொகை மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இட ஒதுக்கீட்டை மட்டும் அதிகரிக்காமல் அதே நிலையில் வைத்திருப்பது நியாயம் அல்ல. அது பட்டியலின மக்களின் சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது.

பட்டியலின மக்கள் முன்னேறாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேற முடியாது. அதைக் கருத்தில் கொண்டு பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டின் அளவை இப்போதிருக்கும் 18% என்ற அளவிலிருந்து, 2011&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 20 விழுக்காடாக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று இந்த மாநாடு கோருகிறது.

6. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!

தேசிய அளவிலும், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களிலும் கல்வி & வேலைவாய்ப்பில் சாதி அடிப்படையில் 49.5% மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்குக் காரணம் 1962ஆம் ஆண்டு பாலாஜி வழக்கிலும், 1992ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கிலும் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது என்று ஆணையிட்டதுதான். இடஒதுக்கீட்டிற்கு உச்ச வரம்பு நிர்ணயிப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. ஆனாலும், உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டிற்கு வரம்பு நிர்ணயித்ததற்குக் காரணம் இடஒதுக்கீடு பெறும் சமூகங்களின் உண்மையான மக்கள்தொகை கணக்கெடுக்கப்படாததுதான். இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மக்கள்தொகை 52 விழுக்காட்டுக்கும் அதிகம் என்றாலும்கூட, உரிய தரவுகள் இல்லாததாலும், உச்சநீதிமன்றத்தால் வரம்பு நிர்ணயிக்கப்பட்டதாலும் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 27% மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது பெரும் சமூக அநீதி.

இந்தியா விடுதலை அடைவதற்கு முன் தமிழ்நாட்டில் மாநில அளவிலான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமின்றி, மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்புகளிலும் 100% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட வரலாறு இருக்கிறது. இந்தியாவில் 1931ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் மக்கள்தொகையைக் கணக்கிட்டு அதற்கு இணையாக இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா கோருகிறது.

7. மத்திய அரசின் ஓபிசி இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை நீக்க வேண்டும்!

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படும் போதிலும், அதை அந்தச் சமூகங்களால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் கிரிமிலேயர் முறைதான். ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கிரிமிலேயர் எனப்படும் பொருளாதார அடிப்படையில் முன்னேறியவர்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. கிரிமிலேயர்களுக்கு மறுக்கப்படும் இடங்கள் கிரிமிலேயர் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டு நிரப்பப்படவில்லை என்பதும், சில ஆண்டுகளுக்குப் பின் அந்தப் பணியிடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, உயர் சாதியினரைக் கொண்டு நிரப்பப்படுகிறது என்பதும் தான் சமூக அநீதியாகும். இதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தில் கிரிமிலேயர் என்ற கோட்பாடே இல்லை. 1992ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தால் தான் கிரிமிலேயர் முறை புகுத்தப்பட்டது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சமூகநீதியை பறிப்பதற்கான கருவியாக கிரிமிலேயர் முறை பயன்படுத்தப்படுவதால், அதை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும் என்று மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு வலியுறுத்துகிறது.

8. தனியார்துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்!

அரசுத் துறை வேலைவாய்ப்புகள் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துவரும் நிலையில், பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்களின் சமூக முன்னேற்றத்தை உறுதி செய்ய தனியார் துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தவிர்க்க முடியாததாகிறது. மத்திய அரசுத் துறைகளில் ஆள்குறைப்பு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் போன்ற காரணங்களால் அரசுத் துறை வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. 2001ஆம் ஆண்டில் மத்திய அரசுத் துறைகளில் உள்ள 36.06 லட்சம் பணியிடங்களில் 1.84 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் காலியிடங்களில் எண்ணிக்கை 9.5 லட்சமாக உயர்ந்துவிட்டது. ஒருபுறம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கையும், அவறின் வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பாமகவால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தனியார்துறை நிறுவனங்களில் இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை ஆட்சியாளர்களும், தனியார் நிறுவனங்களும் கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொண்டிருக்கும் போதிலும், அதைச் சட்டமாக்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இனியும் அதேநிலை தொடர்வது பெரும் சமூக அநீதி என்பதால், அதைத் தவிர்க்கும் வகையில் தனியார்துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்படி இம்மாநாடு கோருகிறது.

9. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும்!

இந்தியாவில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் நிலையில், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் மட்டும் இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத சமூக அநீதியாகும்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவதற்கான காரணம் கொலீஜியம் முறைதான். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் போட்டித் தேர்வுகள் மூலம் நியமிக்கப்பட்டால், அதில் இடஒதுக்கீடு கண்டிப்பாக கடைபிடிக்கப்படும். அதே முறையை கொலீஜியம் முறையில் பின்பற்றுவதில் எந்தச் சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை. உயர்நீதித் துறையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால், மிகமிக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களால் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உயர முடிவதில்லை. இந்தநிலை மாற்றப்பட வேண்டும்.

மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில் 454 நீதிபதிகள், அதாவது 75 விழுக்காட்டினர் உயர்சாதியினர் ஆகும். 12 விழுக்காட்டினர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆவர். பட்டியலினத்தவருக்கு 3 விழுக்காடும், பழங்குடியினருக்கு ஒன்றரை விழுக்காடு மட்டுமே பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. இதேபோல், எந்த காலக்கட்டத்தை எடுத்துக் கொண்டாலும், உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 90 விழுக்காட்டினர் உயர் சாதியினராகவே உள்ளனர். இந்த நிலையை மாற்றி அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் வகையில், உயர்நீதித்துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இம்மாநாடு கோருகிறது.

10. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை, கிராம ஊராட்சிகளில் 12.16%, ஊராட்சி ஒன்றியங்களில் 15.42%, மாவட்ட ஊராட்சிகளில் 17.25% பிரதிநிதித்துவம் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைத்திருக்கிறது. கிராமப் பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தாலும், அங்குள்ள பொதுப் பிரிவு சமூகங்களைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் தான் செல்வாக்கு பெற்றவர்களாக உள்ளனர். அதனால், அவர்கள் மிகவும் எளிதாக தேர்வு செய்யப்படுகின்றனர். இது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் இடஒதுக்கீட்டை மறைமுகமாக பறிக்கும் செயலாகும். இந்த சமூக அநீதி அகற்றப்படவேண்டும்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதோ, குறைந்தபட்சம் அதே அளவு விழுக்காடு இடஒதுக்கீட்டை உள்ளாட்சி அமைப்புகளிலும் வழங்க வேண்டும்; அதன் மூலம் தான் உள்ளாட்சி அமைப்புகளை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க முடியும். இதற்காக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை உடனடியாக தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு கேட்டுக்கொள்கிறது.

11. தமிழ்நாட்டில் அனைத்துச் சமூக மக்களின் வளர்ச்சிக்காக நிதி அதிகாரத்துடன் கூடிய தனித்தனி கார்ப்பரேஷன்கள் அமைக்கப்பட வேண்டும்!

ஆந்திர மாநிலத்தைப் பின்பற்றி தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சமுதாயங்களில், 30 ஆயிரத்திற்கும் கூடுதலாக மக்கள் தொகை கொண்ட அனைத்துச் சாதிகளுக்கும், தனித்தனியாக கார்ப்பரேஷன்கள் அமைக்கப்பட வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார். அவ்வாறு கார்ப்பரேஷன்கள் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு கார்ப்பரேஷனுக்கும் தலைவர்களாக அந்தந்தச் சாதிகளைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்படுவார்கள்; ஒவ்வொரு சாதிக்குமான நலத்திட்ட உதவிகள், முதியோர் ஓய்வூதியம், கல்விக்கட்டணம், தொழில் தொடங்கக் கடனுதவி, மருத்துவ உதவிகள் ஆகியவை இந்த கார்ப்பரேஷன்கள் மூலமாக மட்டுமே வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பயன்கள் கிடைக்கும்.

சமூகங்களின் வளர்ச்சிக்கு இது மிகவும் சிறந்த யோசனை என்பதால், அதை ஏற்றுக் கொண்டு, தமிழ்நாட்டில் 30 ஆயிரத்திற்கும் அதிக மக்கள்தொகை கொண்ட அனைத்துச் சமூகங்களுக்கும் தனித்தனி கார்ப்பரேஷன்களை அமைக்க வேண்டும்; 30 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சாதிகளை ஒருங்கிணைத்து கார்ப்பரேஷன்கள் உருவாக்கப்படவேண்டும் என்று சித்திரை முழுநிலவு மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

12. தமிழ்நாட்டில் கல்வி, தனிநபர் வருமானம், மனிதவள குறியீட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள வடமாவட்டங்களின் முன்னேற்றத்திற்கு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்!

தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் என்று ஆட்சியாளர்கள் பெருமைப்பட்டுக் கொண்டாலும்கூட, தமிழகத்தின் பல மாவட்டங்கள் உத்தரப்பிரதேசத்தையும், பீகாரையும்விட பின்தங்கிய நிலையில் தான் உள்ளன. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால், கடைசி 15 இடங்களைப் பிடிக்கும் மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் வட தமிழ்நாட்டில் தான் உள்ளன. தனிநபர் வருமானம், மனிதவளக் குறியீடு ஆகியவற்றிலும் வடமாவட்டங்கள் தான் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. இந்த நிலையை மாற்றுவதற்காக தமிழகத்தின் வடமாவட்டங்களுக்கு மட்டும் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 371&கே என்ற புதிய பிரிவை சேர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு கோருகிறது.
13. முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், போதைப் பொருட்களை ஒழிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!

தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை, கொள்ளை போன்ற கொடுங்குற்றங்களுக்கும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களுக்கும் முதன்மைக் காரணமாக இருப்பது மது, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் தான். தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டியதன் கட்டாயம் குறித்தும் பாமக தொடர்ந்து வலியுறுத்தி வரும்போதிலும் அதன்மீது எந்த நடவடிக்கையும் தமிழக அரசால் எடுக்கப்படவில்லை.

தமிழகத்தின் பல பகுதிகளில் சமூகப் பதற்றங்கள் ஏற்படுவதற்கும், மதுப்பழக்கமும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடும் தான் காரணமாக உள்ளன. இதேநிலை தொடர்ந்தால், தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாத நிலை உருவாகிவிடும். இதை உணர்ந்து, தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும். அதேபோல், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும் முற்றிலுமாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன்னியர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா வலியுறுத்துகிறது.

14. ஜம்மு &காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு வீர வணக்கம்: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக எதிர்காலத்திலும் இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு!

ஜம்மு &காஷ்மீர் மாநிலத்தில் பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22&ஆம் நாள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் 22 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த சகோதர, சகோதரிகளின் குடும்பங்களுக்கு சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது. பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தான் தரப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அமைதியையும், இயல்புநிலையையும் ஏற்படுத்துவதற்கு உகந்தவையாக இல்லை; மாறாக, எல்லைப் பகுதியில் பதட்டத்தையும், பயங்கரவாதத்தையும் தூண்டுவதாகவே இருந்தன.

பகல்காம் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தான் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் பொதுமக்கள் 12 பேரும், இந்தியப் படை வீரர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது. பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்கள் எல்லை மீறிக் கொண்டிருந்த நிலையில், இந்தியாவைப் பாதுகாப்பதற்காக மே 6&ஆம் தேதி பாகிஸ்தானில் 9 இடங்களில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து கொடுத்த பதிலடி மற்றும் அதன்பின் நாட்டைக் காப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்த உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. இது நிம்மதியளிக்கிறது.

அதேநேரத்தில், சிந்து நதி ஒப்பந்தம் ரத்து தொடரும், இனிவரும் காலங்களிலும் பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு தொடரும் என்று மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் நிலைப்பாட்டை இந்த மாநாடு வரவேற்கிறது. நாட்டைக் காப்பதற்காக கடந்த 3 வாரங்களில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும், இனிவரும் காலங்களில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கும் சித்திரை முழுநிலவு மாநாடு முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது." ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+