காஞ்சிபுரம் திமுக பவள விழா கூட்டத்தில் ஸ்டாலின் முன்னிலையில் அவமதிக்கப்பட்ட திருமாவளவன்-விசிக கோபம்!
சென்னை: காஞ்சிபுரத்தில் திமுக நடத்திய பவள விழா பொதுக் கூட்டத்தில் நடந்தேறிய அந்த ஒரு சம்பவம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனையும் அவரது கட்சி நிர்வாகிகளையும் கடும் கோபத்தில் தள்ளிவிட்டிருக்கிறதாம். பவள விழா பொதுக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக கூட்டணி தலைவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிய போது திருமாவளவன் பெயரைத் தவிர 19 தலைவர்களின் பெயர்களும் மறக்காமல் உச்சரிக்கப்பட்டது எப்படி சரியாகும் ? என்பது விசிகவினர் கேள்வி.
காஞ்சிபுரத்தில் திமுகவின் பவள விழா பொதுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. திமுக கூட்டணியில் சலசலப்பு எழுந்துவிட்டது; திமுக கூட்டணியை விட்டு சில கட்சிகள் வெளியேறி அதிமுகவுக்கு தாவப் போகின்றன என யூகங்கள் வெடித்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

ஆனாலும் திமுக கூட்டணித் தலைவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் பேசி கூட்டணியை உறுதி செய்தனர். விசிக தலைவர் திருமாவளவனும், திக, திமுகவுடன் இணைந்து விசிக 3-வது குழலாக செயல்படும் என உறுதி அளித்திருந்தார். மேலும், திமுக கூட்டணி தேர்தலுக்காகவோ தேர்தல் காலத்திலோ உருவாக்கப்பட்ட அணி அல்ல. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் தேர்தல் காலத்தில் உருவாகும் அணி தேர்தலுக்குப் பின் சிதறி போகும். ஆனால், இந்த அணி இன்றைக்கும் கட்டுக்கோப்பாக இயங்குகிறது என்றால், அதற்கு ஸ்டாலினின் ஆளுமைதான் காரணம் எனவும் பெருமிதத்துடன் பேசினார் திருமாவளவன்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போது, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சகோதர்ர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோரது பெயர்கள் வரிசையாக உச்சரிக்கப்பட்டன. அப்போது சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு அருகேதான் திருமாவளவன் நின்றிருந்தார்.

பாலகிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின், திருமாவளவனுக்கு கை கொடுத்துக் கொண்டிருந்த போது திருமாவளவன் பெயரை உச்சரிக்காமல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கேஎம்மொய்தீன், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் மவுரியா, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லா, கொங்குநாடு தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் பொன்.குமார்.
சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் விடுதலைக் கட்சி முருகவேல்ராஜன், மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், ஆதித் தமிழர் பேரவை தலைவர் அதியமான், தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப், வல்லரசு பார்வர்ட் பிளாக் நிறுவனத் தலைவர் பி என் அம்மாவாசி ஆகியோரது பெயர்கள் மறக்காமல் உச்சரிக்கப்பட்டன.
இத்தனை கட்சித் தலைவர்கள் பெயர்களை உச்சரிக்கும் போது திருமாவளவன் பெயர் மட்டும் உச்சரிக்கப்படாதது ஏன்? திமுக கூட்டணி தலைமைக்கு நெருக்கடி தரும் வகையில் அதிகாரப் பகிர்வு பற்றி பேசியதால் இந்த அவமானத்தை தருகிறதா திமுக தலைமை? என கொந்தளித்துப் போயிருக்கின்றனராம் விசிக நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications