"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?
சென்னை: இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் சூழலில், திமுக இல்லாமல் இந்தக் கூட்டணி நடப்பது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். மேலும், விஜய் அரசியல் மீது தங்களுக்குத் தொடக்கத்தில் ஐயம் இருந்தது உண்மை தான் என்றும் இருப்பினும், அந்த அச்சம் தேர்தலுக்குப் பிறகு போய்விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசியளவில் பாஜகவுக்கு எதிராக இருக்கும் அனைத்து கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி தான் "இந்தியா" கூட்டணி. இந்தக் கூட்டணி தொடங்கப்பட்ட போதில் இருந்தே இதில் திமுக மிக முக்கியமாக அங்கம் வகித்து வருகிறது. இருப்பினும், தமிழகச் சட்டசபைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு "இந்தியா" கூட்டணியில் திமுக தொடருமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா கூட்டணி
இதற்கிடையே வரும் ஜூன் 8ம் தேதி "இந்தியா" கூட்டணியில் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ள சூழலில், இதில் திமுக பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக இல்லாமல் இந்தியா கூட்டணி கூட்டம் நடப்பது வருத்தமளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அண்ணாமலை, விஜய், அதிமுக எதிர்காலம் எனப் பல விஷயங்கள் குறித்தும் அவர் விரிவாகப் பேசியிருந்தார்.
திருமா
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி, ஒரு புதிய அமைப்பைத் தொடங்கியிருப்பது என்பது, தன்னை பாஜகவின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்க முடிகிறது. பாஜகவின் இன்னொரு முகமாக இல்லாமல்.. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள், உரிமைகள் மற்றும் தமிழ்நாட்டின் தனித்துவமான அடையாளத்தைப் பிரதிபலிக்கும் பாதையாக இருந்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம்..
தேர்தலுக்கு முன்பு விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்தும், அவரது சித்தாந்தம் குறித்தும் பல்வேறு ஐயங்கள் மற்றும் கேள்விகளை நாங்கள் எழுப்பினோம். ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் என்ன செய்தார் என்பதை நாம் பார்க்க வேண்டும். விஜய் நினைத்திருந்தால் அதிமுக, பாமக அல்லது பாஜக உள்ளிட்ட என்டிஏ கூட்டணியுடன் ஆட்சி அமைத்திருக்க முடியும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. மாறாக, மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கு சக்திகளின் ஆதரவைக் கோரி ஆட்சி அமைத்ததன் மூலமாகவே, மதச்சார்பின்மைக் கொள்கையின் மீதான தனது உறுதியான பற்றை அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
தயக்கம்
தொடக்கத்தில் எங்களுக்குத் தயக்கம் இருந்தது உண்மை தான். காங்கிரஸ் உடனடியாக ஆதரவு கொடுத்தது. இடதுசாரிகளுடன் நாங்கள் கலந்து ஆலோசித்தோம். இடதுசாரிகள் முடிவுக்கு ஏற்ப எங்கள் முடிவு இருக்கும் என அறிவித்தோம். தேர்தலுக்கு முன்பு சந்தேகம், அச்சம் இருந்தது உண்மை. ஆனால், தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆட்சி அமைக்க விஜய் எடுத்த நிலைப்பாடு அந்த அச்சத்திற்கான விடையைக் கொடுத்தது.
அதிமுக
பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் அதிமுக தனித்து நின்றாலே அவர்கள் வாக்கு வங்கி பாதுகாக்கப்படும். பாஜகவுடன் சேர்வது பின்னடைவையே ஏற்படுத்தும். அதிமுக போன்ற ஒரு வலுவான பிராந்திய இயக்கம் தமிழ்நாட்டில் பலவீனமடைந்து வருவது சற்றே கவலையளிக்கிறது. இது தமிழகத்தின் அரசியலுக்கே ஆபத்து. திராவிட கட்சிகள் வலுவாக இருந்ததால் தான் மதவாத சக்திகளால் தமிழகத்தில் வளர முடியாமல் போனது. திராவிட கட்சிகள் பலவீனமடைந்தால் இங்கு ஒரு ஆபத்தான அரசியல் வெற்றிடம் உருவாகும். அந்த வெற்றிடத்தைப் பயன்படுத்திச் சாதிய, மதவாத நச்சுச் சக்திகள் தமிழ்நாட்டு மண்ணிற்குள் காலூன்றுவதற்கு அது வழிவகுத்துவிடும்.
வருத்தம்
இந்தியா கூட்டணி என்ற தேசிய அளவிலான கூட்டணி அமைந்ததில் திமுக பங்கு மகத்தானது. அவர்கள் இந்த கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தனர். அவர்கள் இல்லாமல் இந்தியா கூட்டணி கூட்டம் கூடுவது கவலையளிக்கிறது. அதற்காக வருந்துகிறோம். அரசியல் சூழல் அதுபோல நடந்துவிட்டது. அதேநேரம் விசிக தேசியளவில் உருவாக்கப்பட்டுள்ள 'இந்தியா' கூட்டணி ஒன்றிணைந்து செயல்படுவது மிக மிக அவசியமான ஒன்றாகும். எனவே, இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் விசிக பங்கேற்கும்












Click it and Unblock the Notifications