பிரதமர் மோடியை வரவேற்க.. பாஜக, அதிமுக கொடியுடன் இருந்த விசிக கொடி.. திருமாவளவன் சந்திப்பு?
அரியலூர்: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக வைக்கப்பட்ட பாஜக மற்றும் அதிமுக கொடிகளுடன் சேர்த்து, விசிகவின் கொடியும் நட்டு வைக்கப்பட்டிருப்பது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. இதற்கான பின்னணி என்ன என்பது தொடர்பாக இந்த செய்தியில் பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாகத் தமிழ்நாடு வரவுள்ளார். விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தைத் திறந்து வைக்கும் மோடி, நாளை அரியலூரில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவான ஆடி திருவாதிரை நிறைவு நாளில் பங்கேற்கிறார். முன்பாக திருச்சி மற்றும் அரியலூரில் ரோடு ஷோ மூலமாக மக்களையும் சந்திக்கிறார்.

இதற்காக பாஜக தரப்பில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் திருச்சியில் இன்று இரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்கிறார். எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். இதனால் பிரதமர் மோடியை வரவேற்க பாஜக கொடிகளுடன் சேர்த்து அதிமுக கொடிகளும் நடப்பட்டுள்ளன.
அதேபோல் அரியலூர் மாவட்டத்தில் பாஜக மற்றும் அதிமுக கொடிகளுடன் சேர்த்து விசிக கொடிகளும் நட்டு வைக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள விசிகவின் கொடிகள் ஏன் நடப்பட்டது என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருவது தெரிய வந்துள்ளது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் எம்பியாக திருமாவளவன் இருக்கிறார்.
இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சியில் திருமாவளவனும் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக நினைத்து விசிகவினர் அக்கட்சியின் கொடியை நட்டுள்ளதாகத் தகவல் சொல்லப்படுகிறது. அரசு சார்பாக நடக்கும் நிகழ்ச்சி என்பதால், அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட வேண்டும். இதனால் நாளைய நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளது.
தூத்துக்குடியில் நடக்கும் விமான நிலைய நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்கிறார். முதல்வர் ஸ்டாலின் தரப்பில் பிரதமர் மோடியிடம் அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுக்களை தங்கம் தென்னரசு அளிக்கவுள்ளர். இதனால் கனிமொழி மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரைப் போலவே திருமாவளவன் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications