குடிநீரில் மலம் கலந்த விவகாரம்..குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன்? ஆர்ப்பாட்டத்தை அறிவித்த திருமாவளவன்
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் இதுவரை காவல்துறையினரால் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், குடிநீரில் மலம் கலந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியினர் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் இறையூர் கிராமத்தில் உள்ள ஒரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியல் இனத்து மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வந்த பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் துர்நாற்றத்துடன் குடிநீர் வந்ததை அறிந்த பொதுமக்கள், தொட்டியின் மேலே சென்று ஆய்வு மேற்கொண்ட போது அதில் மர்ம நபர்கள் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது.

குடிநீர் தேக்க தொட்டியில் மலம்
இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு சோதனை செய்தபோது மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக வெள்ளனுர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்தே ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

கோயிலில் தீண்டாமை
அப்போது அப்பகுதியினர் அளித்த புகார் மூலமாக அய்யனார் கோவிலுக்கு பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதும், தேநீர் கடையில் இரட்டை குவளை முறை பின்பற்றப்படுவதும் தெரியவந்தது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக அனைத்து பட்டியலின மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபட செய்தார்.

டீ கடை உரிமையாளர்கள் கைது
அப்போது சாமி வந்ததை போல் பட்டியலின மக்களை இழிவாக பேசிய சிங்கம்மாள் மற்றும் அஞ்சப்பன் ஆகியோர் மீது எஸ்சி/எஸ்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு செய்யப்பட்டது. மேலும் அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறையை கடைபிடித்த கடை உரிமையாளர் மூக்கையா மற்றும் மனைவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல் சிங்கம்மாள், மூக்கையா இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

விசிக ஆர்ப்பாட்டம்
இருப்பினும் இதுநாள் வரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லை. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார். ஜனவரி 11ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விசிக சார்பில் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனிதக் கழிவை கொட்டிய இழிசெயலை கண்டித்தும், இழிவான குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமாவளவன் பேட்டி
இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலத்தை கலந்த அநாகரீகத்தை செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இந்த சம்பவம் நடந்து நாட்கள் உருண்டோடிவிட்டன. யார் செய்தார்கள் என்பது கண்டறிய முடியவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட வேண்டும். அவர்களை கைது செய்ய வலியுறுத்தி வரும் 11ம் தேதி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications