இன்று இலங்கையில் நடந்தது! நாளை இந்தியாவில் நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்! திருமாவளவன் அலர்ட்!
சென்னை: இன்று இலங்கையில் நடந்தது, நாளை இந்தியாவில் நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம் என்றும் பாஜகவினர் இதை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும் எனவும் விசிக தலைவர் திருமாவளவன் அலர்ட் செய்துள்ளார்.
Recommended Video
கட்சி நிர்வாகி இல்ல மண விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி சென்றுள்ள அவர், வழியில் தூத்துக்குடி விமான நிலையத்தில் இதனைக் கூறினார்.
அதன் விவரம் வருமாறு;

உலக நாடுகளின் ஆதரவு
''உலக நாடுகளின் ஆதரவு என்ற பெயரில் ஈழத்தமிழர் போராட்டத்தை நசுக்கிய ராஜபக்சே இன்றைக்கு உலக நாடுகளின் ஆதரவை பெற இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால் பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம், வன்முறை வெறியாட்டம், என இலங்கை வீதிகளில் பரவும் நெருப்பு ராஜபக்சேவை நாட்டை விட்டு ஓட வைத்திருகிறது. இது பிற நாடுகளுக்கு ஒரு படிப்பினை இந்தியாவுக்கும் ஒரு படிப்பினை.''

மொழி வெறி
''அங்கே மொழிவெறி இனவெறியை வளர்த்து ஒரே சட்டம் ஒரே ஆட்சி நிர்வாகம் என்று எல்லாவற்றையும் ஒற்றைத் தன்மையை நோக்கி ராஜபக்ச குடும்பம் அந்த தேசத்தை அழைத்துச்சென்றது. இலங்கையின் பன்முகத்தன்மையை சிதைத்தது. தமிழர்கள் நசுக்கப்பட்டனர். அதே நிலையில் தான் இன்றைக்கு மோடி அரசு இந்தியாவை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்ற பெயரில் அனைத்தையும் ஒற்றைத் தன்மையை நோக்கி இட்டுச் செல்கிறது.''

இந்தி திணிப்பு
''இந்தியை திட்டமிட்டு திணிக்கிறார்கள். இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் இந்தியாவின் ஒரே கட்சியாக பிஜேபி இருக்க வேண்டும் இந்தியாவின் ஒரே ஆட்சியாக பிஜேபி ஆட்சி இருக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் இங்கு செய்கிறார்கள். இலங்கையில் நிகழ்ந்தது இந்தியாவில் நிகழும் என்பதை பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் சங்பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.''

குடிசைகள் இடிப்பு
''சென்னை பெருநகரத்தில் நீதிமன்றத்தின் ஆணை என்கிற பெயரால் தற்போது ஏழை எளிய மக்களின் குடிசைகள் இரக்கமின்றி அப்புறப்படுத்த படுவதும் அவர்களை நடுத்தெருவில் நிறுத்துவதும் தொடர்ந்து நீடிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நீதிமன்றம் அறிவித்தாலும் அதை தடுப்பதற்கு சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் அதிகாரம் உள்ளது. இதுகுறித்து முதல்வர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.''

லாக்கப் டெத்
''தமிழகத்தில் லாக்கப் டெத் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். தொடர்ச்சியான இதுபோன்ற நிகழ்வுகள் தமிழக அரசிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். இது போன்று நிகழாமல் இருக்க முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அடைக்கலம் தர வேண்டியது தமிழக அரசின் கடமை. இந்த நேரத்தில் ராஜபக்சே குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. ஓராண்டு காலத்தில் முதல்வர் நல்லாட்சி வழங்கியுள்ளார். ஆதலால் தான் அவருக்கு அகில இந்திய அளவில் சிறந்த முதல்வர் என்று நற்சான்றிதழ் கிடைத்திருக்கிறது. எதிர்க்கட்சி என்பது தமிழகத்தில் அதிமுக தான் பாஜக எதிர்க்கட்சியாக வர வாய்ப்பில்லை.''












Click it and Unblock the Notifications