பாஜகவிற்கு தாவும் சிறுத்தைகள்.. யார் போனாலும் நஷ்டமில்லை! செல்வப்பெருந்தகை, பெரியசாமியை இழுந்த விசிக
சென்னை: தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் யார் கட்சியை விட்டு சென்றாலும் தங்களுக்கு நஷ்டம் இல்லை என அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, "யார் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளட்டும், அதனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எந்த வித நட்டமும் இல்லை, இலாபமும் இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சில நபர்கள் பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளது.

அவர்கள் அங்கு சென்றதால் விடுதலைச் சிறுத்தைகள் பலம் குறைந்து விட்டது என்பது பொருளல்ல. ஏற்கனவே செல்வபெருந்தகை, தடா பெரியசாமி, திருவள்ளுவன், கலைகோட்டுதயம், தேவநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த இயக்கத்தை விட்டு வெளியேறினார்கள். அதனால் இந்த இயக்கம் பலவினமடைவிட்டதா? என்று கேட்டால் பதில் யாரிடமும் இருக்காது.
நேற்று சென்றவர்கள் மட்டுமல்ல, நாளை செல்லவிருக்கும் என யார் என்றாலும் எங்களுக்கு நட்டமில்லை, மாறாக எதன் அடிப்படையில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டதோ, அதே வீரியத்தோடு நாள்தோறும் இந்த ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபாண்மை சமூக மக்களின் உரிமைக்காக அன்றாடம் களத்தில் கர்ஜிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை." என்று குறிப்பிட்டு திருமாவளவனையும் டேக் செய்துள்ளது.
திருமாவளவனால் தொடங்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் பட்டியலின, சிறுபான்மை சமூகத்தினர், தொழிலாளார்கள், பெண்கள் என அனைத்து விளிம்பு நிலை மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசியல் களத்திலும் முன்னணி கட்சியாக இது விளங்குகிறது.
யார் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளட்டும், அதனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எந்த வித நட்டமும் இல்லை, இலாபமும் இல்லை...
— VCK - விடுதலைச் சிறுத்தைகள் (@VCKofficial_) July 6, 2023
கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சில நபர்கள் பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளது, அவர்கள் அங்கு… pic.twitter.com/nk6sJQ3Z4k
தற்போது அக்கட்சிக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள், 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பட்டியலின, சிறுபான்மை சமூக மக்களின் பிரச்சனைகளுக்காக முதல் ஆளாக குரல் கொடுத்து வருகிறார் திருமாவளவன். அதேபோல் பட்டியலின மக்களை ஜாதி ரீதியாக பிளவுபடுத்தும் சதி அரங்கேறி வருவதாகவும் அவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
திமுக ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் காவல்துறை மற்றும் அரசுத் துறை அதிகாரிகளை வெளிப்படையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி விமர்சித்து வருகிறது. இந்த நிலையில்தான் அக்கட்சியை சேர்ந்த சிலர் பாஜகவுக்கு தாவுவதாக செய்திகள் வந்துகொண்டு இருந்ததை அடுத்து அக்கட்சி ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டு உள்ளது.
இப்பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ள செல்வப்பெருந்தகை தற்போது காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக இருந்து வருகிறார். இவர் இதற்கு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தீவிரமாக இயங்கி வந்தார். கலைகோட்டுதயம் தனியார் தொலைக்காட்சி ஒன்றை நடத்தி வந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நாம் தமிழர் கட்சிக்கு தாவிய அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றார்.
அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த தடா பெரியசாமி அதிலிருந்து விலகி தமிழ்நாடு பாஜகவில் இணைந்தார். அக்கட்சியின் பட்டியலின அணி தலைவராக பதவி வகித்து வருகிறார். இப்படி கட்சியில் இருந்து வெளியேறியவர்களின் பெயர்களை பட்டியலிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி ட்விட்டரில் விளக்கமளித்து உள்ளது.












Click it and Unblock the Notifications