நோஸ் கட் ஆனவர்களின் கூச்சல், கூக்குரல், புலம்பல்.. தமிழிசை செளந்தரராஜனுக்கு திருமா பதிலடி
சென்னை: மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு விசிக அழைப்பு விடுத்தது குறித்து தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்திருந்த நிலையில், மூக்கறுபட்டவர்களின் கூச்சல், கூக்குரல், புலம்பல் அது. பாஜகவினர் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்ற வயிற்றெரிச்சலில் அப்படி பேசுகிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு கொடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சிறுத்தையாய் சீறியது. முதல்வரை சந்தித்ததும் சிறுத்தை சிறியதாக மாறிவிட்டது. இந்த நாடகம் தமிழ்நாடு மக்களிடம் எடுபடாது என்று தமிழிசை செளந்தரராஜன் அண்மையில் கூறியிருந்தார். இதுகுறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், மூக்கறுபட்டவர்களின் கூச்சல், புலம்பல், கூக்குரல் இது. அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. தேர்தலுக்கு கிட்டத்தட்ட இன்னும் 18 மாதங்கள் உள்ளன. அதற்குள், தேர்தல் கணக்கு, கூட்டணிக் கணக்கு என்று கூப்பாடு போட்டு, கூச்சல் எழுப்பினார்கள். எப்படியாவது மேலும் விரிசல் அடையாதா, பிளவு ஏற்படாத என்று காத்திருந்தார்கள். எதிர்பார்த்துக் கிடந்தார்கள். ஆனால், ஏமாந்து போய்விட்டார்கள். அதனால், ஏற்பட்ட விரக்திதான் இப்போது வெளிப்பட்டு வருகிறது.
ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே தங்களுக்கு எதிரான ஒரு அரசியலைத்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேசுகிறார்கள் என்பதை புரிந்தும் இந்த மாநாட்டுக்கு வருகிறார்கள் என்றால் விசிகவும், திமுகவும் ஒரே நேர்க்கோட்டில் கொள்கை அளவில் பயணிக்கிறது என்பதுதான் பொருள். முரண்பாடான அரசியல்தான். ஆனால், இணைந்து பயணிப்போம் என்பது கொள்கை தளத்தில் இருவரும் இணையாக இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது.
படிப்பதை ஏற்றுக் கொள்ளாதவர்கள், குடிப்பதை ஏற்றுக் கொள்வார்களா என்று தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழிசை செளந்தரராஜன் பேசியது குறித்த கேள்விக்கு, தேசிய கல்விக் கொள்கையை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும். விசிகவும், திமுகவும் அதனை எதிர்க்கிறது. நாங்கள் தேசிய அளவிலான மது விலக்கு கொள்கை வேண்டும் என்றோம். திமுகவுக்கும் அதில் உடன்பாடு உள்ளது. பேரறிஞர் அண்ணாவும் அன்றே இதனை வலியுறுத்தி உள்ளார்.
1974 இல் மதுக் கடைகளை மூடிய பிறகு கருணாநிதியும் அந்தக் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். திமுக அன்று பேசிய அதே கருத்தை இன்றும் பேசுகிறது அவ்வளவுதான். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றாக வேண்டும் என்று ஒன்றும் இல்லை. தேசிய மது விலக்கு கொள்கை வேண்டும் என்பது இந்தியா முழுவதும் மக்கள் பாதிக்கப்படக் கூடாது. மனிதவளம் பாழாகக் கூடாது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் குடிக்கு அடிமையாகி குடிநோயாளிகள் உருவாகி வருவது வேதனை அளிக்கிறது.
எனவே, தேசிய அளவிலான பார்வையோடு மனிதவளத்தை பாதுகாக்கும் வகையில் இரண்டு கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறது. இரண்டு திராவிட கட்சிகளும் வளர விடாது என்று பாஜகவின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, பாஜகவினர் எப்போதுமே அப்படித்தான் விமர்சனம் வைப்பார்கள். அவர்களுக்கு வயிற்றெரிச்சலைத் தரக் கூடிய ஒரு அரசியல்தான். பெரியார் என்று சொன்னாலே அவர்களுக்குப் பிடிக்காது.
தமிழக சட்டமன்றத்தில் பெரியார் என்ற வார்த்தையையே ஆளுநர் ஆர்.என்.ரவி உச்சரிக்க மாட்டேன் என்று கூறி வெளியேறினார். அந்த அளவுக்கு அவர்களுக்குப் பெரியாரின் மீது வெறுப்பு உள்ளது. எனவே, பாஜகவினர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications