திமுக முதுகில் குத்தும் விசிக திருமாவளவன்- அதிமுக தலைமையில் மக்கள் நலக் கூட்டணி 2.0 உதயமாகிறதா?
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருந்தாலும் இப்போதே கூட்டணிக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமது மது ஒழிப்பு மாநாட்டுக்கு அண்ணா திமுகவை அழைத்திருப்பதால் அரசியல் வட்டாரங்கள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன. 2015-ம் ஆண்டு போல மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கும் முயற்சியை விசிக தலைவர் திருமாவளவன் மேற்கொள்கிறாரா? என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பில் இருந்தது. 2011 தேர்தலில் அண்ணா திமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சியான தேமுதிக, 2016 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போதுதான் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, திமுக-தேமுதிக கூட்டணி பழம் நழுவி பாலில் விழும் நிலையில் உள்ளது. எப்போது விழும் என்பதை கூற முடியாது என கூறியிருந்தார்.

மக்கள் நலக் கூட்டணி: ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) முன் முயற்சியால் சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, தேமுதிக, தமாகா என அண்ணா திமுக, திமுக தவிர்த்த இதர கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கின. தேமுதிக தலைவரான மறைந்த விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது இந்த கூட்டணி. அத்துடன் ஆட்சியை எப்படியும் கைப்பற்றுவோம்; ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை அமைச்சரவை இலாகா என்கிற ரேஞ்சில் பேசிக் கொண்டிருந்தன மக்கள் நலக் கூட்டணி கட்சிகள்.
திமுகவுக்கு தோல்வியை தந்த 2016: ஆனால் 2016 தேர்தலில் 1% வாக்கு வித்தியாசத்தில் அண்ணா திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணா திமுகவுக்கு 134 இடங்களும் திமுகவுக்கு 98 இடங்களும் கிடைத்தன. 2016-ல் அண்ணா திமுக மீது அதிருப்தி இருந்த போதும் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் பெரும்பாலான கட்சிகள் திமுகவை விட்டு வெளியேறி தனி அணி அமைத்ததால் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பறிகொடுத்தது என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
காணாமல் போன மநகூ: 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுடன் மக்கள் நலக் கூட்டணி காணாமல் போனது. அந்த கூட்டணிக்குப் போன தேமுதிக இருக்கிற இடமே தெரியாமல் போனது. 2021 சட்டசபை தேர்தலில் தேமுதிக, தமாகா தவிர விசிக, இடதுசாரிகள், மதிமுக அனைத்தும், திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தன. 2024 லோக்சபா தேர்தலிலும் திமுக தலைமையிலேயே இந்த கட்சிகள் கூட்டணியில் நீடித்தது.
அதிமுக- விசிக தொடரும் நெருக்கம்: இந்த நிலையில்தான் திடீரென விசிக நடத்தும் கள்ளக்குறிச்சி மது ஒழிப்பு மாநாட்டுக்கு அண்ணா திமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம்; மக்கள் பிரச்னைகளுக்காக எந்த சக்தியோடும் இணைவோம் என கூறியிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே அண்ணா திமுகவுடன் விசிக நெருக்கம் காட்டித்தான் வருகிறது. பாஜக கூட்டணியை அண்ணா திமுக முறித்த போது, திருமாவளவன் மருத்துவமனையில் உடல்நலன் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். பாஜக கூட்டணியை முறித்த 2 நாட்களிலேயே திருமாவளவனை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது முதலே விசிக- அதிமுக உறவு குறித்து பேசப்பட்டு வருகிறது. தற்போது திமுக கூட்டணியில் இருந்து கொண்டே அண்ணா திமுகவையும் மாநாட்டுக்கு திருமாவளவன் அழைத்திருப்பது ஒரு முடிவை வெளிப்படுத்துகிற தொடக்கம்தான் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதாவது திமுக கூட்டணியை விட்டு வெளியேற தயாராகிவிட்டோம் என்பதுதான் இந்த அண்ணா திமுகவுக்கான விசிகவின் அழைப்பு.
மநகூ புதிய வெர்சன்: திமுக கூட்டணியில் இருந்து வெளியேற விசிக முடிவு எடுத்துவிட்டது. இதே பாணியில் மதிமுக, இடதுசாரிகளையும் திமுக அணியில் இருந்து வெளியேற்றி அண்ணா திமுக பக்கம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை திருமாவளவன் முன்னெடுக்க வாய்ப்பு அதிகம். லோக்சபா தேர்தலின் போதே திமுக மீது வெளிப்படையான அதிருப்தியை மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ கொட்டியிருந்தார். மேலும் பாஜகவுடன் திமுக நெருக்கம் காட்டுகிறது என்கிற விமர்சனத்தை முன்வைத்து இடதுசாரிகளையும் இழுக்க திருமாவளவன் முயற்சிக்கக் கூடும். அதாவது 2016-ல் தேமுதிகவை முன்வைத்து கட்டமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணியின் 2.0 புதிய வெர்சனாக தற்போது அதிமுக தலைமையில் புதிய மக்கள் நலக் கூட்டணிக்கான முன்னோட்டம் தொடங்கிவிட்டது என்பதைத்தான் திருமாவளவன் வெளிப்படுத்தி வருகிறார். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி பலவீனப்படும்; 2026 தேர்தலில் கடும் பாதிப்பையும் எதிர்கொள்ளும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications