"எந்த மேடையில் நின்றாலும் சிறுத்தை சிறுத்தைதான்" பிரதமர் மோடி உடன் திருமா பங்கேற்றது பற்றி வன்னிஅரசு
சென்னை: "எந்த மேடையில் நின்றாலும் சிறுத்தை சிறுத்தையாகவே களமாடுவோம்" என வன்னி அரசு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி உடன் ஒரே மேடையில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். விழா மேடையில் பிரதமர் மோடியுடன் தமிழக அரசு சார்பில் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் சிதம்பரம் எம்.பி. திருமாவளவன், மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.
பிரதமர் மோடி உடன் ஒரே மேடையில் திருமாவளவன்
தொடர்ச்சியாக மத்திய பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசி வரும் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, பிரதமர் மோடி உடன் ஒரே மேடையில் பங்கேற்றிருப்பது பரவலாக கவனம் ஈர்த்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் திமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இச்சூழலில் திருமாவளவன் பிரதமர் மோடியுடன் விழாவில் பங்கேற்றுள்ளார்.
இந்த விழாவில் பங்கேற்றது தொடர்பாக பேசிய திருமாவளவன், "நம் வீட்டு நிகழ்ச்சிக்கு பிரதமர் வருகிறார். அவரை வரவேற்க வேண்டியது தமிழர்களின் மரபு. அந்த வகையிலேயே தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், இந்த மண்ணின் மைந்தன் - மண்ணுக்கு உரியவன் என்ற முறையிலும் அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்றார்.
ராஜேந்திர பாலாஜி விமர்சனம்
இந்நிலையில், பிரதமர் மோடியுடன் விசிக தலைவர் திருமாவளவன் மேடையைப் பகிர்ந்து கொண்டது பற்றி பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை. பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மீது வைத்திருக்கின்ற புகழையும், பெருமையையும் தெரிந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் திருமாவளவன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பாரதப் பிரதமரை வரவேற்றது சிறப்புக்குரியது, போற்றுதலுக்குரியது." எனத் தெரிவித்தார்.
வன்னி அரசு பதில்
இந்நிலையில் இதற்கு பதில் கொடுத்துள்ள விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு, "சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜெயங்கொண்டம் சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவில் இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் என்ற முறையில் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எமது விடுதலைச் சிறுத்தைகள் பேரியக்கத்தின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். இதில் எந்த அரசியலும் இல்லை.
தொகுதியில் நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்பது மரபாகவும்
நாகரீக அரசியலாகவுமே விடுதலைச் சிறுத்தைகள் பார்க்கிறோம்.
ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள்,
"பிரதமர் மேடையில் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை" என்று சொல்லியிருக்கிறார். இதில் எந்த திருப்புமுனையும் இல்லை.
சிறுத்தை சிறுத்தை தான்
விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் சனாதன எதிர்ப்பில் சமரசம் செய்யவே மாட்டோம். சனாதனத்தை நிறுவ முயலும் பாஜகவுடன் அரசியல் ரீதியான எந்த உறவும் வைக்க மாட்டோம் என எமது தலைவர் பிரகடனப்படுத்திய பிறகும் ஒருவித குழப்பம் மற்றும் நம்பிக்கையற்ற சூழலிலே அதிமுக இருப்பதை ராஜேந்திர பாலாஜி உணர்த்துகிறார்.
எந்த மேடையில் நின்றாலும் சிறுத்தை சிறுத்தையாகவே களமாடுவோம். 2026 ல் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத அளவுக்கு அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் தோற்கடிப்பார்கள் என்பது உறுதி. தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்துவரும் அதிமுக - பாஜகவை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications