வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்!
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து தவாக வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளது தொடர்பாக பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார். வேல்முருகன் வெளியேறி இருப்பது குறிப்பிட்ட பகுதிகளில் திமுகவுக்கு இழப்பு என்று கூறிய தராசு ஷ்யாம், முதல்வர் ஸ்டாலின் சமாதானம் செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் இருப்பதாக கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 32 நாட்களே இருக்கும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து தவாக விலகி இருக்கிறது. திமுகவிடம் வைத்த கோரிக்கைகள் ஏற்கப்படாததால், கூட்டணியில் இருந்து விலகுவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். வட மாவட்டங்களில் கணிசமான வன்னியர் வாக்கு வங்கியை வைத்துள்ள வேல்முருகன் வெளியேறி இருப்பது திமுகவை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், வேல்முருகன் விலகியது அந்தப் பகுதியில் இருக்கும் திமுகவினருக்கு கவலையை கொடுத்திருக்கும். ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் பார்த்தால் பெரிய இழப்பு இல்லை. அதேபோல் வேல்முருகன் பாஜக கூட்டணிக்கு செல்ல மாட்டேன் என்றும் கூறிவிட்டார். அதனால் தனியாக போட்டியிட வேண்டிய சூழல் வரும்.
இதற்கு முன் தனியாக வேல்முருகன் போட்டியிட்ட போது பெரிய வெற்றியை பெற முடியவில்லை. திமுகவிடம் வேல்முருகன் கோரிய தொகுதிகள் அவர்களுக்கு எடுபடவில்லை. வன்னியர்களின் முகமாக இருப்பதால், அந்த வாக்கு வங்கியை பாதிக்கும். வேல்முருகன் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் வாக்காளர்கள் சீட் கிடைக்காததால் இப்படி பேசுகிறார் என்றே நினைப்பார்கள்.
முதல்வர் ஸ்டாலின் ஆர்எஸ்எஸ் அதிகாரிகளின் பேச்சை கேட்கிறார் என்று எந்த அதிகாரியை மனதில் வைத்து சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை. தமிழ்நாட்டின் அதிகார வர்க்கத்தில் ஆர்எஸ்எஸ்-ல் இருந்து வந்த மூத்த அதிகாரிகள் யாரும் இல்லை. என்ன ஐடியாவில் சொல்கிறார் என்று தெரியவில்லை. நெய்வேலி தொகுதி பற்றி பேசுவது புரிகிறது.
வேல்முருகனுக்கு 55, 56 வயது தான் இருக்கும்.. ராமதாஸ் தரப்பு சசிகலா கூட்டணியுடன் சென்றுவிட்டது.. அன்புமணி தரப்பு அதிமுக பக்கம் சென்றுவிட்டது.. இதனால் வேல்முருகன் திமுக பக்கம் இருந்திருந்தால் பலன் இருந்திருக்கும். அவர்கள் வாக்கு வங்கி எண்ணிக்கை அடிப்படையில், தொகுதி பங்கீட்டில் பிரச்சனை இருக்கலாம். திமுகவில் தொகுதி பங்கீட்டில் பிரச்சனை அதிகமாக உள்ளது.
இனியும் வேல்முருகன் மீண்டும் திமுகவுக்கு செல்வாரா? முதல்வர் ஸ்டாலின் அழைத்து சமாதானம் செய்வாரா என்று தெரியவில்லை. இருந்தாலும் வேல்முருகன் செல்வது வட மாவட்டங்களில் திமுகவுக்கு இழப்பு தான் என்று தெரிவித்துள்ளார். தராசு ஷ்யாமின் கருத்தை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வேல்முருகனை அழைத்து சமாதானம் செய்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications