"மகளிர் உரிமைத்தொகை" ரெடியா இருங்க.. அதிகாரிகள் வந்துகிட்டு இருக்காங்க.. பணிகளை தீவிரப்படுத்திய அரசு
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது. வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியில் தன்னார்வலர்கள், கல்வித்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், மாதம் தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. திமுக தேர்தல் அறிக்கையில் மிகவும் கவனம் பெற்ற அறிவிப்பாக இது இருந்தது. திமுக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இதை வைத்து எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை விமர்சிக்க தொடங்கின.

மக்களும் இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது தொடங்கப்பட உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தருமபுரியில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன. முதற்கட்ட முகாம் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபற்றது. இந்த விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், விடுபட்ட நபர்களுக்காக சிறப்பு முகாமும் மூன்று நாட்கள் நடைபெற்றது. மொத்தத்தில் தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பயன் பெறுவதற்காக 1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசிடம் உள்ள ஆதார் விவரம், வருமான வரித்துறை, மின்கட்டண தரவுகளின் அடிப்படையில் சரிபார்க்கப்பட இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணியில் திட்டத்திற்கான தன்னார்வலர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் சரியானதுதானா என்பதை அப்போது ஊழியர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த மாத இறுதிக்குள் அரசிடம் இறுதி பட்டியல் ஒப்படைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் தங்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உள்ளதா? அல்லது நிராகரிக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லும் தகவலாக உள்ளது. ஒருவேளை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம் என்றும், அந்த விண்ணப்பங்கள் மீண்டும் ஆய்வு செய்து, தகுதியானவர்களாக இருந்தால் உரிமைத்தொகை அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications