“தாய் கழகத்தில் பெருமகிழ்ச்சியோடு இணைந்துள்ளேன்”.. திமுகவில் இணைந்த பிறகு ஓபிஎஸ் பேட்டி!
சென்னை: "திமுகவில் இணைந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்" என ஓ பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். "தமிழ்நாட்டில் 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை நடத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின். தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார்" என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று (பிப்ரவரி 27) சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான அய்யப்பன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் அவர் மீண்டும் போடி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், திமுகவில் இணைந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம், "திமுகவில் பெருமகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன். பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த
தாய் கழகமான திமுகவில் ஒரு தொண்டனாக தான் இணைந்து இருக்கிறேன். கழகத்தின் வெற்றிக்கு தொடர்ந்து பாடுபடுவேன்.
பேரறிஞர் அண்ணா, கலைஞர் காட்டிய வழியில், முதலமைச்சர் ஆனதில் இருந்து சாதி, மத பேதம் இல்லாமல் அனைத்து மக்களையும் அரவணைத்து எல்லாருக்கும் திட்டங்கள் சென்று சேரும் வகையில் தாயுள்ளத்தோடு ஆட்சி நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும், பெண்களும், தாய்மார்களும் மீண்டும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை நடத்தியுள்ளார் ஸ்டாலின். தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார்." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications