அரசியலில் எதிர் துருவங்கள்.. பல ஆண்டுகால வழக்கு.. பகைமை மறந்து.. சைதை துரைசாமிக்கு முதல்வர் ஆறுதல்
சென்னை: எதிரியாக இருந்தாலும் பகைவராக இருந்தாலும் நல்லது கெட்டதுகளில் பங்கெடுக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். பகைமை மறந்து துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று ஆறுதல் சொல்வது தமிழகத்தின் பண்பாடு. அப்படித்தான் முதல்வர் ஸ்டாலின் அரசியல் பகைமை மறந்து சைதை துரைசாமியின் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இயற்கையையும் விலங்குகளையும் படம் எடுப்பதற்காக, தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேசத்துக்கு சென்றார். மலைப்பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை ஒட்டி இருந்த சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்து மூழ்கியது. இந்த விபத்தில் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

வெற்றி துரைசாமி தண்ணீரில் மூழ்கி மாயமானார். அவரது உடலை பல நாட்களாக தேடி வந்த நிலையில் திங்கட்கிழமையன்று 12ஆம் தேதி பாறைக்கடியில் இருந்து மீட்கப்பட்டது. இதனையடுத்து வெற்றி துரைசாமியின் உடல், ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் நேற்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் வெற்றி துரைசாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. வெற்றி துரைசாமி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோரும் சென்று அஞ்சலி செலுத்தினர். மகன் உடல் அருகில் உடைந்து போன உள்ளத்தோடு சோகமாக அமர்ந்திருந்த சைதை துரைசாமியின் கைகளை பிடித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
சைதை துரைசாமியும் முதல்வர் ஸ்டாலினும் பல ஆண்டுகாலமாகவே அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக பயணம் செய்து வருகின்றனர். கடந்த 2011ஆம் ஆண்டு கொளத்தூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் அப்போதய துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சைதை துரைசாமி வேட்பாளராக களமிறங்கினார்.
அந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவானார் ஸ்டாலின். இதில் மு.க.ஸ்டாலின் 68,677 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். சைதை துரைசாமி 65,943 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார். தேர்தலில் தோல்வியடைந்த சைதை துரைசாமி, ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், 'தேர்தலின்போது மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் பொறுப்பில் இருந்ததால், அவர் தேர்தல் வெற்றிக்காக தனது பதவிக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தினார். பண பலம், ஆள் பலம், அதிகார பலம் ஆகியவற்றின் மூலம் தேர்தலில் ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டதால்தான் அவரால் வெற்றி பெற முடிந்தது. எனவே, அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
பல ஆண்டுகாலம் இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. முடிவில் இவ்வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி எம்.வேணுகோபால், சைதை துரைசாமி தரப்பில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என தீர்ப்பளித்தார். பின்னர் சைதை துரைசாமி சார்பில் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இப்படி அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும் சைதை துரைசாமி வீட்டில் ஒரு துக்கம் என்ற உடன் ஓடோடி சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். மகனை இழந்து தவிக்கும் சைதை துரைசாமிக்கும் ஆறுதல் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications