சென்னையில் ஸ்டாலினை சந்தித்து பேசிய சுதர்சன் ரெட்டி.. திமுக கூட்டணி தலைவர்களிடம் ஆதரவு கோரினார்
சென்னை: குடியரசு துணை தலைவருக்கான தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி தங்களின் வேட்பாளர்களை களமிறக்கிவிட்டது. தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ளது. இந்நிலையில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று தமிழ்நாடு வருகை தந்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள், எம்பிக்களை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் மக்கள் ஆட்சியை காப்பாற்ற சுதர்சன் ரெட்டியை ஆதரிக்க வேண்டும் என்று கூறினார்.
குடியரசு துணை தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி புதிய குடியரசு துணை தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசு துணை தலைவர் தேர்தல்
இந்தியா கூட்டணி சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதை கருத்தில் கொண்டு பாஜக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மறுபக்கம் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசக் கட்சியை ஈர்ப்பதற்காக ஆந்திராவைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டியை இந்தியா கூட்டணி முன்னிறுத்தியுள்ளது.
இரண்டு பேருமே தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள். பிரதான வேட்பாளர்களான இவர்கள் இருவரும் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் மாநிலம் வாரியாக சென்று ஆதரவு திரட்ட தொடங்கியுள்ளனர். அதன்படி சுதர்சன் ரெட்டி இன்று தமிழ்நாடு வந்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து அவர் தன் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
ஸ்டாலினை சந்தித்தார் சுதர்சன் ரெட்டி
சென்னை வந்த சுதர்சன் ரெட்டி, இன்று மாலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை தியாகராயநகரில் சந்தித்து பேசினார். அப்போது சுதர்சன் ரெட்டி துணை குடியரசு தேர்தலில் ஆதரவு தர ஸ்டாலினிடம் கோரினார்.
இதன்பிறகு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், எம்பிக்கள் கூட்டத்தில் சுதர்சன் ரெட்டி கலந்துகொண்டார். இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனினிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
திராவிட தலைவர்கள், தமிழ் மொழி, அதன் கலாச்சாரத்தை வணங்குவதாக சுதர்சன் ரெட்டி கூறினார். முதல்வர் ஸ்டாலினும் மக்கள் ஆட்சியை காப்பாற்ற சுதர்சன் ரெட்டியை ஆதரிக்க வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications