சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் முன்னோடி.. தமிழ்நாடு காவல்துறைக்கு வெங்கையா நாயுடு பாராட்டு!
சென்னை: நாட்டிலேயே தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவர் கொடி வழங்கும் விழா எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் காவல் துறை சார்பில் வெங்கையா நாயுடுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜிவால் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

வெங்கையா நாயுடு பேச்சு
பின்னர் குடியரசுத் தலைவர் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வெங்கையா நாயுடு வழங்கினார். இதனைத்தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழில் உரையை தொடங்கினார். அவர், தமிழக காவல்துறையுடன் சென்னையில் இருப்பது மகிழ்ச்சி. வாழ்நாள் முழுவதும் என்னை சென்னை நகரம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நாட்டில் உள்ள சிறந்த காவல்துறையில், தமிழக காவல்துறையும் ஒன்று. குடியரசுத் தலைவரின் கொடியை பெற்றதற்காக தமிழக காவல்துறைக்கு எனது வாழ்த்துகள்.

மகளிர் காவலர்கள்
நாட்டிலேயே அதிக மகளிர் காவல் நிலையங்கள் தமிழகத்தில் தான் இருக்கிறது. அதேபோல் மகளிர் காவலர்களில், அதிக எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இது மாபெரும் பெருமை. நீண்ட பண்பாடு, கலாச்சார கொண்ட இந்திய நாட்டில், மகளிருக்கு சரிபாதி இடமளிப்பது பெருமையளிக்கிறது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருக்கிறது. சைபர் பிரிவுக்கு என்று தனி காவல் நிலையங்கள், ஆன்லைன் மோசடிகளுக்கு என்று தனிப்பிரிவு என தமிழக காவல்துறை முன்னோடியாக இருக்கிறது. அதேபோல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை அண்மையில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து நமது நாட்டின் பாரம்பரிய சிலைகளை மீட்டுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட்
அதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுவதும், தமிழ் பாரம்பரியத்தை அதன் மூலம் வெளி உலகத்திற்கு காட்டியது பெருமையாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மிகவும் அவசியம். அதில் தமிழ்நாடு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று பாராட்டு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications