மலைபோல நம்பினாங்களே மயில்சாமி அண்ணாதுரை-தான் வேட்பாளர்னு.. சுதர்ஷன் ரெட்டியை கொண்டுவந்த "இந்தியா"
சென்னை: ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவால் தன்னுடைய துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்ற ஆலோசனை நடந்தது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியா கூட்டணியில் இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்ஷன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் 16வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.. ஆனால், இன்னும் 2 வருடங்கள் ஜெகதீப் தன்கருக்கு பதவிக்காலம் உள்ள நிலையில், கடந்த மாதம் 21ந் தேதி திடீரென தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

ஆயத்த பணிகள்
உடல் நிலை காரணமாக பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில், அவரது அந்த கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஏற்றுக்கொண்டார்... இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் கமிஷன் துவங்கியதுடன், புதிய துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9ந் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் துணை ஜனாதிபதி பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக களம் காண்கிறார்.
மீண்டும் ஆலோசனை கூட்டம்
அதேபோல, எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்தக்கூடும் என பேசப்படுகிறது. இதுபற்றி முடிவு எடுப்பதற்காக இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்கள். இந்தியா கூட்டணி சார்பில் யாரை வேட்பாளராக தேர்வு செய்யலாம் என்று மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது..
இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முழு அதிகாரம் வழங்கி கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்ட நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக எம்.பி. கனிமொழி, சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விவாதித்தனர்.
இன்று வேட்பாளர் பெயர் அறிவிப்பு
நேற்றிரவு 8 மணிவரை ஆலோசனை நீடித்த நிலையில், தலைவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் இன்றும் நீடிக்க உள்ளதாகவும், தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இன்று மதியம் 12:30 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் கசிந்தன.
இதற்காக எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சிலரது பெயர்கள் அடிபட்டன.. . முக்கியமாக, திருச்சி சிவா, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோரது பெயர்களும் பேசப்பட்டது... போட்டியிட்டால் அரசியல் பிரமுகர்களை தவிர்த்து பிற நபர்களை நிறுத்த வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டதாகவும் தெரிகிறது.
யாருக்கு மெஜாரிட்டி
நாளை மறுநாள் ஆகஸ்ட் 21 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி என்பதால், இன்று வேட்பாளரின் பெயரை வெளியிட இந்தியா கூட்டணி திட்டமிட்டிருந்ததால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது..
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி சார்பில் போட்டி வேட்பாளராக முன்னாள் சுப்ரீம்கோர்ட் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி ஒரு மனதாக தேர்வு செய்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார்.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, லோக்சபாவில் 293, ராஜ்யசபாவில் 130 எம்பிக்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு, லோக்சபாவில் 234, ராஜ்யசபாவில் 79 எம்பிக்கள் உள்ளனர். இதன்படி, பாஜக கூட்டணிக்கு 423 எம்பிக்களின் ஆதரவு இருப்பதால், அக்கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதற்கு சாத்திய கூறுகள் உள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications