வெற்றியும் தோல்வியும் தற்காலிகம்.. வெற்றிக்கு இரண்டு வழிகள்..மாணவர்களுக்கு அமைச்சர் பிடிஆர் அட்வைஸ்
சென்னை: உலகத்தில் யாருமே என்றைக்கும் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றவர்கள் கிடையாது. தோல்வியே காணாதவர்களும் கிடையாது. உங்கள் வாழ்க்கையில் ஏற்றத்தையும் சந்திப்பீர்கள் சில நேரத்தில் இக்கட்டான சூழலை சந்திப்பீர்கள் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசினார்.
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். பின்னர் இந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பிடிஆர் பேசியதாவது: -

தமிழ்நாட்டில் கல்வி என்பது ஜனநாயகமானதாக உள்ளது. இதன் காரணமாக இன்று நூற்றுக்கணக்கான என்ஜினியரிங் கல்லூரிகளும் ஆண்டுக்கு லட்ச்கணக்கான மாணவர்கள் என்ஜினியர்களாகவும் பட்டம் பெறுகிறார்கள். தமிழக அரசு நான் முதல்வன் என்ற திட்டத்தின் வாயிலாக அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு உயர்கல்விக்கான ஆலோசனை முகாமை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் திறமையான தகுதிவாய்ந்த நபர்கள் பல துறைகளிலும் பணி செய்து வருகிறார்கள்.
உலகத்தில் யாருமே என்றைக்கும் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றவர்கள் கிடையாது. தோல்வியே காணாதவர்களும் கிடையாது. உங்கள் வாழ்க்கையில் ஏற்றத்தையும் சந்திப்பீர்கள் சில நேரத்தில் இக்கட்டான சூழலை சந்திப்பீர்கள். அது அனைவருக்கும் வருவதுதான். இதுதான் இயல்பு..இயற்கை. வெற்றியும் தோல்வியும் தற்காலிகமானது. வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவதற்கு விடா முயற்சி மற்றும் துணிச்சல் தேவை. இந்த இரண்டும் ஒருவரிடம் இருக்கிறதா, இல்லையா என்பதே வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்களுக்கும், வெற்றி பெறாதவர்களுக்கும் உள்ள வேறுபாடு ஆகும்
பட்டம் பெறும் நீங்கள் நாட்டிற்கும், வீட்டிற்கும், மனித சமுதாயத்திற்கும் கற்ற கல்வியை கொண்டு உதவிகளை செய்ய வேண்டும். உங்களுக்கு கற்று கொடுத்த ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரிகளை மறந்து ஒருநாளும் மறந்து விடக்கூடாது. நீங்கள் சமுதாயத்துக்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை செய்ய வேண்டும்" என்றார்.
முன்னதாக தமிழக அமைச்சரவையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சிறிய மாற்றம் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வைரலாகியது.
அதில் திமுகவினர் மீதே குற்றச்சாட்டு வைக்கும் விதமாக பேச்சுகள் இடம் பெற்றிருந்தது. எனினும் இது ஜோடிக்கப்பட்டது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்து இருந்தார். எனினும், அமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோ சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு அடுத்த சில நாட்களில் நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்தும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாற்றம் செய்யப்பட்டார்.
அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆடியோ விவகாரம் காரணமாக பழனிவேல் தியாகராஜன் இலாகா மாற்றப்பட்டதாக விமர்சனம் செய்து இருந்தனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இவ்வாறு கூறியிருந்தார். அதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக அமைச்சரவையில் உள்ள நிதி அமைச்சரே 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று ஆடியோ மூலம் குறிப்பிட்டுள்ளது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதை திசை திருப்பவே இலாக்கா மாற்றம் அமைச்சர் மாற்றம் என்று செய்துள்ளனர்" என்று கூறியிருந்தார். எனினும், இந்த விமர்சனங்களை எல்லாம் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கண்டு கொள்வதில்லை. நிதித்துறையில் சாதித்தது போலவே புதிய துறையிலும் சாதிப்பார் என்று அவரது திமுகவினர் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications