"ஜோசியக்காரர் சொன்னாரே" விஜயின் கயிறும் ராகுலின் கேக்கும்! விடியல் பயணம் மட்டும் இல்லேனா? லியோனி நச்
சென்னை: திமுக பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் ஐ. லியோனி ஆற்றிய உரை, தற்போதைய அரசியல் சூழலில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய் மீதான கடுமையான நிர்வாக ரீதியான விமர்சனங்களும், அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் நகர்வுகள் குறித்த லியோனியின் சாடல்களும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. லியோனியின் உரையில் இடம்பெற்ற முக்கிய பகுதிகளை சுருக்கமாக பார்க்கலாம்.
தமிழக முதலமைச்சர் விஜய் ஜோதிடத்தை நம்பித்தான் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார். எம்.ஜி.ஆர் காட்டிய வழியைப் பின்பற்றுகிறேன் என்ற பெயரில், விவசாயிகள் மேட்டூர் அணைக்காகக் காத்துக்கொண்டிருக்கும் வேளையில் அவர் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று ஆன்மிகத்தில் மூழ்கியிருக்கிறார்.

நெற்றியில் கருப்பு பொட்டு, சிவப்பு கயிறு
நெற்றியில் வைத்துள்ள கருப்புப் பொட்டும், வலது கையில் கட்டியுள்ள சிவப்புக் கயிறும் ஜோசியக்காரர் சொன்னார் என்பதற்காகத்தான். ஆனால், அங்கேயும் அறியாமல் எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருப்புச் சிவப்பு வண்ணங்களைத்தான் அவர் சூடியிருக்கிறார்.
அமைச்சரவை பெரும் குழப்பத்தில் உள்ளது. முதலமைச்சருக்கே தன் அமைச்சர்களின் பெயர்கள் வரிசையாகத் தெரியவில்லை. அமைச்சர்களுக்குத் தங்கள் துறை என்னவென்று புரியவில்லை.
6 சிலிண்டர் இலவசம்?
தேர்தல் பிரச்சாரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியே பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம்" மற்றும் "ஆறு சிலிண்டர் இலவசம்" என்று கூறி மக்களை ஏமாற்றியிருக்கிறார். வண்டி வரும் ஆனால் வராது என்று தெரிந்தும் ஏமாந்த நடிகர் வடிவேலுவின் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் விஜய் சென்னை கோட்டையை ஒரு செட்டிங் போல போட்டு, முதலமைச்சராக சூட்டிங்கில் நடித்துக் கொண்டிருக்கிறாரே ஒழிய, தலைவர் ஸ்டாலினைப் போல மக்கள் நலனுக்கான முத்தான கையெழுத்துகளைப் போடவில்லை.
விடியல் பயணம் & இலவச கட்டணம்
தமிழகத்தில் உள்ள சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் இன்று அரசுப் பேருந்துகளில் விடியல் பயணம் என்ற திட்டத்தின் மூலம் கட்டணமில்லாமல் இலவசமாகப் பயணம் செய்யும் ஒவ்வொரு தருணத்திலும், தமிழ்நாட்டை உண்மையில் ஆட்சி செய்து கொண்டிருப்பவர் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்.
கடந்த காலங்களில் கலைஞர், பேருந்துகளை அரசுடைமையாக்கி வழிவகை செய்யாமல் போயிருந்தால், இன்று இந்த முதலமைச்சர் இப்படிப்பட்ட இலவசப் பேருந்து திட்டங்களை அறிவிக்கவோ அல்லது செயல்படுத்தவோ முடியுமா?
முதுகில் குத்திய காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி திமுகவின் முதுகுக்குப் பின்னால் குத்திவிட்டது. நாடாளுமன்றத்தில் மோடியை ராகுல் காந்தி திடீரெனக் கட்டிப்பிடித்துக் கண்ணடித்த போதே, அவர் பாஜகவை ஜெயிக்க வைக்கப் போகிறார் என்பதைத் கணித்துவிட்டேன் . பீகார் (தேஜஸ்வி யாதவ்), மேற்கு வங்கம் (மம்தா பானர்ஜி), உத்தரப் பிரதேசம் (முலாயம் சிங் யாதவ்) போன்ற மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்குக் காங்கிரஸ் உரிய ஒத்துழைப்பு தராததே அங்கெல்லாம் பா.ஜ.க எளிதாக ஆட்சியமைக்கக் காரணமாக அமைந்தது.
காங்கிரஸே முன்மொழியத் தயங்கிய காலத்தில், ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளர் என்று முதன்முதலில் துணிச்சலாக அறிவித்தவர் நம் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான். அதற்குப் பரிசாகக் கோயம்புத்தூரில் ராகுல் காந்தி ஓடிச் சென்று கேக் வாங்கி வந்து, 'ஸ்டாலின் என் அண்ணன்' என்று கட்டிப்பிடித்த காட்சிகள் எல்லாம் எங்கே போயின?
கூட்டணி கட்சிகள் தங்களைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றாலும், கபடி விளையாட்டில் அனைத்து ஆட்டக்காரர்களும் அவுட் ஆன பின்பு ஒரே ஒரு வீரன் மட்டும் களமிறங்கி ஒட்டுமொத்த எதிரணியையும் வீழ்த்தி வெற்றி பெறுவதைப் போல, மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் தனித்து நின்று வரவிருக்கும் தேர்தல்களில் உதயசூரியனை மீண்டும் உதிக்க வைப்பது உறுதி" என்றெல்லாம் லியோனி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications