"கேரவனின் சிசிடிவி காட்சிகள்தானே வேணும்? உங்கள் விஜய் நா தரேன்" போலீஸிடம் ஒப்புக் கொண்ட தவெக தலைவர்
சென்னை: கரூரில் தவெக பரப்புரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் பரப்புரை வாகனத்தின் சிசிடிவி காட்சிகளை காவல் துறையிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டிருந்த நிலையில் அவற்றை கொடுக்க விஜய் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்துவிட்டனர். இதில் சின்னஞ்சிறு குழந்தைகளும் பெரியவர்களும் அடங்குவர். இவர்கள் தாங்கள் எதற்காக இறந்தோம் என்றே தெரியாமல் இறந்துவிட்ட சோகம் நடந்துள்ளது.

இந்த நிலையில் ரோடு ஷோக்களுக்கு நெறிமுறைகளை வகுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் மீதும் கட்சி மீதும் நீதிபதி சரமாரி விமர்சனங்களை முன் வைத்தார்.
அதில் "நடிகர் விஜய் பயணித்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகின. இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? நீதிமன்றம் கண் மூடி வேடிக்கை பார்க்க முடியாது.
வீடியோக்களை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா, hit and run வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை. வழக்குப் பதிவு செய்ய என்ன தடை, புகார் இல்லாவிட்டாலும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
கரூர் நிகழ்ச்சியில் தொண்டர்கள், ரசிகர்கள், மக்கள் உள்ளிட்டோரை அப்படியே விட்டுவிட்டு பொறுப்பற்ற முறையில் தலைவர் விஜய் அந்த இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். கரூர் நிகழ்ச்சியின் தலைவர் விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை என நீதிபதி கடுமையாக விமர்சித்திருந்தார்.
நீதிபதி மேலும் கூறுகையில், நாமக்கல், கரூர் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்ற இடத்தின் அத்தனை சிசிடிவி காட்சிகளையும், குறிப்பாக விஜய் சென்ற பரப்புரை வாகனத்தின் உள்ளேயும் வெளியேயும் இருந்த சிசிடிவி, பதிவுகளை சேகரிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அது போல் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் பேருந்தின் சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க விஜய் சம்மதம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் சம்பவத்தில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்பேரில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவில் எஸ்பிக்கள் விமலா, சியாமளா, தேவி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். கரூர் சம்பவம் தொடர்பான கோப்புகளை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கவும் காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications