”சார்.. என் படத்துக்கு சும்மாவே பிரச்சனை வரும்.. ஓகேவா” ஜனநாயகன் தயாரிப்பாளரிடம் முதல் நாளே கேட்ட விஜய்
சென்னை: ஜனநாயகன் படம் ஓகே ஆகும் போது நான் ஒரே ஒரு விஷயம் தான் தயாரிப்பாளரிடம் கேட்டேன்.. "சார்.. சும்மாவே என் படத்துக்கு பிரச்சனை வரும். இதுல நான் வேற டிராக்கில் போறேன்.. எப்படி சார்" என தயாரிப்பாளரிடம் பேசியதாக விஜய் கூறும் வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் வழங்கப்படுமா என்பது வரும் 9 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தெரிவிக்கும் தீர்ப்பில் தான் தெரியும் என்ற நிலையில், ரூ.500 கோடி போட்டு படம் எடுத்துள்ள கேவிஎன் படதயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணாவிடம் விஜய் முன்பாகே பேசியதாக கூறிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் வரும் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. படத்திற்கு சென்சார் வழங்கப்படவில்லை என்ற போதிலும் விஜய்யின் படம் என்பதால் தியேட்டர்களில் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் தொடங்கியது.
நேற்று காலையில் இருந்தே பல்வேறு திரையரங்குகளில் ஜனநாயகன் படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியது. இதில் பல்வேறு திரையரங்குகளில் முதல் நாளிற்கான டிக்கெட் புல் ஆகிவிட்டது. சில தியேட்டர்கள் எப்டிஎஃப்எஸ் காட்சிகளுக்கான சிறப்பு டிக்கெட்டுகள் விற்பனை ஆகி இருந்தன. இந்த நிலையில் தான் நேற்று மதியம் இன்னும் சென்சார் சான்று வழங்கப்படவில்லை என படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.
ஜனநாயகன் திரைப்படத்துக்கு கடந்த டிசம்பர் 18 ஆம் தேதியே தணிக்கை சான்று கேட்டு கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் நேற்று முன் தினம் யு / ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் சான்றிதழ் வழங்கப்படவில்லை. யு ஏ சான்றிதழுக்கு எதிராக யாரோ புகார் தெரிவித்ததால் மீண்டும் மறு தணிக்கை செய்யப்பட உள்ளதாக தணிக்கு குழு தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து கேவிஎன் படத் தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தை நாடியது.
படம் வெளியாகுமா? இல்லையா?
இந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தணிக்கை குழுவில் இருக்கும் ஒருவரே எப்படி புகார் செய்ய முடியும் என்றும், ரூ.500 கோடி போட்டு படம் எடுத்துள்ளோம். ரிலீஸ் தேதியும் அறிவித்துவிட்டோம்.. என்று படக்குழு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அப்போது நீதிபதி, இந்த வழக்கில் நடப்பது அனைத்துமே இயல்புக்கு மாறாக உள்ளது.

யு/ஏ சான்று என முடிவு செய்துவிட்ட பிறகு, மீண்டும் மறு தணிக்கைக்கு அனுப்பியது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு தணிக்கை குழு, வழக்கமான ஒன்று தான் எனவும், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்றும் விளக்கம் அளித்தது. தணிக்கை குழு உறுப்பினர் புகார் அளிப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று என பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
9 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
வழக்கமாக விண்ணப்பித்த ஒரு வாரத்தில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும். படம் பார்த்த 5 பேரில் ஒருவர் மட்டும் எப்படி புகார் அளிக்க முடியும்? என்றும் 4 பேர் ஆட்சேபம் தெரிவிக்காத நிலையில் சான்று கொடுத்து இருக்கலாமே என படக்குழு தரப்பு வாதம் செய்தது. இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை வரும் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
விஜய் பேசும் வீடியோ
இந்த நிலையில், என் படத்துக்கு சும்மாவே பிரச்சனை வரும் என தயாரிப்பாளரிடம் விஜய் பேசியதாக சொன்ன வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்து வருகிறார்கள். ஜனநாயகன் படம் ஓகே ஆகும் போது நான் ஒரே ஒரு விஷயம் தயாரிப்பாளரிடம் கேட்டேன்.. சார்.. சும்மாவே என் படத்துக்கு பிரச்சனை வரும்.

இதுல நான் வேற டிராக்கில் போறேன்.. எப்படி சார் இந்த டைமில் படம் எடுத்து பண்றீங்களா.. பரவாயில்லையா? என கேட்டேன். அவர் அத எல்லாம் யோசிக்கவே இல்ல.. உடனே பண்ணலாம் என சொல்லி.. அந்த பாசிட்டிவ் வைப்பை எல்லாம் எங்க பக்கம் திருப்பி விட்டுவிட்டார். இந்த நேரத்தில் இந்த படத்தை எடுத்து பண்ணினதற்கு ரொம்ப நன்றி சார்" இவ்வாறு விஜய் பேசியிருந்தார்.
தலைவா, மெர்சல்
மலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசிய இந்த வீடியோவை தான் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள். படக்குழு படத்திற்கு ரூ.500 கோடி செலவு செய்து இருக்கும் நிலையில் படம் வெளியாகாமல் இருந்தால் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என பலரும் கூறி வரும் நிலையில் விஜய் பேசிய இந்த வீடியோ டிரெண்ட் ஆகி வருகிறது. ஏற்கனவே விஜய்யின் தலைவா, மெர்சல் படங்களுக்கும் பிரச்சினை வந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications