Vijay: எப்போதாவது என்றால் பரவாயில்லை.. எப்பவுமே இப்படித்தான் என்றால்? இதுவரை விஜய் ரத்து செய்த பிரசாரங்கள்
சென்னை: தவெக தலைவர் விஜய் அடுத்தடுத்து பிரசாரம் மற்றும் ரோடு ஷோக்களை போலீசார் அனுமதி அளித்து இருந்தும் ரத்து செய்து வருகிறார். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் விஜய் அடுத்தடுத்து பிரசாரங்களை ரத்து செய்து வருவது தவெக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தேர்தல் அறிவிப்புக்கு பிறகு முதன் முதலாக மார்ச் 30 ஆம் தேதி சென்னையில் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு விஜய் பிரசாரத்தை தொடங்கினார். முதல் நாள் அன்றே சென்னையில் உள்ள பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் என 3 தொகுதிகளில் பிரசாரம் செய்ய போலீசாரும் அனுமதி அளித்து இருந்தனர்.

முதல் நாளே பாதியில் திரும்பிய விஜய்
ஆனால் அன்றைய தினம் பெரம்பூரில் பிரசாரம் மேற்கொண்ட விஜய் கொளத்தூரில் எதுவும் பேசாமல் அப்படியே பனையூர் திரும்பிவிட்டார். அன்றைய தினம் வில்லிவாக்கம் தொகுதியில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்று அவர் கூட்ட நெரிசல், பாதுகாப்பு குறைபாடு என்று கூறி முதல் நாளிலேயே பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு பனையூருக்கு புறப்பட்டார்.
வில்லிவாக்கம், தி நகர்
சரி முதல் நாள் தான் அப்படி, அடுத்தடுத்த நாட்களில் விஜய் தீவிரமாக பிரசாரம் மேற்கொள்வார் என்று எதிர்பார்த்த தவெகவினருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தார் விஜய். போலீசார் அனுமதி அளிக்கவில்லை என கூறி பிரசாரத்திற்கே வராமல் இருந்தார். பின்னர் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு அங்கு பிரசாரம் செய்தார்.
இதையடுத்து மீண்டும் வில்லிவாக்கம் மற்றும் தி நகரில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு கடந்த 6 ஆம் தேதி நடத்திக் கொள்ள போலீசாரும் அனுமதி அளித்து இருந்த நிலையில் விஜய் இந்த பரப்புரையை ரத்து செய்தார். அதற்கு அடுத்த நாள் புதுவையில் பல்வேறு இடங்களில் ரோடு ஷோ மற்றும் பரப்புரை மேற்கொண்ட விஜய் சில இடங்களுக்கு செல்லாமலே மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார்.
நெல்லை, தூத்துக்குடி
இதற்கு பிறகு விஜய் கடந்த 8 ஆம் தேதி நெல்லை மற்றும் தூத்துக்குடியில் விஜய் பிரசார பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோவில் பங்கேற்றார். தூத்துக்குடியில் பல்வேறு இடங்களுக்கு செல்வதாக இருந்த விஜய் 6 மணி ஆனதும், மீதமுள்ள இடங்களுக்கு செல்லாமல் ரோடு ஷோவை பாதியில் ரத்து செய்துவிட்டு மீண்டும் சென்னைக்கே புறப்பட்டார். விஜய் வருவார் என்று காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
காரைக்குடியில் பேசாமல் திரும்பிய விஜய்
இதன் பிறகு விஜய் சீமான் போட்டியிடும் தொகுதியான காரைக்குடியில் பிரசாரம் மேற்கொள்ள இருந்தார். ஆனால் வரும் வழியில் சைக்கிள் ஓட்டியது, ஆங்காங்கே ரோடு ஷோ என அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்த பிறகே பரப்புரை மேற்கொள்ள இருக்கும் இடத்திற்கு வந்தார். இதனால் அவர் காரைக்குடியில் எதுவும் பேசாமலேயே திரும்பி சென்றார்.
கடலூரை 2 முறை ரத்து செய்த விஜய்
இதையடுத்து கடலூரில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டிருந்தார். அப்போது போலீசார் குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி, திட்டக்குடி ஆகிய 4 இடங்களில் கடந்த 9 ஆம் தேதி விஜய் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கி இருந்தது. ஆனால் புதுவையில் தேர்தல் நடப்பதாக கூறி இந்த 4 இடங்களில் விஜய் பரப்புரையை ரத்து செய்து வேறொரு நாளுக்கு மாற்ற உத்தரவிட்டார்.
இதன்படி மீண்டும் இதே இடங்களில் கடந்த 11 ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியது. ஆனால் அப்போதும் விஜய் பிரசாரம் மேற்கொள்ளாமல் அதனை ரத்து செய்துவிட்டார். இதனால் கடலூர் மாவட்டத்திற்கு வருவார் என்று எதிர்பார்த்த தவெகவினர் ஏமாற்றம் அடைந்தனர்.
குமரியில் ரோடு ஷோவை ரத்து செய்த விஜய்
பின்னர் குமரியில் கடந்த 12 ஆம் தேதி பரப்புரை மற்றும் ரோடு ஷோ சென்றார். அன்று சில வாக்குறுதிகளை மட்டுமே பேசிய விஜய் கட்சி சார்ந்து யாரையும் விமர்சிக்கவில்லை. அன்றைய தினமும் திட்டமிட்டு இருந்த அனைத்து இடங்களுக்கும் செல்லாமல் பாதியிலேயே விஜய் சென்னை திரும்பிவிட்டார்.
திருப்பூர் சென்ற விஜய்
இதற்கு அடுத்த நாளான 13 ஆம் தேதி லீவு போட்ட விஜய், 14 ஆம் தேதி திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போதும் கட்சி சார்ந்த அறிவிப்புகள், வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்தார். அன்றைய தினமும் திட்டமிட்டு இருந்த எல்லா இடங்களுக்கும் செல்லாமல் 6 மணிக்கு பிறகு ரோடு ஷோவை கேன்சல் செய்துவிட்டு சென்னை புறப்பட்டார்.
புரசைவாக்கம் செல்லாமல் திரும்பிய விஜய்
தொடர்ந்து இன்றைய தினமும் விஜய் புரசவைவாக்கம் செல்வார் என்று கூறியிருந்த நிலையில் 6 மணி ஆனதும் பனையூர் திரும்பினார். இன்று விஜய் தி நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் வரை வந்த விஜய் புரசைவாக்கம் வரமால் திரும்பினார். திடீரென ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. எப்போதாவது என்றால் பரவாயில்லை.. எப்போதுமே இப்படித்தான் என்றால் என்ன அர்த்தம் என்ற தொனியில் தவெக தொண்டர்களும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.
ரத்து செய்த முக்கிய பிரச்சாரங்கள்:
* வில்லிவாக்கம், சிட்கோ நகர், அண்ணா நகர் பகுதிகளில் பிரச்சாரக் கூட்டங்கள்.
* கடலூர் 9 ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதி என இருமுறை பிரச்சாரம் ரத்து.
* திருவள்ளூர் (ஏப்ரல் 13) கும்மிடிப்பூண்டி பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.
* காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை போன்ற சில மாவட்டங்களில் திட்டமிட்ட பயணங்கள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications