விஜயால் 2026இல் திமுகவை வீழ்த்த முடியாது! ஆபத்து யாருக்கு? - 75 வருட தமிழக அரசியல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் அரசியல் கட்சி வருகையால் அதிகம் பாதிக்கப்படுவது யார்? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இந்த விசயத்திற்கு மிக எளிமையாகப் பதில் சொல்லலாம். திமுக 1949இல் ஆரம்பிக்கப்பட்ட போது, அந்தக் கட்சியில் நட்சத்திர தலைவர்கள் வரிசையிலிருந்தவர் மு.கருணாநிதி. அதே கட்சியின் நடிகர் வரிசையில் முதல் நபராக இருந்தவர் எம்.ஜி.ஆர்.

Vijay cannot beat DMK in 2026 elections

அந்தக் கட்சியின் பிரச்சாரத்திற்கு எம்.ஜி.ஆரின் முகம் உதவியாக இருந்தது என்பதை அண்ணாதுரையே ஏற்றுக் கொண்டார். எம்.ஜி.ஆருடன் ஒப்பிடும்போது மு.கருணாநிதி நடிகர் இல்லை. அவர் அந்தக் காலத்தில் நட்சத்திர வசனகர்த்தா.

இன்னும் சொல்லப்போனால், இரண்டாம் நிலையிலிருந்த நடிகர் எம்.ஜி.ஆரை, முதல் நிலைக்கு உயர்த்துவதற்கு உதவியாக இருந்ததே கருணாநிதியின் வசனங்கள்தான். அதை நாம் சொல்லவில்லை. எம்.ஜி.ஆரே சொல்லி இருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் முகத்தைப் பார்க்கவே பல ஆயிரம் பேர் அன்று திமுக கூட்டத்திற்குக் குவிந்தனர். எம்.ஜி.ஆர் முகத்தைப் பார்க்க எந்தளவுக்குக் கூட்டம் கூடியதோ அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் மு.கருணாநிதியின் பேச்சைக் கேட்பதற்கு திமுக தொண்டர்கள் கூடினர்.

அப்படிப்பட்ட புகழ் மிக்க எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின்னர், எம்.ஜி.ஆர் அரசியலே வேண்டாம் என நினைத்த போது அவரை ரசிகர் அரசியலுக்கு வர அழுத்தம் தந்தனர்.

Vijay cannot beat DMK in 2026 elections

அவர்களுக்காக ஒரு தொண்டர் ஆரம்பித்த கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர். அந்தக் கட்சிதான் அதிமுக. அது பிறகு தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாகவே அது மாறியது.

திமுக வளர்ச்சிக்குச் சவாலாக இருந்த முதல் நடிகர் எம்.ஜி.ஆர். ஆனால், அவர் தனிக் கட்சி ஆரம்பித்த போது திமுக ஒன்று செங்குத்தாகப் பிளவை சந்திக்கவில்லை. கட்சிக்குள் இருந்த சில தொண்டர்கள் அவர் பக்கம் சென்றனர்.

அவரது கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் வலுவான எதிர்க்கட்சியாக திமுக வெற்றி நடைபோட்டது. இன்னும் சொல்லப் போனால், எதிர்க்கட்சியாகவே இருந்த இந்தக் கட்சி தொடர்ந்து வளர்ந்தது.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் எம்.ஜி.ஆரின் அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் எம்.ஜி.ஆர் என்ற நட்சத்திர வெளிச்சத்தில் திமுக கரைந்து போகவில்லை.

அதன்பின்னர் எம்.ஜி.ஆரை தொடர்ந்து அவரது இடம் யாருக்கு என யுத்தம் வெடித்தது. ஒரு பக்கம் எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி நின்றார். அவரும் ஒரு நடிகை. அவரை எதிர்த்து மற்றொரு பக்கம் ஜெயலலிதா நின்றார். இவரும் ஒரு நடிகை.

Vijay cannot beat DMK in 2026 elections

இந்த இரண்டு நடிகைகள் தமிழக அரசியலுக்குள் புகுந்தபோதும் திமுக தனது செல்வாக்கை இழக்கவில்லை. அதன்பின்னர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ முகமாக ஜெயலலிதா வந்தார். அவர் மாபெரும் உச்ச நட்சத்திரமாக இருந்தார்.

இவர் 1990 தொடங்கி, 2016இல் மரணமடையும் வரை தமிழ்நாட்டு அரசியலில் உயர்ந்தநிலையிலிருந்தார். எந்தக் கட்சியையும் கரைத்துவிடக் கூட சூத்திரதாரியாகச் செயல்பட்டார்.

தேசிய அளவில் பாஜகவின் ஆட்சியைக்கூட ஆட்டிப் படைத்தார். வாஜ்பாயை தண்ணீர் குடிக்கவைத்தார். தன் முன் நின்றவர்களை எல்லாம் வலிமை இழக்கச் செய்தார்.

பின்னாளில் தனது கூட்டணியை எதிர்த்து வெளியேறிய விஜயகாந்த் அரசியல் வாழ்க்கையையே அஸ்தமனத்திற்குக் கொண்டு வரும் அளவுக்கு அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுத்து தேமுதிகவை நிர்மூலமாக்கினார்.

Vijay cannot beat DMK in 2026 elections

ஆனால், அவரால் திமுக என்ற கட்சியை ஒன்று இல்லாமல் ஆக்க முடியவில்லை. மு.கருணாநிதியை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆர் முதல் கடைசியாக விஜயகாந்த் வரை திமுக பார்க்காத நட்சத்திரங்கள் இல்லை. கரைகண்ட கட்சியாக அது இன்றும் வலம் வருகிறது.

தமிழக அரசியல் கட்சி வரலாற்றில் அதிமுகவை எதிர்த்த நடிகர்களை விட திமுகவை எதிர்த்த நடிகர்கள் அதிகம்.

முதலில் எம்.ஜி.ஆர் எதிர்த்தார். அவரைத் தொடர்ந்து சிவாஜி எதிர்த்தார். இவருக்குப் பின் இவரது கலையுலக வாரிசான கமல்ஹாசன் 'டார்ச் லைட்'டை ஆவேசமாக உடைத்து எதிர்த்தார். இந்த நடிகர்கள் யாராலும் திமுகவில் ஒரு சதவீத சேதாரத்தைக் கூட உண்டாக்க முடியவில்லை.

Vijay cannot beat DMK in 2026 elections

இந்த வரிசையில் இப்போது புதியதாகக் களம் இறங்கி இருக்கிறார் விஜய். அவரது அரசியல் நகர்வுகள் திமுகவுக்கு எதிராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

விஜய் மிகப் பெரிய உச்ச நட்சத்திரம் என்பதில் சந்தேகம் இல்லை. இன்றைக்கு அவருக்குப் போட்டியாக தமிழ் சினிமாவில் நடிகர் யாருமே இல்லை. அந்தளவு அவருக்குச் சந்தை இருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், ரஜினியை விடக் கமலைவிட அவரால் இன்னும் குறைந்தது 15 ஆண்டுகள் தாக்குப் பிடிக்க முடியும். விஜய்யைச் சுற்றியே திரையுலகம் இருக்கிறது.

ஒரு மணிநேரமாவது அந்த நாற்காலியில் உட்கார்ந்துவிட முடியாதா எனத் தவம் இருக்கும் நடிகர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.

Vijay cannot beat DMK in 2026 elections

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூட விஜய்யை மிகப் பெரிய நட்சத்திரமாகப் பார்க்கிறார். அதை அவரே நிகழ்ச்சிகளில் சொல்லி இருக்கிறார். தெலுங்கில் விஜய்யுடன் இணைந்து நடிக்கப் பலர் காத்திருக்கிறார்கள். மலையாளத்தைச் சொல்லவே வேண்டாம். விஜய்க்குக் கேரளா இன்னொரு தமிழ்நாடு.

ஆனால், இதை எல்லாம் விட்டுவிட்டு அவர் அரசியல் கிணற்றில் குதிக்கிறார். அவரால் வெறும் ஊழல், மதவாதம் என டயலாக் பேசி திமுகவை வீழ்த்தி விட முடியாது. விஜய் பாஷையில் சொன்னால், 'தில்லு' அதிகமாக இருக்க வேண்டும்.

இன்றைக்கு விஜய்க்கு இந்திய அளவில் ரசிகர்கள் பலம் அதிகம் இருக்கலாம். ஆனால், இந்திய அரசியலில் பாஜகவை மிகத் தைரியமாக எதிர்க்கக்கூடிய கட்சியாக திமுக உள்ளது. குறிப்பாக ஸ்டாலின் உள்ளார். ஆக, வெறும் சினிமா வெளிச்சம் ஸ்டாலினை ஒன்றும் செய்து விட முடியாது.

Vijay cannot beat DMK in 2026 elections

விஜய்க்கு உள்ள சினிமா செல்வாக்கு அதிமுகவைக் கொஞ்சம் பாதிக்கலாம். ஏனெனில், அக்கட்சியில் எடப்பாடி பழனிசாமி ஸ்டார் வேல்யூ இல்லாமல் தலைமை பொறுப்பில் இருக்கிறார். அதிமுக எப்போது நடிகர்கள் வெளிச்சத்தில் வாழ விரும்பும் கட்சி. விஜய் வருகை அக்கட்சியைச் சற்று பாதிக்கலாம்.

அடுத்த பாதிப்பு கட்டாயம் பாஜகவுக்குத்தான். காரணம், அதிமுக, திமுக ஆகிய இரு கழகங்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே லட்சியம் என அண்ணாமலை சொல்கிறார்.

அப்படிப் பார்த்தால், திமுக, அதிமுக அல்லாத கட்சியாக விஜய் கட்சி இருந்து விடும். மக்கள் அண்ணாமலை உள்ள தேசிய கட்சியை ஆதரிப்பதைவிட, மாற்றம் விரும்புகிறவர்கள் விஜய்யின் மாநிலக் கட்சியை ஆதரித்துவிடுவார்கள்.

பொதுவாகத் தமிழக சட்டசபை அரசியல் பாதையில் தேசிய கட்சியின் ஆதிக்கம் செலுத்துவதைத் தமிழக மக்கள் அதிகம் ஏற்பதில்லை. ட்ராக் ரெக்கார்டு அதையே சொல்கிறது.

Vijay cannot beat DMK in 2026 elections

எளிதாக பாஜக பெட்டியைக் கழற்றிவிட்டு விட்டு அவர்கள் திமுக Vs விஜய் என்ற அரசியல் நிலைப்பாட்டை எடுத்துவிடுவார்கள். அப்படி என்றால் அதிகம் பாதிக்கப்படப் போவது முதலில் பாஜக. அடுத்து அதிமுக தான்.

கடந்த கால அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்க்கும் போது திமுக வலுவான கட்சியாக இருந்தே வந்துள்ளது. அக்கட்சி என்றைக்கு நட்சத்திர அந்தஸ்து பின்னால் சென்றதில்லை. அக்கட்சிக்கு அப்படி ஒரு பலம் எந்தக் காலத்திலும் தேவைப்பட்டதும் இல்லை.

ஒரு அப்படி ஒரு நெருக்கடி வந்தால், ஏற்கெனவே உதயநிதிக்குக் குறைந்தபட்ச நட்சத்திர செல்வாக்கு உள்ளது. விஜய்யுடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு உள்ளது.

அந்தச் செல்வாக்கு அண்ணாமலைக்கோ, எடப்பாடி பழனிசாமிக்கோ இல்லை. விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றிக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே அண்ணாமலை சில விளக்கங்களை அளித்திருந்தார்.

Vijay cannot beat DMK in 2026 elections

"யார் ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல், ஊழலை ஒழிப்பதற்காக ஒரு கட்சியை ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொன்னாலும் அதை பாஜக வரவேற்கும். மக்கள் மன்றத்தில் போய் நிற்போம். மக்கள் யாரை ஏற்கிறார்களோ ஏற்கட்டும். அவர்கள்தான் எஜமானர்கள்.

ஆகவே, விஜய் கண்டிப்பாக வரவேண்டும். அதைத் தீய சக்திகள் தடுத்தால் தமிழக மக்கள் அதை விடமாட்டார்கள். அதற்கு மேல் அவர் கொள்கையைச் சொல்லட்டும். என்ன செய்யப்போகிறார் என்று சொல்லட்டும். அவர் கனவு என்ன என்று சொல்லட்டும்" என்று சொல்லி இருந்தார்.

அப்படி ஒரு நிலை வந்தால் பாஜக தமிழக அரசியலில் ஓரங்கட்டப்படலாம்.

திமுகவைத் தவிரத் தமிழ்நாட்டில் கொள்கையை முன்வைத்து வாக்கு கேட்கும் கட்சிகள் குறைவு. எம்.ஜி.ஆர் பெரிய கொள்கையைப் பேசி முதல்வர் நாற்காலியில் உட்காரவில்லை. அவர் மு.கருணாநிதியைத் தீய சக்தி என்றார். அந்த ஒன்றுதான் அக்கட்சியின் கொள்கையாக இன்றுவரை உள்ளது.

சில ஆண்டுகள் முன்னால் அரசியல் கட்சி தொடங்கிய கமல்ஹாசன் கூட கொள்கை எல்லாம் பேசி வாக்கு வாங்கவில்லை. வெறும் ஸ்டார் வேல்யூதான்.

திமுகவுக்கு அடுத்து கொள்கை பேசும் கட்சியாக நாம் தமிழர் மட்டுமே உள்ளது. அக்கட்சியின் கொள்கைக்காகவே பல ஆயிரம் இளைஞர்கள் அதன் பின்னால் நிற்கிறார்கள். அது திராவிடத்திற்கு எதிரான தமிழ்த் தேசியமாக உள்ளது.

ஆக, 2026இல் விஜய் அரசியல் கட்சி தொடங்கி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டாலும் அந்தக் கட்சி உடனே ஆட்சிக்கு வந்துவிடாது. விஜய் கட்சி ஆட்சிக்கு வர முடியுமா என்பது 2031இல் தான் முடிவு செய்ய முடியும்.

2024இல் டெல்லியிலும் தமிழ்நாட்டிலும் யார் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை அறிந்துகொண்ட பிறகே தனது கட்சியைப் பற்றி விஜய் வாய்திறப்பார். கட்சிக்கான பாதையை வகுப்பார்.

அந்தப் பாதைதான் அவரை முதல்வர் ஆக்குமா ? இல்லையா என்பதைத் தீர்மானிக்கும். இந்தக் கருத்தில் மாற்றம் இருக்கலாம். திமுகவுக்கு மாற்றாக விஜய் இருக்க மாட்டார் என்பது மட்டும் இப்போதைக்கு உறுதியான சொல்லலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+