காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம்
சென்னை: தி.மு.க. கூட்டணியை விரும்பாத காங்கிரஸ் அதிருப்தி நிர்வாகிகள் ஏராளமானோர் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். இதில் 60 ஆண்டுகளாக காங்கிரசில் உறுப்பினராக இருந்த 96 வயது கமலம்மாள் என்பவரும் விஜய் கட்சியில் இணைந்தார். சென்னை பனையூரில் நடைபெற்ற இணைப்பு விழாவில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் உள்பட பல்வேறு பொறுப்புகள் வகிக்கும் நிர்வாகிகள் கூண்டோடு த.வெ.க.வில் இணைந்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. விஜய் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என அறிவித்துவிட்டார். வேட்பாளர் பட்டியலையும் அவர் தயார் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. நேற்றும் கடைசி கட்ட வேட்பாளர் நேர்காணலை விஜய் நடத்தினார். இந்த நிலையில் தான் இன்று விஜய் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் யார் என்பதை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

விஜய் கட்சியில் இணைந்த 96 வயது கமலம்மாள்
இன்று வேட்பாளர்களை அறிவித்துவிட்டு நாளை முதல் விஜய் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாகவே அங்கு இருந்தே விஜய் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். முதல் நாள் அன்றே சென்னையில் விஜய் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இதற்காக தேர்தல் ஆணையத்திடமும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று காங்கிரசில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விஜய்யின் தவெகவில் இணைந்தனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் 60 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்த 96 வயது கமலம்மாள் என்பவரும் விஜய் கட்சியில் இணைந்தார். காங்கிரசை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் நேற்று விஜய் கட்சியில் இணைந்துள்ளனர். கட்சியில் இணைந்த நிர்வாகிகளுக்கு விஜய் சால்வை அணிவித்து கவுரப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளிவந்தன.
கூண்டோடு தவெகவில் இணைந்தனர்
திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தும் போதே, பலர் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்து வந்தனர். 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் த.வெ.க.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட வேண்டும் என காங்கிரசில் முக்கிய நிர்வாகிகள் பலர் போர்க்கொடி தூக்கினர். ஆனால் கடைசி நேரத்தில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில் தான் தி.மு.க. கூட்டணியை விரும்பாத காங்கிரஸ் அதிருப்தி நிர்வாகிகள் ஏராளமானோர் நேற்று மாலை விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். சென்னை பனையூரில் நடைபெற்ற இணைப்பு விழாவில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் உள்பட பல்வேறு பொறுப்புகள் வகிக்கும் நிர்வாகிகள் கூண்டோடு த.வெ.க.வில் இணைந்தனர்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் செல்வம்
குறிப்பாக நேற்று முன் தினம் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட பொதுச் செயலாளர் டி. செல்வம் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். இதேபோன்று காங்கிரஸ் நிர்வாகிகள் எ.பி. சூரியபிரகாசம், பி.வி. சிவகுமார், டி.ஏ.பி. செந்தில் பாண்டியன், ஏ.கே. ஜெய பிரகாஷ், ஜி.பி. மோகன் காந்தி, எஸ்.பி. விஸ்வநாதன், எ.டி.வி.கே. அருண் குமார், எஸ். சுகுமாரன், ஜி. பிரைட் நஷீர்,
எ.டி.வி. ராதாகிருஷ்ணன், எ.முருகேசன், எ. வைரவன், எஸ்.ஜே. ஜெனார்தனன், ஜே. வாசு தேவன், மயிலை டி. தாமஸ், என். பிரபாகரன், டாக்டர் அரவிந்தன், வி. ரகு ராமன், எ.டி.வி. விட்டல் சம்பத்குமார், இக்பால், டாக்டர் சுகதேவ், ஆர்.ரஞ்சித், சுரேஷ் பாபு, செங்கல் ரோ, மூர்த்தி, எ. மரியராஜ், கரைபுதூர் டி.எஸ். முருகதாஸ், ஜி.பிரேம் ஆனந்தி, எம். ஹேமமாலினி, டாக்டர் சேவியர், எம். அசோக் குமார், எஸ். நரேஷ்குமார், புரசை கீதா, ஜி. ஜெகநாதன் உள்பட ஆயிரக்கணக்கானோர் த.வெ.க.வில் இணைந்தனர்.












Click it and Unblock the Notifications