மீண்டும் சொதப்பிய விஜய்! கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தா.. பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும்!
சென்னை: கரூர் நெரிசல் பலி சம்பவத்தில், விஜய் மீது சரமாரியான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இருந்தும் அடுத்தடுத்து நடத்தும் கூட்டங்களில், நெரிசலை கட்டுப்படுத்த விஜய் தரப்பு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன. நேற்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியிலும் பெரிய அசம்பாவிதம் நடக்க இருந்தது.
கடந்த ஆண்டு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை விஜய் நடத்தியிருந்தார். இதில் பெரிய நெரிசல் ஏற்பட்டிருந்தது. அதேபோல இந்த ஆண்டும் நடந்துவிடக்கூடாது என்பதால், பல்வேறு முன்னேற்பாடுகளுடன் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தியிருந்தார். ஆனாலும், இதிலும் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டிருக்கின்றன.

என்ன நடந்தது?
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி பகுதியில், நேற்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் பங்கேற்றிருந்தார். கடந்த முறையை விட, இந்த முறை விசாலமான இடத்தில்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கும், கட்சியினருக்கும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன.
- விஜய் வந்த பின்னரும் அனைவரும் அவரவர் இடத்தில்தான் அமர்ந்திருக்க வேண்டும்
- செல்போன்களை பயன்படுத்த கூடாது. குறிப்பாக செல்பி, ரீல்ஸ் எடுக்க கூடாது. நிகழ்ச்சியை பதிவு செய்ய கூடாது
கடுமையான கட்டுப்பாடுகள்
இப்படி அனைத்து விதிமுறைகளையும், முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியிருந்தார். மாலையில் திட்டமிட்டபடி நிகழ்ச்சி தொடங்கியது. விஜய் உள்ளே நுழைந்தார்.
மேடையில் அமர்ந்த விஜய், இஸ்லாமிய முறைப்படி தொழுகையில் ஈடுபட்டார். ஆரம்பம் முதல் நிகழ்ச்சி பெரிய சொதப்பல் இல்லாமல், திட்டமிட்டபடி சென்றது. ஆனால், விஜய் கிளம்பும் நேரத்தில் மொத்தமும் சொதப்பியது. விதிமுறைகளை கடைபிடிக்க கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும், ரசிகர்கள் விஜய்யை பார்க்க தடுப்புகளை தாண்டி வந்தனர்.
புஸ்ஸி ஆனந்த் முயற்சி
பெண்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு விஜய் வருவார் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக விஜய் வரவில்லை. எனவே, பெண்களும் முந்தியடித்தனர். தங்கள் செல்போன்களை வெளியில் எடுத்து, பெரிய ஸ்கிரீனில் தெரிந்த விஜய்யை வீடியோ எடுக்க தொடங்கினர். கூட்டம் ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை மீறியது. எனவே, இஸ்லாமியர்களை தவிர மற்றவர்களை அப்புறப்படுத்த புஸ்ஸி ஆனந்த முயன்றார். இருப்பினும் இதற்கு நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
எல்லை மீறிய நிர்வாகிகள்
குறிப்பாக, கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய, மாநில இணைச் செயலாளர் யாஸ்மின் நைனா முகமது போன்ற கட்சி நிர்வாகிகள், விஜய்யை பார்க்க தடைகளை மீறி உள்ளே புகுந்தார். இது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே நடந்த அசம்பாவிதத்திலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. இப்படி இருக்கையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நடந்த சலசலப்பு விஜய் தரப்பை மேலும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications