“பிளாஸ்ட் ஆகிடும்”.. மிரட்டிய விஜய் ரசிகர் பம்மி பதுங்கிட்டாரே! இன்ஸ்டா வீடியோவை நீக்கிட்டு எஸ்கேப்
சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக அரசுக்கும், காவல்துறைக்கும் மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர் ஒருவர், போலீசாரின் எச்சரிக்கை மற்றும் அதிரடி ஆக்ஷனால் மிரண்டு போய், மன்னிப்புக் கேட்டு, தமது முந்தைய வீடியோக்களை நீக்கி உள்ளார்.
தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை நாமக்கல் மற்றும் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த துயரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்குப்பதிவு
இந்தச் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக பல்வேறு வதந்திகளும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. கரூர் துயர சம்பவம் தொடர்பாக எந்த வதந்திகளையும் சமூக வலைத்தளத்தில் பரப்ப கூடாது என்றும், உரிய விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வதந்தி - எச்சரிக்கை
மேலும், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் கருத்துகளை பதிவு செய்த சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்துள்ள 25 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் துயர சம்பவம் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 3 நபர்களை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அதன்படி பெரும்பாக்கம் பாஜகவை சேர்ந்த சகாயம், மாங்காடு தமிழக வெற்றி கழக உறுப்பினர் சிவனேசன், ஆவடி தவெக நிர்வாகி சரத்குமார் ஆகிய மூன்று பேரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மிரட்டிய நபர் பம்மிவிட்டார்
இதற்கிடையே, தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுத்தால் அவ்வளவுதான் என மிரட்டல் விடுக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். சதிஷ் என்பவர் இன்ஸ்டாகிராமில், "இவ்வளவு உயிர் போகும்போது போலீஸ் என்ன செஞ்சிட்ருந்தீங்க.. இப்போ வந்து நடிக்கிறீங்க.. விஜய் அண்ணாவை தொட்டா தமிழ்நாடே கொந்தளிக்கும். போலீஸ் ஸ்டேஷன் வெடிக்கும். தொட்டு மட்டும் பாரு.. போலீஸ் ஸ்டேஷனே இருக்காது, உள்ள இறங்கி பாரு.. ஒண்ணுமே பண்ண முடியாது.. பஸ்ஸுலாம் எரியும்" என மிரட்டல் விடுத்திருந்தார்.
தவெக கூட்ட நெரிசல் பலி தொடர்பாக விஜய் மீது நடவடிக்கை எடுத்தால் விளைவு வேறு மாதிரி இருக்கும் என மிரட்டல் விடுத்த சதிஷ் என்பவர் போலீஸ் தரப்பு எச்சரிக்கைக்குப் பிறகு, "இனிமேல், என் ஐ.டியில் வீடியோ வராது, தவறாக வீடியோ வெளியிட்டதற்கு மன்னித்து விடுங்கள், இனிமேல் நான் வீடியோ போடமாட்டேன்" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் தமது முந்தைய பதிவுகள் அனைத்தையும் நீக்கி உள்ளார்.
மன்னிப்பு கேட்ட விஜய் ரசிகர்
மேலும், "ஹெல் கிட்" என்ற ஐடியில் இயங்கி வந்த விஜய் ரசிகரும், தமது முந்தைய பதிவுகளை நீக்கிவிட்டு, மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இனிமேல், யாரையும் குறை சொல்லாமல், மாற்றி மாற்றி சண்டை போடாமல், உயிரிழப்புகளை பற்றி யோசிப்போம். தகாத வார்த்தைகளை திட்டியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications