சாட்டையை சுழற்றிய முதல்வர் விஜய்.. நிரந்தரமாக மூடப்படும் டாஸ்மாக் கடைகள்! அதிரடியாக வெளியான அரசாணை!
சென்னை: தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே முக்கிய அதிரடி நடவடிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, சட்டம் ஒழுங்கு போன்ற விவகாரங்களில் கடுமையான முடிவுகளை எடுக்கப்போவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த வரிசையில் தற்போது டாஸ்மாக் கடைகள் தொடர்பாக மிகப் பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட முதல்வர் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 500 மீட்டர் எல்லைக்குள் இருக்கும் கடைகள் அனைத்தையும் ஆய்வு செய்து கட்டாயமாக மூட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் அடிப்படையில் மொத்தமாக 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இயங்கி வரும் 255 கடைகள் முதல் கட்டமாக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூடப்பட உள்ளன. இதற்கான பணிகளை டாஸ்மாக் அதிகாரிகள் அவசரமாக தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை இல்லாததால், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. அதன் பின்னர் கடந்த 10ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.
பதவியேற்பு நிகழ்ச்சியிலேயே பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதை கலாச்சாரத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று விஜய் உறுதி அளித்திருந்தார். "போதைப்பொருள் மற்றும் மது காரணமாக குடும்பங்கள் பாதிக்கப்படக்கூடாது. சட்டம் ஒழுங்கில் சமரசம் இருக்காது" என்று அவர் தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முதல் ஆய்வுக் கூட்டத்திலேயே பெண்கள் பாதுகாப்பு, போதை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் மதுபான கடைகள் இயங்குவது குறித்து அதிகாரிகளிடம் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் குறித்து தனி ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் பல கடைகள் இயங்கி வருவது கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்று இடங்கள் தேடப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கியமாக பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகள் மீது பொதுமக்களிடமிருந்து நீண்ட காலமாக புகார்கள் எழுந்து வந்தன. பெண்கள் மற்றும் மாணவிகள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் மதுபான கடைகள் செயல்படுவது பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் இருந்தன. இதனால் தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மேலும், எதிர்காலத்தில் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படாது என்றும் அரசு வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. புதிய அரசின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த முடிவை வரவேற்று வருகின்றனர். மறுபுறம் டாஸ்மாக் வருவாயில் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications