மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்!
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தைத் துவங்கிய கையோடு முதலமைச்சர் விஜய் அடுத்த முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான வேலையில்லாப் பட்டதாரி இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான அறிவிப்பாக இருந்த பட்டாதரிகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்கும் மாபெரும் திட்டத்தை அமல்படுத்த அரசு தற்போது தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.

அமைச்சர் முகமது பர்வேஸ் அதிரடித் தகவல்!
சென்னை கிண்டியில் நடைபெற்ற அரசு தொழிற்பயிற்சி நிலைய (ITI) மாணவர் சேர்க்கை மற்றும் தரவரிசைப் பட்டியலை வெளியிடும் அதிகாரப்பூர்வ அரசு விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையில் இளைஞர்களின் பங்களிப்பை உயர்த்த அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார்.
அப்போது மிக முக்கியமான தகவலை அமைச்சர் முகமது பர்வேஸ் பகிர்ந்தார், "தமிழ்நாட்டில் உள்ள வேலையில்லாப் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்குவது குறித்து தற்போதைய அரசு மிகவும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது" என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்திற்கான தகுதி வரம்புகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த முழுமையான விவரங்கள் அரசாணையாக மிக விரைவில் வெளியாகும் என்றும் ஜா.முகமது பர்வேஸ் தெரிவித்தார்.
தவெக-வின் தேர்தல் வாக்குறுதி: பின்னணி என்ன?
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழக வெற்றிக் கழகம் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மைக்கு முற்றுப்புள்ளி வைப்பதையே தனது முதன்மைக் கொள்கையாக முன்வைத்தது. உயர்கல்வி படித்து முடித்தும் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல் தவித்து வரும் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை இடைக்காலப் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தவெக-வின் தேர்தல் வாக்குறுதியில் வேலை தேடும் பட்டதாரிகளுக்கு ரூ. 4,000 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ. 2,500 இளைஞர் நல நிதியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு நிதி ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு, பட்ஜெட்டைத் தொடர்ந்து இந்த மாதாந்திர உதவித்தொகைத் திட்டம் முழு வீச்சில் அமல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் ஏற்கனவே ஐடிஐ-களில் (ITI) பயிலும் மாணவர்களுக்கு எவ்விதக் கல்விக் கட்டணமும் இன்றி, மாதம் ரூ.750 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஐடிஐ-களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு எவ்விதக் கல்விக் கட்டணமும் (Tuition Fee) வசூலிக்கப்படுவதில்லை.
இது தவிர, 'புதுமைப்பெண்' மற்றும் 'தமிழ்புதல்வன்' திட்டங்களின் கீழ் தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகையும் தடையின்றி நேரடியாக வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications