மே 8ம் தேதி வெளியாகும் 'ஜனநாயகன்'? தேர்தல் முடிவுகள் வந்த கையோடு ரிலீஸ்! கொண்டாடும் விஜய் ரசிகர்கள்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்சினை முழுமையாக முடிந்தது போலத் தெரியவில்லை. இதற்கிடையே படம் வரும் மே 8ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது. இது விஜய் ரசிகர்களுக்கு மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், தனது அரசியல் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக நடித்த கடைசித் திரைப்படம் 'ஜனநாயகன்'. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், முதலில் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அரசியலுக்கு முன்பு வெளியாகும் கடைசி படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது.

ஜனநாயகன்
இருப்பினும், படத்திற்கு உரிய நேரத்தில் சென்சார் கிடைக்கவில்லை. இதனால் படம் திட்டமிட்டபடி பொங்கலன்று ரிலீஸ் ஆகவில்லை. அதன் பிறகு சென்சார் விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் நீதிமன்றம் சென்றனர். இருப்பினும், அங்கும் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இதையடுத்து வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு, ரிவைசிங் கமிட்டியிடம் சென்றனர். படத்தை ரிவைசிங் கமிட்டி பார்த்த நிலையில், சீக்கிரமே சென்சார் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
மே 8 ரிலீஸ்?
இதற்கிடையே இந்த அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் வரும் மே 8ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று மாலை முதலே ஜனநாயகன் மே 8ம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது தொடர்பான போஸ்டர்களை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து டிரெண்டாக்கி வருகிறார்கள். இருப்பினும் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN) புரொடக்ஷன்ஸ் இதுவரை ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதால் இதில் தெளிவு இல்லை.
முன்னதாக, 2026 பொங்கல் பண்டிகைக்கே இந்தப் படம் வெளியாகி இருந்தால் அது பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருக்கும். சுமார் ₹100 கோடிக்கும் அதிகமான முன்பதிவு மட்டும் நடந்திருந்தது. இப்போது படம் சம்மரில் வெளியாவது நல்ல விஷயம் என்றாலும் அதே அளவுக்கு வசூல் சாதனை படைக்குமா என்பது கேள்வியாகவே இருக்கிறது.
நட்சத்திர பட்டாளம்
இந்தப் படத்தில் விஜய் முன்னாள் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க, பாபி தியோல் வில்லனாக மிரட்டவுள்ளார். இவர்களுடன் ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கியுள்ளது. இது விஜய்யின் திரையுலகப் பயணத்தில் கடைசிப் படம் என்பதால், பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லீக்
சமீபத்தில் இந்தப் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் படத்தின் சில காட்சிகள் கசிந்த நிலையில், பிறகு ஒட்டுமொத்த படமும் இணையத்தில் வெளியானது. சைபர் கிரைம் போலீஸார் இது தொடர்பாக 6 பேரைக் கைது செய்து, 300-க்கும் மேற்பட்ட லிங்குகளை நீக்கியுள்ளனர். இருப்பினும், விஜய்யின் 'ஸ்டார் பவர்' இந்தப் பாதிப்புகளைத் தாண்டிப் படத்தைப் பெரிய வெற்றிபெறச் செய்யும் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்தப் படம் வெளியாகிறது. அதாவது விஜய்யின் நிஜ அரசியல் என்ட்ரி எப்படி என்ற தெரிந்த பிறகே படம் ரிலிஸாகிறது!














Click it and Unblock the Notifications