கரூரே கண்ணீரில் மிதக்க.. ஹாயாக சென்னைக்கு பறந்த விஜய்! விமானத்தை லைவில் டிராக் செய்த 11 ஆயிரம் பேர்!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூரில் பிரச்சாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கரூர் சம்பவம் குறித்து எந்தவித இரங்கலையும் தெரிவிக்காத விஜய் உடனடியாக சென்னை புறப்பட்டுச் சென்றார். VTPCR என்ற அவரது தனி விமானம் சென்னை விமான நிலையத்தில் 11.30 மணியளவில் தரையிறங்கியது. இந்த நிலையில் விஜயின் விமானத்தை பிளைட் ராடரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ட்ராக் செய்துள்ளனர்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு 'தமிழக வெற்றி கழகம்' தலைவர் விஜய் தனது மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார். அந்த தொடரின் ஒரு பகுதியாக அவர் இன்று (செப்டம்பர் 27) கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார்.
விஜய் வருவதாகத் தகவல் தெரிந்தவுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூடுமிடமாக கரூர் 100 அடி சாலையில் திரண்டனர். மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத நிலையில், விஜயின் வேனுக்கே அருகில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.

விஜய் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த ஒரு பெண் திடீரென மயக்கம் அடைந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விஜய் உரையை முடித்து வெளியேறிய பிறகு கூட்டம் கலைந்து செல்ல தொடங்கியபோது நிலைமை மேலும் மோசமடைந்தது. நெரிசலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். அவர்களும் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் 10 பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் முதலில் வெளியானது. தொடர்ந்து சிகிச்சை பெற்றவர்களில் பலர் உயிரிழந்த நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட தகவலின் படி, 6 குழந்தைகள் மற்றும் 16 பெண்கள் உட்பட மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 58 ஆக உள்ளது. இதில் 12 பேரின் நிலைமை மிகுந்த ஆபத்தாக இருப்பதாகவும், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் மருத்துவமனை தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அவர் இன்று இரவு கரூர் திரும்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கரூர் திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் அன்பில் மகேஷ், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
இந்த நிலையில் பிரச்சாரத்தை முடித்ததும் இரண்டு கார்கள் மாறி திருச்சி விமான நிலையத்திற்கு சென்றார் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய். அங்கு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் விமான நிலைய வளாகத்திற்குள் சென்றார். தொடர்ந்து தனது தனி விமானம் மூலம் திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். vtpcr என்ற அவரது தனி விமானம் திருச்சியில் இருந்து நெய்வேலி வழியாக கடலூர் கடற்பகுதி சென்றது. தொடர்ந்து வங்காள விரிகுடா கடலில் பயணித்த அந்த விமானம் சென்னையை சுற்றி சுமார் 11.10 மணியளவில் தரையிறங்கியது. துயர சம்பவம் நிகழ்ந்ததும் தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் பிரச்சாரத்தில் பங்கேற்ற விஜய் இரங்கல் கூட தெரிவிக்காமல் தனி விமானத்தில் சென்னை சென்றது கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. மேலும் விஜய் பயணித்த அந்த விமானத்தை பிளைட் ரேடார் இணைய தளத்தில் 11 ஆயிரம் பேர் ரியல் டைமில் ட்ராக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications