''தளபதியை பார்க்கணும்''! அடம் பிடித்த விஜய் மக்கள் இயக்கம் மகளிர் அணி! புஸ்ஸி ஆனந்த் கொடுத்த உறுதி!
சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்ற நிலையில், ''தளபதியை பார்க்கணும்'' என கோரஸாக கோரிக்கை குரல் ஒலித்ததால் அவர்களை சமாளித்து அமர வைப்பதற்குள் புஸ்ஸி ஆனந்த் போதும் போதும் என்றாகிவிட்டார்.
விஜயை நேரில் தான் பார்க்க முடியல, இப்போது வீடியோ காலிலாவது வரச்சொல்லுங்க என மைக்கில் ஓபனாக ஒரு பெண் நிர்வாகி கோரிக்கை விடுக்க, ஆமாம் தளபதியை பார்க்கணும் என மொத்தமாக குரல் எழுப்பினர். விஜய் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார் என்றும் உடனடியாக வீடியோ காலில் பேசுவதற்கு டைம் செட் ஆகாது எனவும் கூறி மகளிர் அணியினரை சமாதானம் செய்தார் புஸ்ஸி ஆனந்த்.

விரைவில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்திப்பார் என்றும் அதற்கு நான் பொறுப்பு எனவும் உறுதி கொடுத்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், மகளிர் அணியில் தாம் எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகம் இருப்பதாக பேசிய புஸ்ஸி ஆனந்த், அடுத்த முறை பெரிய இடத்தில் தான் கூட்டம் நடத்த வேண்டியது போல் இருக்கும் என்றார்.
மேலும், யாரும் சாப்பிடாமல் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட புஸ்ஸி ஆனந்த், லியோ படம் ரிலீஸ் குறித்தும் பேசினார். இதனிடையே நாமக்கல்லில் இருந்து வந்திருந்த விஜய் மக்கள் இயக்கம் மகளிரணி நிர்வாகி ஒருவர், லியோ படத்தில் முதல் நாள் முதல் காட்சியை பெண்கள் மட்டும் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்தக் கோரிக்கை குறித்து கண்டிப்பாக பரிசீலனை செய்து மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக புஸ்ஸி ஆனந்த் உறுதியளித்தார். இதனிடையே விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்வி தான் மகளிரணி நிர்வாகிகளிடம் இருந்து ரிப்பீட்டாக வந்த கேள்வியாகும்.












Click it and Unblock the Notifications