ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான்.. எல்லாரையும் பார்த்த விஜய்.. எடப்பாடியை மட்டும் பார்க்காதது ஏன்?
சென்னை: முன்னள் முதல்வர் ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் என அரசியல் களத்தில் நேர் எதிராக கடுமையாக மோதிய தலைவர்களை முதல்வர் விஜய் இன்று சந்தித்து அரசியல் நாகரீகம் கடைபிடித்தார். அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது பல்வேறு யூகங்களை அரசியல் வடடாரத்தில் கிளப்பியுள்ளது.
தமிழக முதல்வராக விஜய் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இன்று சட்டமன்றம் கூடிய நிலையில், எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர். சட்டமன்றத்தில் இந்த நிகழ்வு முடிந்ததும், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற விஜய் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

வீட்டுக்கே சென்று சந்தித்த விஜய்
அதேபோல, வைகோ, அன்புமணி, சீமான் ஆகியோரையும் விஜய் வீடு தேடி சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். அதேவேளையில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்தித்து பேசவில்லை. கடந்த முறை எதிர்க்கட்சி தலைவர், அதற்கு முன்பு முதல்வர் என எடப்பாடி பழனிசாமி பதவி வகித்து வந்துள்ளார். அரசியல் களத்தில் நேர் எதிராக கடுமையாக மோதிய தலைவர்களை விஜய் இன்று சந்தித்து அரசியல் நாகரீகம் கடைபிடித்தார்.
அதிமுகவில் பிளவு
ஆனால், எடப்பாடி பழனிசாமியை சந்திக்காதது பல்வேறு யூகங்களுக்கு அரசியல் வடடாரத்தில் கிளப்பியுள்ளது. அதாவது அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்த அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக கலகம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், சி விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் எடப்பாடிக்கு எதிராக கை கோர்த்துள்ளனர்.
சட்டமன்றத்தில் எஸ்பி வேலுமணியை சட்டமன்றக்குழு தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். இப்படி அதிமுகவில் கடந்த ஒரு வாரமாகவே மோதல் அதிகரித்துள்ளது. இதில் எஸ்பி வேலுமணி தலைமையிலான குழுவினர் விஜய்யின் தவெகவை ஆதரிக்க கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறும் கருத்தாக உள்ளது.
வணக்கம் வைக்காத எடப்பாடி - விஜய்
இப்படியான சூழலில்தான் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தால் அது அதிமுகவில் உள்ள மற்றொறு முகாமிற்கு அதிருப்தியை ஏற்படுத்தும் எனக்கருதி விஜய் , அவரை சந்தித்து இருப்பதை தவிர்த்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இன்று சட்டமன்றத்திலும், எடப்பாடி பழனிசாமியும் விஜய்யும் பரஸ்பரம் வணக்கம் வைத்துக்கொள்ளவில்லை.
எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏவாக பொறுப்பேற்க வரும் போது விஜய்யை நோக்கி வணக்கம் வைத்தது போல் இருந்தது. ஆனால் இதற்கு விஜய் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக இருந்தார். எனவே இதனையும் முடிச்சு போட்டு எடப்பாடியை விஜய் சந்திக்காததற்கு அரசியல் ரீதியாக பல கணக்குகள் இருக்கலாம் என்பதே அரசியல் விமர்சகர்கள் கருத்தாக உள்ளது. அதே நேரம் நாளைக்கு எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள். எனவே நாளை அவரை விஜய் சந்திக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
விஜய் காட்டிய அரசியல் நாகரீகம்
1967-க்கு பிறகு தமிழ்நாட்டில் திராவிட ஆட்சிக்கு மாற்றாக ஒரு புதிய ஆட்சி அமைந்துள்ளது. விஜய் தலைமையிலான த.வெ.க. அதிகாரத்தை பிடித்துள்ளள்ளது. திராவிட கட்சிகள் இல்லாமல் முதல் முறையாக ஒரு புதிய கட்சி ஆட்சியை பிடித்துள்ள நிலையிலும் சட்டசபையிலும் பல காட்சிகள் மாற தொடங்கியுள்ளன.
விஜய் எதிர்க்கட்சி தலைவர்களை வீடு தேடி சந்தித்து இருப்பது போல, தமிழக அரசியலில் இதற்கு முன்பாக 1967-ல் பேரறிஞர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்ற நேரத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.1967-ல் பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்ட நேரத்தில், காமராஜரின் வீட்டிற்கு சென்று, அவரைச் சந்தித்து அண்ணா வாழ்த்துப் பெற்றார் தற்போது, திமுக தோல்வியை சந்தித்து இருக்கிற வேளையில், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு தேடி சென்று வாழ்த்து பெற்று இருக்கிறார், இன்றைய முதல்வர் விஜய்.















Click it and Unblock the Notifications