விஜயின் கருப்பு டிபெண்டர் கார் ரெடி.. 3.30 மணிக்கு கவர்னர் உடன் சந்திப்பு.. நாளை பதவியேற்பு?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் பெரும் பரபரப்பில் உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைக்கும் முயற்சிகள் வேகமெடுத்துள்ளன.
இன்று மதியம் 3:30 மணிக்கு தவெக தலைவர் விஜய், தமிழக கவர்னர் (பொறுப்பு) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து ஆட்சி அமைப்பது குறித்து பேச உள்ளார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய தருணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக நிர்வாகிகள் ஏற்கெனவே கிண்டியில் உள்ள லோக் பவனுக்கு சென்று, ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னருக்கு கடிதம் அளித்துள்ளனர். தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேக்கர் இன்று தமிழகம் வரும் நிலையில், இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
108 இடங்களை வென்றுள்ள தவெக, ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும் சூழலில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை கடந்த 48 மணிநேரமாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் முழு ஆதரவு
இதற்கிடையே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) தமிழ்நாட்டில் புதிய அரசு அமைக்க தவெகவுக்கு நிபந்தனையுடன் கூடிய முழு ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், இந்த ஆதரவு தவெகவுக்கு பெரும் உதவியாக அமையும்.
"தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு" என்று காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். இதன் மூலம் திமுகவுடன் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த காங்கிரஸ் கூட்டணி முறிந்துள்ளது. இந்த முடிவு தமிழக அரசியலை தாண்டி இந்திய அரசியலையும் மாற்றியமைத்துள்ளது.
சிறு கட்சிகளிடம் ஆதரவு கோரிக்கை
பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் தரப்பு ஏற்கனவே பாகம உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதேவேளையில் சிறு கட்சிகளான விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றிடம் ஆதரவு கோரியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சிறு கட்சிகளின் முடிவுகள் ஆட்சி அமைப்புக்கு முக்கியமானதாக மாறியுள்ளது.
அதிமுகவில் தவெக ஆதரவு விவகாரம்
இதேவேளையில், அதிமுக மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் தவெகவுக்கு ஆதரவு அளிக்க களத்தில் இறங்கியுள்ளனர். தவெக ஆதரவு விவகாரத்தில் அதிமுகவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளனர்.
மேலும் தவெக தலைவர் என்.அனந்த், எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு சென்று சந்தித்துவிட்டு வெளியேறிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத அதிமுக-விற்கு தவெக உடனான கூட்டணி என்பது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
நாளை பதவியேற்பு
இன்று நடைபெறும் விஜய் - கவர்னர் சந்திப்பு, தவெகவின் ஆட்சி அமைப்பது குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக விரைவில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.















Click it and Unblock the Notifications