மாமல்லபுரம் ரிசார்ட் அறையில்! கரூரில் இறந்தவர்களின் படங்களுக்கு முன்பு விஜய் கண்ணீர்!
சென்னை: கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் ரிசார்ட்டில் தங்க வைத்துள்ள நிலையில் ஒவ்வொரு அறையில் வைக்கப்பட்டுள்ள இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு தவெக தலைவர் விஜய் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 37 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 235 பேர் நேற்று கரூரில் இருந்து தவெக நிர்வாகிகளால் சொகுசு பேருந்தில் அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் ரிசார்ட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு 37 குடும்பத்தினருக்கும் அறை புக் செய்யப்பட்டிருந்தது. அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டு காலை உணவுக்கு பிறகு காலை 10 மணி முதல் விஜய் ஒவ்வொரு அறைக்கும் சென்றார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு விஜய் மலரஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து அவர்களின் குடும்பத்தினருடன் சந்தித்து பேசி வருகிறார்.
இந்த சந்திப்பு இன்று மாலை வரை நடைபெறும் என சொல்லப்படுகிறது. அது போல் இவர்கள் மாலை ஊர் திரும்ப வசதியாக ஆம்னி பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.
கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் இன்று சந்திப்பது என்பது ரகசியமாகவே இருந்தது. அது போல் விஜய் மாமல்லபுரம் சென்றதும் சஸ்பென்ஸ்ஸாகவே இருந்தது.
கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 20 லட்சம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டது. மேலும் அந்த 41 பேரின் குடும்பத்தினரையும் விஜய் தத்தெடுப்பதாக ஆதவ் அர்ஜுனா ஏற்கெனவே கூறியிருந்தார்.
தற்போது நேரில் வரவழைக்கப்பட்ட குடும்பத்தினரிடம் கல்விச் செலவு, திருமணச் செலவு, வீட்டுக் கடன் உள்ளிட்ட விவரங்களை விஜய் கேட்டு வாங்கியதாக சொல்லப்படுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.
அது போல் காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில் 110 பேருக்கு அந்த பணம் இன்றைய தினம் வழங்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தால் மட்டுமே தெரியவரும். மேலும் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் கண்ணீர் விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் என்னென்ன பேசினார், என்ன வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன உள்ளிட்ட தகவல்கள் எல்லாம் கிடைக்க ஓரிரு நாட்கள் ஆகலாம் என தெரிகிறது.
துக்கம் நடந்த வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறுவதுதான் முறை! இதுதான் தமிழர் பண்பாடு! ஆனால் இறந்தவர்களின் குடும்பத்தினரை கரூரில் இருந்து மாமல்லபுரத்திற்கு வரவழைத்து ஆறுதல் கூறுவது இதுவரை வரலாற்றில் இல்லாத ஒன்று என பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் விஜய்யை விமர்சிக்கிறார்கள்.
எனவே தான் ஏன் கரூருக்கு வராமல் தங்களை மாமல்லபுரத்திற்கு வரவழைத்தேன் என்பதற்கான காரணத்தையும் விஜய் அவர்களிடம் சொல்லியிருக்கக் கூடும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications