வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை!
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியும், பிரசார அனுமதி தொடர்பாகவும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக மனு அளித்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற்று, அதே நாளில் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து மாநிலம் முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில்ன், முக்கிய அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டன.
2026 சட்டசபை தேர்தல்
மறுபுறம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் போன்ற வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, இந்த முறை தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் புதிதாக களம் காண உள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் முக்கிய போட்டியாளர்களாக கருதப்படுகின்றன.
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அந்த கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், கட்சித் தலைவர் விஜய் வடசென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் இருந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. பெரம்பூர் தொகுதி அரசியல் ரீதியாக முக்கியமான பகுதியாக கருதப்படுவதால், அங்கு விஜய் போட்டியிடுவது தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கோட்டையன்
இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார். அதேபோல், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமாரையும் சந்தித்து தனியாக கோரிக்கை மனு வழங்கியதாக கூறப்படுகிறது.
விஜய்
இந்த மனுவில், த.வெ.க. தலைவர் விஜய் விரைவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதால், அந்த பிரசாரத்திற்கான உரிய அனுமதிகள் மற்றும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் பொதுமக்களிடையே அதிக வரவேற்பு பெற்றவர் என்பதால், அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் பெருமளவு மக்கள் திரளும் வாய்ப்பு உள்ளதாககவும், இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே வலுப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் பிரசாரம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மைலாப்பூரில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வடசென்னையின் முக்கிய பகுதியாக இருக்கும் பெரம்பூர் தொகுதி அரசியல் ரீதியாக கடுமையான போட்டி நிலவும் தொகுதியாக கருதப்படுகிறது. அந்த தொகுதியில் இருந்து விஜய் தனது பிரசாரத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் செல்லவுள்ளதாக சொல்கின்றனர் தவெகவினர்.












Click it and Unblock the Notifications