இனி ஒருத்தரும் வாய் திறக்க முடியாது.. விஜய் எடுத்த முடிவு.. தவெகவில் அதிரடி மாற்றம்
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் தவெக மற்றும் அந்தக் கட்சி தலைவர் சுமார் ஒரு மாதம் முடங்கியிருந்தனர். தற்போது அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்த பிறகு தவெக வெளியில் தலை காட்ட தொடங்கியுள்ளது. கரூர் சம்பவம் பெரும் விமர்சனமாகியுள்ள நிலையில், எதிர்காலத்தில் அப்படி ஒரு நிகழ்வு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க விஜய் முடிவு செய்துள்ளாராம். இதுதொடர்பாக தவெகவில் அவர் விரைவில் ஒரு அதிரடி மாற்றத்தை நிகழ்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த வருடம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கினார். விரைவில் வெளியாகவுள்ள ஜனநாயகன் படத்துடன் சினிமாவில இருந்து விலகி அவர் அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் அரசியலில் நுழைந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகிவிட்டன. மிகவும் அரிதாகத்தான் அவர் வெளியில் தலை காட்டி வருகிறார்.

கரூர் சம்பவம்
தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் கூட அவர் பனையூர் அலுவலகத்தில் அவர்களின் படத்தை வைத்து மரியாதை செய்கிறார். விஜய் வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்கிறார், பனையூர் பண்ணையார் என்று விமர்சனங்கள் எழுந்தன. அதிலும் கரூர் சம்பவம் தவெக மற்றும் விஜய் மீது ஏராளமான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டு 41 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தார்கள். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துமளவுக்கு தவெகவில் கட்டமைப்பு இல்லாதது, விஜய் தாமதமாக வந்தது ஆகியவை குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது
வருகிறது தொண்டரணி
கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெகவில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்த அந்தக் கட்சி முடிவு செய்துள்ளது. கடந்த திங்கள்கிழமை கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சென்னை வரவழைத்து நேரில் சந்தித்தார். அதன் பிறகு கட்சியின் புதிய நிர்வாக குழு நியமித்து நிர்வாகிகளின் ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது.
கரூர் சம்பவம் போல எதிர்காலத்தில் எந்த சம்பவமும் நடைபெறாமல் இருக்க தவெகவில் புதிதாக தொண்டரணி உருவாக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தவெக தலைமை கழக நிர்வாகிகள் கூறுகையில், "தவெகவில் ஏற்கனவே 28 சார்பு அணிகள் அறிவிக்கப்பட்டன. அதில் தொண்டரணியும் ஒன்று. ஆனால் அந்த அணிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை
நிர்வாகிகள் பட்டியல் ரெடி
தொண்டரணி அறிவிப்பு நிலையிலேயே இருந்தது. தொண்டரணியை உருவாக்கி, நிர்வாகிகளை நியமிக்கும் பணி விரைவில் முழு வீச்சில் தொடங்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் பெயர் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் இதுதொடர்பான பனையூர் தவெக அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தவெக சார்பில் அடுத்த வாரம் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே இந்தப் பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சி கூட்டங்களில் முன் களப்பணியாளர்களாக, எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பணி அந்த அணியில் உள்ளோருக்கு ஒதுக்கப்படும்." என்றனர்.












Click it and Unblock the Notifications