தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அமல்! ரூ.18,000 வழங்கும் முத்துலட்சுமி மகப்பேறு திட்டம் தொடருமா?
சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக ரூ.755 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசு ஏழை எளிய குடும்பங்களின் தாய் - சேய் நலனை மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்த புதிய திட்டத்தினால் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 'முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம்' தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இத்திட்டம் நேற்று முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும், அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் மற்றும் குழந்தைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பேபி வெல்கம் கிட் வழங்கப்படும்.
புதிய தங்க மோதிரத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் மிக முக்கியமான முன்னோடித் திட்டமான 'டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டம்' என்னவாகும் என்ற விவாதம் கிளம்பியுள்ளது. இத்திட்டம் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரசவ காலத்தில் ஏற்படும் வருமான இழப்பை ஈடுசெய்யவும், தாய்-சேய் ஊட்டச்சத்தை உறுதி செய்யவும், மகப்பேறு மரணங்களைக் குறைக்கவும் கொண்டு வரப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.18,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் ரூ.14,000, 2 தவணைகளாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ரூ.4,000 மதிப்புள்ள இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்து பெட்டகத்தில் இரும்புச்சத்து சிரப், ஹெல்த் மிக்ஸ் பவுடர், பேரீச்சம்பழம், நெய் மற்றும் புரத பிஸ்கட்டுகள் ஆகியவை அடங்கும்.
புதிதாக ரூ.755 கோடி பட்ஜெட்டில் தங்க மோதிரத் திட்டம் கொண்டு வரப்படுவதால், பழைய ரூ.18,000 நிதியுதவித் திட்டம் நிறுத்தப்படுமா என்ற அச்சம் நிலவியது. ஆனால், அரசு வட்டாரங்களின்படி, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டம் என்பது கர்ப்பிணிகளின் ஆரோக்கியம் மற்றும் மருத்துவமனை பிரசவத்தை ஊக்குவிக்கும் ஒரு அடிப்படைத் தேவை சார்ந்த திட்டம்.
தற்போதைய 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' என்பது அரசு மருத்துவமனைகள் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், குழந்தை பிறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் கொண்டு வரப்பட்ட கூடுதல் ஊக்கப்பரிசு திட்டம் மட்டுமே என்று சொல்லபப்டுகிறது. இதனால் கர்ப்பிணிப் பெண்களுக்கான ரூ.18,000 நிதியுதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் தடையின்றி தொடர்ந்து செயல்படும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications