அப்பார்ட்மெண்ட் கட்ட பிளான் அப்ரூவல் வாங்கறீங்களா? தமிழக அரசின் புதிய திட்டம்! வீடுகளின் விலை உயருமா
சென்னை: தமிழகத்தில் சொந்த வீடு மற்றும் அப்பார்ட்மென்ட் கட்டுவதற்கான திட்ட அனுமதி பெறுவதற்கு இனி கூடுதல் செலவாகக்கூடும் என தெரிகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்படாமல் இருந்த சிஎம்டிஏ (CMDA) மற்றும் டிடிசிபி (DTCP) கட்டணங்களை அதிரடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. இதன்காரணமாக வீடுகளின் விலை உயருமா? பொதுமக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் என்னென்ன? என்பதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
சொந்தமாக ஒரு வீட்டை கட்டிவிட வேண்டும் என்பது நடுத்தர மக்களின் வாழ்நாள் கனவாகவே உள்ளது. இதற்கான திட்ட அனுமதியை ஆன்லைனில் பெறுவதற்குச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) மற்றும் நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) ஆகிய அலுவலகங்களை நாடுவது வழக்கம்.

பிளான் அப்ரூவல் - விண்ணப்பங்கள்
அப்ப நாம் பிளான் அப்ரூவல் வாங்கும்போது, ஆன்லைனில் சப்மிட் செய்யப்படும் விண்ணப்பங்களை சரிபார்ப்பதற்கும், அந்தந்த பகுதியின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் என அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த அனுமதி கட்டணங்களைத்தான், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது உயர்த்துவதற்குத் தமிழக அரசு புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்போதுள்ள நடைமுறையின்படி, விண்ணப்பங்களை சரிபார்ப்பதற்கு ஒரு சதுர மீட்டருக்கு வெறும் 1.50 ரூபாயும், உள்கட்டமைப்பு வளர்ச்சிக் கட்டணமாக வெறும் 5 ரூபாயும் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது.
சொந்த வீடு, அப்பார்ட்மென்ட்
30 வருடங்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட இந்தக் கட்டண அமைப்பால், தற்போதுள்ள சூழலில் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுவதாக வீட்டுவசதி துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த அப்ரூவல் கட்டணங்களை முறைப்படி உயர்த்துவதற்காக அதிகாரிகள் ஒரு வரைவு அறிக்கையைத் தயார் செய்து, தங்களின் உயரதிகாரிகளின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தக் கட்டண உயர்வுக்கான பரிந்துரை ஏற்கனவே அதிகாரிகளால் கொண்டு வரப்பட்டதாம். ஆனால், நிறைய காரணங்களை காட்டி, அந்த கோப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசு புதிய திட்டம்
இப்போது இதே கோப்பு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, 1.50 ரூபாயாக இருக்கும் விண்ணப்பச் சரிபார்ப்புக் கட்டணம் இனிமேல் 5 ரூபாய் வரை உயரப் போகிறது. இத்துடன் சேர்த்து காப்புத்தொகை மற்றும் வரன்முறை கட்டணங்களும் கணிசமாக உயர போவதாக தெரிகிறது.
அரசு கட்டணங்களை உயர்த்தப் போகிறது என்ற செய்தி வெளியான உடனேயே, இதனால் அப்பார்ட்மெண்ட் மற்றும் தனி வீடுகளின் விலை உயருமோ என்ற கவலை பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. இதை கேள்விப்பட்ட அதிகாரிகள் தரப்போ, இதுகுறித்து ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.
அதிகாரிகள் சொல்லும் விளக்கம் என்ன
அதில் "முன்பெல்லாம் கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வாங்கும்போது, அதிகாரப்பூர்வ கட்டணங்களைத் தாண்டி பல்வேறு மறைமுகக் கட்டணங்களும், கூடுதல் வசூல்களும் சதுர அடி கணக்கில் பில்டர்களிடம் இருந்து பெறப்பட்டதாக தெரிகிறது.. ஆனால், இப்போது அத்தகைய தேவையற்ற மறைமுக வசூல்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டு, முறையான ஒற்றைச் சாளர முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதனால் அரசு விதிமுறைகளின்படி இந்த அப்ரூவல் கட்டணத்தை முறைப்படி சிறிது உயர்த்தினாலும், அது கட்டுமான நிறுவனங்களுக்கு பெரிய அளவில் சுமையையோ பாதிப்பையோ ஏற்படுத்தாது. இப்படி மறைமுக செலவுகள் குறைந்துள்ளதால், இந்தக் கட்டண உயர்வை ஒரு காரணமாகக் காட்டி பில்டர்கள் வீடுகளின் விலையை உயர்த்துவதற்கு வாய்ப்பில்லை என்றே ரியல் எஸ்டேட் துறை சார்ந்த வல்லுநர்களும், அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்களாம்...!!!












Click it and Unblock the Notifications