மண்ணை கவ்விய காங்., திமுக எடுத்த திடீர் முடிவு! ராயப்பேட்டைக்கு வண்டியை விடும் விஜய்! பரபர ட்விஸ்ட்!
சென்னை: விஜயை வைத்து திமுகவிடம் கூட்டணி பேரத்தை அதிகரிக்கலாம் என காத்திருந்த காங்கிரசுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. 2026 தேர்தலில் காங்கிரஸ் திமுகவை விட்டு விலகாது என்கின்றனர் தேசிய தலைவர்கள். இந்த நிலையில் சீமானை போல சிறிது சிறிதாக வாக்கு வங்கியை உயர்த்த விரும்பாத விஜய் 'ஸ்ட்ரெயிட்டா சிஎம்' என்பது போல அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக அவரிடம் ஆந்திர மாடலை எடுத்துக் கூறியுள்ளனர் சில நிர்வாகிகள்.
2026 சட்டமன்ற தேர்தல் களம் எந்த கட்சிக்கும் அவ்வளவு எளிதாக இருக்காது என்று தான் சொல்லப்படுகிறது. காரணம் பெரும் கூட்டணி பலத்துடன் இருக்கும் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது. அதே நேரத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை, சட்டம் ஒழுங்கு என பல பிரச்சனைகளை எடுத்து வைத்து அக்கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என அதிமுக முயன்று வருகிறது.
இதற்காக தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே பாஜகவுடன் கூட்டணியும் அமைத்தது. இனிமேல் பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என பேசிய எடப்பாடி பழனிச்சாமி மக்களவைத் தேர்தலில் வாங்கிய அடியால் மீண்டும் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.

அதிமுக கூட்டணி
கூடுதலாக தமிழக வெற்றிக்காக விஜய் வரவால் ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் பிரச்சனை எழுந்துள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் உள்ளிட்டவை பிரியும் என்பதால், அது அதிமுக கூட்டணிக்கு சிக்கலாக அமையும். மேலும் சிறுபான்மை வாக்குகள், இளைஞர் வாக்குகள், பெண்கள் வாக்குகள் என திமுகவின் 'கோர்' ஓட்டு வங்கி விஜய்க்கு செல்லலாம் எனவும் கணிக்கப்படுகிறது. விஜய்க்கு 20 சதவீதம் வரை ஆதரவு இருப்பதாக சொல்லப்படும் நிலையில் விஜய் தனித்து களமிறங்குவார் என தமிழக வெற்றி கழகத்தினர் கூறி வருகின்றனர்.
விஜய் கூட்டணி
சொன்னது போலவே கடந்த பொதுக்குழுவிலும் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் விஜய்க்கு சாதகமாக அமையவில்லை. இதனால் கூட்டணி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என விஜய் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. காரணம் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கலாம் என விஜய் தரப்பு முயன்றது. கடந்த காலங்களில் ராகுலுடன் நெருக்கமாக இருந்தவர் விஜய். சில காங்கிரஸ் தலைவர்களும் விஜய்க்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர். ஆனால் உண்மையான நிலவரம் வேறு.
காங்கிரஸ் அதிர்ச்சி
அதிக இடங்களில் போட்டியிட்ட போதெல்லாம் காங்கிரஸ் தோற்று இருக்கிறது. பிற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் தோற்றால் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படும். எனவே 2026 தேர்தலில் கடந்த முறை போல 25 தொகுதிகளில் போட்டுவிட்டு 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெற்றாலே போதும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் மனநிலை. செல்வபெருந்தகையும் அதனையே எதிரொலிக்கிறார். தலைமையிடமும் இதை எடுத்துச் சொல்லி நிலையில் ராகுல் காந்தியும் அதனை ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
ராகுல் விஜய் சந்திப்பு
மேலும் பீகார் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் காங்கிரஸின் செல்வாக்கு தேசிய அளவில் சரிந்து இருக்கும் நிலையில் விஜய்யும் அந்த கட்சியுடன் கூட்டணி சேரும் முடிவை தள்ளிப் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய் ராகுல் காந்தி சந்திப்பு தள்ளிப் போக இருப்பதாகச் சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அதே நேரத்தில் கூட்டணி குறித்த சில வாய்ப்புகளை மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டு இருக்கிறார் விஜய். அந்த வகையில் திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டணி சேரலாமா என விஜய் ஆய்வு நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஆளும் கட்சி கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறாது என்றாலும், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தனக்கு வரும் சிறுபான்மை வாக்குகள் குறைந்து விடும் என்பதையும் விஜய் கவனித்து வருகிறார்.
தவெக வியூகம்
மேலும் துணை முதல்வர் பதவி 50 சீட்டுகள் என அதிமுகவுடன் பேரம் பேச திட்டமிட்டு இருந்தாலும் பாஜக கூட்டணியில் இருப்பது மட்டுமே விஜய்க்கு நெருக்கடியாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆந்திர மாடலில் ஜெகன்மோகன் ரெட்டியை வீழ்த்த பாஜக -சந்திரபாபு நாயுடு -பவன் கல்யாண் சேர்ந்தது போல, தற்போது திமுகவை ஆட்சியில் இருந்த அகற்ற பாஜக- அதிமுக- விஜய் சேரலாம் என அவரது ஆதரவாளர்கள் பேசியதாக சொல்லப்படுகிறது. நாம் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம், அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் எனவும் சில நிர்வாகிகள் விஜயை உசுப்பேற்றிய நிலையில் அது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. எது எப்படி எனினும் இன்னும் சில நாட்களில் விஜய் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications