நாலாபக்கமும் தப்பு இருக்குங்க..விஜயை கைது பண்ணா வேற மாறி ஆயிடும்! தடாலடியாக பேசிய காங்கிரஸ் புள்ளி!
சென்னை: கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பலியான சம்பவத்தில், தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை விஜய் இதுவரை நேரில் சந்திக்காதது கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. இதற்கிடையே விஜயை கைது செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்து வரும் நிலையில், விஜய்யை கைது செய்வது, மோசமான பின் விளைவை ஏற்படுத்தும், அது தேவை இல்லாதது என கூறியுள்ளர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கேஎஸ் அழகிரி.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி இரவு கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த துயரச்சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் 110க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், துயரத்தில் ஆழ்ந்த குடும்பங்களை ஆறுதல் கூறும் பணியில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசல்
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக, கரூர் அருகே உள்ள ஏமூர் புதூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த அருக்காணி என்பவரின் வீட்டிற்கும் சென்று ஆறுதல் தெரிவித்தனர். அப்போது, தவெக நிர்வாகியின் செல்போனில் விஜய் நேரடியாக காணொலி அழைப்பில் இணைந்து, அருக்காணியின் மருமகன் சக்திவேலுடன் உரையாடினார். அந்த உரையாடலில் விஜய் மிகுந்த உணர்ச்சியுடன் பேசினார்.
விஜய் ஆறுதல்
"உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு என் மனதை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் உங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை. தற்போது சட்ட நடைமுறைகள் எனக்கு எதிராக இருப்பதால், உங்களை நேரில் வந்து சந்திக்க முடியவில்லை. ஆனால் விரைவில் உங்களை நேரில் சந்திப்பேன். உங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக இருந்து எப்போதும் உங்களுக்காக உதவி செய்ய இருப்பேன்," என விஜய் உறுதியளித்தார்.
விஜய் கைது
அதே நேரத்தில் விஜயின் இந்த செயல் கடும் விமர்சனத்தை பெற்றிருக்கிறது. சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் இதுவரை கரூர் செல்லாதது அவர் மீதான விமர்சனங்களை அதிகரித்திருக்கிறது. மேலும் விஜயை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.இந்நிலையில், விஜய்யை கைது செய்வது, மோசமான பின் விளைவை ஏற்படுத்தும், அது தேவை இல்லாதது என கூறியுள்ளர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கேஎஸ் அழகிரி. இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," காங்கிரஸ் எப்போதும் சுய மரியாதையுடன்தான் இருக்கும். பிற கட்சிக்கு புகழ்பாடாது. கரூர் விபத்தில் தவெக தலைவர் விஜய் மீது வழக்கு போடுவது தேவையில்லாதது.
கேஎஸ் அழகிரி
நான்குபுறங்களிலும் தவறு நடைபெற்றுள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார். எனவே, விஜய்யை கைது செய்வது, மோசமான பின் விளைவை ஏற்படுத்தும், அது தேவை இல்லாதது. கைது செய்யும் நிலைக்கு முதல்வர் செல்லமாட்டார். அதிக கூட்டம் கூடும் என தெரிந்தும், இடத்தை ஆட்சியர், எஸ்பி ஆகியோர் ஏன்? ஒதுக்கினார்கள். அவர்கள் மீதும் தவறு உள்ளது. அனுபவம் இல்லாதவர்கள் என்பதால், விஜய் கட்சியினர் கேட்டு கொண்டிருந்தாலும், அதிகாரிகள் ஒதுக்கி இருக்கக் கூடாது. கரூர் விபத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இல்லை. தாமதமாக வந்ததால்தான் விபத்து ஏற்பட்டது என கூறுவதை ஏற்க முடியாது. அதிக கூட்டமே விபத்துக்கு காரணம். கூட்டத்தை கட்டுப்படுத்த விஜய் கட்சியினருக்கும் தெரியவில்லை, காவல்துறைக்கும் தெரியவில்லை" என கூறியுள்ளார்.
கூட்டணி யூகங்கள்
கரூர் விவகாரத்தை வைத்து விஜயை தங்களுக்கு கூட்டணிக்கு இழுக்க பல்வேறு கட்சிகளும் முயன்று வருவதாக சொல்லப்படுகிறது. அதிமுக, பாஜக என இது தொடர்பாக பல்வேறு யூகங்கள் பரவி வருகிறது மேலும் காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கூட்டணி வைக்கலாம் என கூறப்படும் நிலையில் தற்போது இரண்டாம் கட்ட தலைவர்கள் விஜயை ஆதரித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications