வாட் ப்ரோ! இட்ஸ் வெரி ராங் ப்ரோ! விஜய்க்கு ஐடியா கொடுப்பது யார்? முதல் கோணல் முற்றிலும் கோணல்!
சென்னை: முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போலத் தான் அமைந்திருக்கிறது நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் பிரச்சாரம். குறிப்பிட்ட நேரத்திற்குப் பல மணி நேரங்கள் தாமதமாகச் சென்றது, தொழில்நுட்பக் கோளாறால் மைக் வேலை செய்யாதது, பெரம்பலூரில் பிரச்சாரம் ரத்து என அவரது முதல் நாள் பயணம் சொதப்பலாக அமைந்திருக்கிறது.
ஒரு கட்சித் தலைவர் பிரச்சாரம் செய்யும் முன் மைக்கைக்கூட நிர்வாகிகள் பரிசோதித்துப் பார்க்க மாட்டார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மக்களைச் சந்திக்க வருவதே இல்லை, இன்னும் சினிமா சூட்டிங் மனநிலையிலேயே இருக்கிறார் என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து கள அரசியலுக்குத் திரும்பப் போகிறார் விஜய், எனவும் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் செப்டம்பர் 13-ஆம் தேதியான நேற்றிலிருந்து டிசம்பர் 12ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது.

நடிகர் விஜய்
விஜய்க்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்து காரணமாகவே அவரால் பொதுவெளிக்கு வர முடியவில்லை எனவும், இல்லையென்றால் தினமும் கூட மக்களைச் சந்திப்பார் என தமிழக வெற்றிக் கழகத்தினர் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று தனது முதல் நாள் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினார் விஜய். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல நேற்றைய நிகழ்வுகள் அனைத்துமே திட்டமிட்டபடி நடக்கவில்லை. காலை 9 மணிக்குத் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த விஜய் காவல்துறையினர் அறிவுறுத்திய விதிமுறைகளைப் பின்பற்றாமல் பல விதிமீறல்களில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.
திருச்சி விஜய்
திருச்சி விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடக்கும் மரக்கடைப் பகுதிக்கு வரவே 5 மணி நேரத்திற்கு மேல் ஆனது. விஜயின் வாகனத்தை 5 வாகனங்கள் தான் பின்தொடர வேண்டும் என போலீசார் அறிவுறுத்திய நிலையில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் விஜய்யைப் பின்தொடர்ந்தனர். மேலும், செல்லும் வழியெல்லாம் சாலையை மறித்துக்கொண்டு தொண்டர்கள் நின்றதால் 8 கிலோமீட்டர் பகுதியைக் கடப்பதற்கு கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்கும் மேலானது. காலை 10:30 மணிக்கு பேசத் தொடங்கி 11 மணிக்கு விஜய் முடித்துவிட வேண்டும் என்ற காவல்துறையினரின் அறிவுறுத்தலும் காற்றில் பறக்கவிடப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு
நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கே கிட்டத்தட்ட 2 மணிக்குத்தான் விஜய் வந்தார். விஜய்யைப் பார்த்த உற்சாகத்தில் தொண்டர்கள் ஆரவாரம் செய்த நிலையில் சில நிமிடங்களில் விஜயின் பேச்சைக் கேட்க முடியாமல் போனது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் யூடியூப் லிங்க் அனைத்துத் தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மைக் வேலை செய்யவில்லை. இதனால் சுற்றியிருந்த தொண்டர்களுக்கும் விஜய் என்ன பேசுகிறார் எனக் கேட்கவில்லை.
தொண்டர்கள் அதிருப்தி
மேலும் லட்சக்கணக்கானோர் தொலைக்காட்சி மூலமும் யூடியூப் லிங்க் மூலமாக விஜயின் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருந்த நிலையில் அது முடியாமல் போனது. இந்த இடத்தில் சில விஷயங்களை மட்டும் சுருக்கமாகப் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் விஜய். இதனால் கொளுத்தும் வெயிலில் 5 மணி நேரத்திற்கு மேலாகக் காத்திருந்த தொண்டர்கள் கலையத் தொடங்கினர். திருச்சிக்குள் வருவதற்கு விஜய்க்கு ஆறு மணி நேரத்திற்கு மேல் தேவைப்பட்ட நிலையில் கிளம்பிச் செல்ல வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே பிடித்தது. விஜயின் பேச்சைக் கேட்க முடியவில்லை என பெரும்பாலான தொண்டர்கள் கலைந்து சென்றதுதான் அதற்குக் காரணம்.
ஏமாற்றம்
அதற்குப் பிறகு அரியலூர் சென்ற விஜய் வழக்கம் போல திமுக மீதான தனது அட்டாக்கை தொடுத்தார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர் அங்கிருந்து 9 மணிக்கு மேல் தான் புறப்பட நேர்ந்தது. இதற்கிடையே விஜய் வருகையை எதிர்பார்த்து நண்பகலில் இருந்து பெரம்பலூரில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டிருந்தனர். ஆனால் நள்ளிரவாகிவிட்டது என விஜய் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார். இதனால் மணிக்கணக்கில் காத்திருந்த பெரம்பலூர் தொண்டர்கள் விஜயின் பேச்சைக் கேட்க முடியாமல் கடும் அதிருப்தி அடைந்தனர்.
சொதப்பல் பிரச்சாரம்
ஒரு அரசியல் கட்சித் தலைவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்றால் என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படும் என அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் முறையான திட்டமிடல் இன்றி விஜயின் பயணம் முதல் நாளிலேயே அரைகுறையாக நடத்தி முடிக்கப்பட்டது. குறிப்பாக திருச்சியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விஜயின் பேச்சைக் கேட்க முடியவில்லை என்றாலும், ஒரு அரசியல் கட்சித் தலைவர் முதன்முறையாக மக்களை சந்திக்க வரும்போது ஒலிபெருக்கி கூட ஒழுங்காக வேலை செய்கிறதா? என்பதைக்கூட கவனிக்காமல் விட்டது யார் குற்றம்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல விஜயின் முதல் நாள் பிரச்சாரப் பயணம், முதல் கோணல் முற்றிலும் கோணலாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications